புதுடில்லி :'தொடர்ந்து இரண்டாவது நாளாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதையடுத்து கொரோனா இரண்டாவது அலை பரவல் குறைவதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ளன' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கொரோனா முதல் அலையை வெற்றிகரமாக சந்தித்த இந்தியா, இரண்டாவது அலையை எதிர்த்து தீவிரமாக போராடிவருகிறது. பிப்., இறுதியில் துவங்கிய இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த மாதம் மிகவும் அதிகரித்தது.தினமும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் பாதிப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்தை கடந்தது. பலியானவர்களின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வந்தது. தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழகம் உட்பட 16 மாநிலங்களில் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து நாட்களாக தினசரி பாதிப்பு நான்கு லட்சத்துக்கு மேல் அதிகரித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 3.66 லட்சமாக குறைந்தது. நேற்று, 3.29 லட்சமாக குறைந்தது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:இரண்டாவது நாளாக தொற்று பாதிப்பு குறைந்து உள்ளது; இது கொரோனா இரண்டாவது அலை பலவீனமடைவதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகளாக தென்படுகின்றன. மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், டில்லி, சத்தீஸ்கர் உட்பட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறையத் துவங்கியுள்ளது.
எனினும் கர்நாடகா, கேரளா, தமிழகம், மேற்கு வங்கம், பஞ்சாப் உட்பட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில், 3.29 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 3.56 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரை விட, குணமடைந்தோர் எண்ணிக்கை நேற்று அதிகரித்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கூடுதல் தடுப்பூசி
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:மாநிலங்களுக்கு மத்திய அரசு இதுவரை 18 கோடியே, மூன்று ஆயிரத்து 160 'டோஸ்' தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியுள்ளது. இதில் வீணடிக்கப்பட்டது உட்பட, 17 கோடியே ஒன்பது லட்சத்து 71 ஆயிரத்து 429 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களிடம் இப்போது 90 லட்சத்துக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இன்னும் மூன்று நாட்களுக்குள் கூடுதலாக 7. 29 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன. எந்த மாநிலத்திலும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE