சென்னை: கட்சி பாகுபாடின்றி எம்எல்ஏ.,க்கள் அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்து, இயல்பு வாழ்க்கை திரும்பிட இணைந்து நிற்போம் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: 16வது சட்டசபையில் உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட எம்எல்ஏ.,க்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். கொரோனா தொற்றுப் பேரிடரிலிருந்து மக்களை பாதுகாப்பதே அரசின் முதன்மையான பணி. நிலைமையை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு முழுமையான அர்ப்பணிப்புடன் போர்க்கால அடிப்படையில் செயலாற்றி வருகிறது. அரசு அதிகாரிகள், முன்களப் பணியாளர்கள், போலீசார் என பல தரப்பினரும் தன்னலம் கருதாமல் செயலாற்றி வருகின்றனர். சமூக நல ஆர்வலர்களும், தொழில் நிறுவனத்தாரும் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளும் உதவிக்கரம் அளித்து வருகிறார்கள்.

வெவ்வேறு கட்சி சார்ந்தவர்களாக களம் கண்டு வெற்றி பெற்றிருந்தாலும், மக்கள் நலன் காப்பதில் ஒருமித்த சிந்தனையுடன் கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளது. எனவே எம்எல்ஏ.,க்கள் அனைவரும் அவரவர் தொகுதியில் மக்களுக்கு உதவிகளை மேற்கொண்டு அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அரசு உடனடி நடவடிக்கையினை, உறுதியான செயல்பாட்டை மேற்கொள்ளும் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன். தமிழகத்தை மீட்பதற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தோழமைக் கட்சி என்பதைக் கடந்து மக்களின் பிரதிநிதிகளாக செயலாற்றுவோம். மக்கள் இயல்பு வாழ்க்கை விரைந்து திரும்பிட நாம் அனைவரும் இணைந்து நிற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE