சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

உங்களையும் மக்கள் நம்புகின்றனர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளே!

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
கட்டுக்கடங்காத காட்டுத்தீயாக பரவி வரும் கொரோனாவின் இரண்டாம் அலை, தமிழகத்தின் ஒட்டுமொத்த மருத்துவ வசதி கட்டமைப்பையே நிலை குலையச் செய்திருக்கிறது. அதற்கு நாம் கொடுத்திருக்கும் விலை, இதுவரை ஏறத்தாழ, 15 ஆயிரம் மனித உயிர்கள்; இது நேற்று வரை பலியானோரின் கணக்கு.கடந்த பிப்ரவரியில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு, 600க்கும் குறைவாகவே இருந்தது. ஆனால்,
சிந்தனைக்களம்,ஊரடங்கு, அதிகாரிகள், ஐஏஎஸ், கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்,


கட்டுக்கடங்காத காட்டுத்தீயாக பரவி வரும் கொரோனாவின் இரண்டாம் அலை, தமிழகத்தின் ஒட்டுமொத்த மருத்துவ வசதி கட்டமைப்பையே நிலை குலையச் செய்திருக்கிறது. அதற்கு நாம் கொடுத்திருக்கும் விலை, இதுவரை ஏறத்தாழ, 15 ஆயிரம் மனித உயிர்கள்; இது நேற்று வரை பலியானோரின் கணக்கு.

கடந்த பிப்ரவரியில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு, 600க்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது நாள்தோறும் தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை, 30 ஆயிரத்தையும் கடந்துவிட்டது.

இந்நிலையில் தான், நேற்று முதல், வரும் 24ம் தேதி வரை 15 நாட்களுக்கு, தமிழகத்தில் முழு ஊரடங்கை அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். 'தொற்றின் சங்கிலி தொடர் அறுபட வேண்டுமெனில், 15 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டுமென மருத்துவர்களும், அதிகாரிகளும் அரசுக்கு ஆலோசனை தெரிவித்திருத்திருக்கிறார்கள்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதில், கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஊரடங்குக்கு உத்தரவிட, முதல்வருக்கு தற்போது அறிவுரை கூறிய மருத்துவர்களும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் இது நாள் வரையிலும் இங்கு தானே இருந்தனர்? தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நாளான கடந்த ஏப்., 6 முதல், ஓட்டு எண்ணிக்கை நாளான மே 2 வரை, என்ன செய்து கொண்டிருந்தனர்?இதே காலகட்டத்தில் தானே, தமிழகத்தை போன்றே தொற்று அதிகரித்து, மும்பையிலும், டில்லியிலும், 15 நாள் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்?

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து புதிய அரசு ஏற்கும் வரை, இங்கு அதிகாரிகள் ராஜ்ஜியம் தானே நடந்தது. அப்போது, இரவு நேர ஊரடங்கையும், ஞாயிறு ஊரடங்கையும் இதே அதிகாரிகள் தானே அறிவித்திருந்தனர்; அமல்படுத்தியிருந்தனர். 3,000 சதுரடிக்கு அதிக பரப்பு வணிக வளாகங்களையும், கோவில்களையும் மூட உத்தரவிட்ட அதிகாரிகள், மக்கள் நலனில் அக்கறை கொண்டு, அப்போதே முழு ஊரடங்கையும், 15 நாட்கள் அமல்படுத்தியிருக்கலாமே; அதை ஏன் செய்யவில்லை?


latest tamil news
கொரோனாவின் தாக்கம் மிக மோசமாக இருக்கும் என்பது தெரியாதா அல்லது நமக்கு ஏன் வம்பு என, ஒதுங்கிக் கொண்டனரா, துணிச்சலான முடிவெடுக்க தைரியம் இல்லையா, நிர்வாக திறமையில்லையா? அப்போதும் தலைமைச் செயலர் இருந்தாரே, சுகாதார துறை செயலர் இருந்தாரே, இன்னும் அரசு ஆலோசகர்கள் பலர் இருந்தனரே... ஊரடங்கிற்கு உத்தரவிடாதது ஏன்?

கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர, தொடர்புடைய பல துறை செயலர்களின் கூட்டம் நடத்தப்படவில்லை. மாநில அளவில் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்படவில்லை. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அந்தந்த மாவட்ட அளவில் கலெக்டர்கள் தலைமையில், தனியார் மருத்துவமனைகளை அழைத்து ஆலோசிக்கக்கூட இல்லை; ஏன்?இப்போது முழு ஊரடங்கை அரசு அமல்படுத்த ஆலோசனை தெரிவித்த அதிகாரிகள், தொற்று பரவும் முன்பே ஏன் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.புதிய அரசு அமையட்டும். முதல்வர் அல்லது அமைச்சருக்கு பின்னால் நின்று கொள்ளலாம் எனக் கருதினார்களா... பின்னால் பிரச்னை ஏதும் வந்தால், அவர்களே பார்த்து கொள்ளட்டும், நமக்கு ஏன் வம்பு என ஒதுங்கிக் கொண்டனரா...

ஊரடங்கால் ஏற்படும் நஷ்டத்துக்கு யார் பொறுப்பு என்று இருக்கலாம்; வருமானம் இழப்பு ஏற்படும் என இருந்திருக்கலாம் அல்லது செலவு செய்ய, பட்ஜெட் ஒதுக்க முடியாமல் இருக்கலாம். பட்ஜெட்டில் இல்லாத செலவு ஏற்பட்டால், என்ன செய்வது என்று முடிவு ஏற்படாமல் இருக்கலாம். மத்திய அரசிடம் அல்லது கவர்னரிடம் நிலமையை எடுத்து சொல்லி, வழி தேடி இருக்கலாம்.

எது எப்படியோ, பொறுப்பை தட்டிக்கழித்தது நியாயமல்ல. 'கடந்த ஆண்டில் மாநிலம் முழுதும் திறக்கப்பட்ட சித்தா மருத்துவ மையங்கள் மூடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் திறக்கப்படும்' என, இப்போது சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளாரே... இதற்கு முன்பே அதாவது, தங்களின் ராஜ்ஜியம் நடந்தபோதே, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இதை திறந்திருக்கலாமே; தடுத்தது யார்? மக்கள் இறப்பதை தடுக்க ஊரடங்கு ஒன்றே தீர்வு என்று தெரிந்த பின், எப்படி சும்மா இருக்கலாம்?

அதிகாரிகளின் அலட்சியத்தில் எண்ணற்ற குழந்தைகள், இளைஞர்களின் உயிர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளன. மருத்துவர்கள், அரசுத்துறை உயரதிகாரிகளும் கூட உயிரிழந்துள்ளனர். எந்த அரசு வந்தாலும், போனாலும் இந்நாட்டை உண்மையாக ஆள்பவர்கள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தான் என, மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதை வீணாக்கலாமா? அதிகாரிகளே, இனியாவது மனச்சாட்சியுடன் செயலாற்றுங்கள்!

- நவீன துர்வாசர்-

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-மே-202117:38:07 IST Report Abuse
சந்திரசேகர் இப்போது உள்ள ஊரடங்கினால் பிரயோசனம் இல்லை.மக்கள் எப்போதும் போல் வெளியே வருகிறார்கள். ஊரடங்கு என்றால் ஊரே அடங்கி இருக்கனும். மருத்துவ உதவியை தவிர வேற எதற்காகவும் மக்கள் வெளியே வர அனுமதிக்க கூடாது. அதற்கு பணமாக கொடுக்காமல் 1மாசத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் ரேஷன் கடையில் கொடுத்து விட்டு 1மாசம் ஊரடங்கு விதிக்க வேண்டும். இந்த காலத்தில் நடமாடும் மருத்துவ உதவி மூலம் தடுப்பூசி மற்றும் சில பல நோய்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யலாம். மாவட்ட வாரியாக மருத்துவ உதவி போன் நம்பர் அறிமுகப்படுத்தலாம்.இதற்காக எல்லா அரசு வாகனத்தையும் பயன்படுத்தலாம்.ஆனால் இதற்கு அரசாங்க ஊழியர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். அரசாங்க ஊழியர்களுக்கு உழைப்பு என்றால் கசக்குமே.லஞ்சம் கொஞ்சம் கொடுத்தால் ஏதாவது செய்வார்கள். எல்லா அரசாங்க ஊழியர்களையும் சொல்ல வில்லை. யாரெல்லாம் லஞ்சம் வாங்குகிறார்களோ அவர்களுக்கு பொருந்தும்
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
11-மே-202114:39:35 IST Report Abuse
a natanasabapathy அரசு அதிகாரிகள் எப்போதுமே அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளே அவர்களால் சுதந்திரமாக செயல்பட இயலாது
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
11-மே-202114:20:02 IST Report Abuse
GMM எந்த அரசு வந்தாலும் உண்மையாக இந்த நாட்டை நிர்வகிப்பவர்கள் IAS அதிகாரிகள். சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது IPS அதிகாரிகள். இது திராவிட இயக்கம் அரசியல் அதிகாரம் பெரும் முன்பு வரை உண்மைதான். அதன் பின் 5 ஆண்டுகள் அரசியல்வாதிகள் கட்டளை தான் வேத வாக்கு. எந்த ஒரு கொள்கை முடிவுக்கும் வளைந்து, நெளிந்து வேலை செய்வார்கள். நோய், புயல், யுத்தம் எது வந்தாலும் அரசியல்வாதிகள் இன்றி எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள். நில தாவா, குடும்ப விவாகரத்து போன்ற குடும்ப பிரச்சனை தீர்க்க நேரம் ஒதுக்க மாட்டார்கள். ஆனால், அமைச்சர்கள் பின் சுற்றுவார்கள். கதவை திறந்து, கைகட்டி நின்று தேவை இல்லாத கோப்பில் கையெழுத்தை பெறுவார்கள்? குற்றச்சாட்டு இன்றி பணி இடமாற்றம் செய்தால் உடனடியாக பொறுப்பை ஏற்பார்கள். தன் கீழ் வேலை செய்யும் அலுவலரை அடக்கி வைத்து இருப்பார்கள். IAS அதிகாரிகளை மக்கள் நம்பி ஏமாந்து வாழ பழகி கொள்ள வேண்டும். சைக்கிள் ஓட்டியவர் விமானத்தில் பறக்க இவர்கள் முக்கிய காரணம். சிலர் விதி விலக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X