பாட்னா:பீஹார் - உத்தர பிரதேச எல்லையில் கங்கை ஆற்றில் 71 கொரோனா நோயாளிகளின் உடல்கள் மிதந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, இரு மாநில அரசுகளுக்கு இடையே சர்ச்சை எழுந்துள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.பீஹார் - உத்தர பிரதேச எல்லையில் அமைந்துள்ள, புக்சார் மாவட்டத்தின் சவுசா கிராமத்தின் வழியே ஓடும் கங்கை ஆற்றின் கரையோரம், நேற்று முன்தினம் அழுகிய நிலையில் உடல்கள் ஒதுங்கின. கொரோனா நோயாளிகளின் உடல்களை எரிக்க அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் உடல்களை உறவினர்கள் கங்கை ஆற்றில் வீசியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மட்டும் 71 உடல்கள் ஆற்றில் மிதந்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.அந்த உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இறந்தவர்களை அடையாளம் காண, மரபணு சோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
''உடல்களை எரிக்க பணம் இல்லாததால், கங்கை ஆற்றில் வீசப்பட்டதாக கூறுப்படுவதில் உண்மையில்லை,'' என, புக்சார் மாவட்ட கலெக்டர் அமன் சமீர் தெரிவித்தார்.இது குறித்து பீஹாரை சேர்ந்த, பா.ஜ., - எம்.பி., ஜனார்தன் சிங் சிக்ரிவால், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:பீஹாரின் சரண் மற்றும் உ.பி.,யின் பாலியா மாவட்ட எல்லையில் உள்ள ஜெய்பிரபா சேது பாலத்தின் மீதிருந்து சில ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உடல்களை கங்கை ஆற்றில் வீசியுள்ளனர். இரு மாநிலங்களைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களும் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இந்த சம்பவம், பீஹார் - உ.பி., அரசுகள் இடையே சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது. பீஹாரைச் சேர்ந்த அமைச்சர் சஞ்சய் குமார் ஜா கூறியதாவது:இந்த சம்பவம் குறித்து முதல்வர் நிதிஷ்குமார் வேதனை தெரிவித்துள்ளார். கங்கையில் மிதந்து வந்த உடல்கள் நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு முன் ஆற்றில் வீசப்பட்டதாக உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளது.
உ.பி.,யில் இருந்து வீசப்பட்ட உடல்கள், பீஹார் வரை ஆற்றில் மிதந்து வந்துள்ளன. இரு மாநில எல்லையில் வலை கட்டப்பட்டு உடல்களை மீட்டு வருகிறோம். இது தொடர்பாக விழிப்புடன் செயல்படும்படி உ.பி., அரசுக்கும், எங்கள் மாவட்ட நிர்வாகத்துக்கும் அறிவுத்தியுள்ளோம். இறந்தவர்களின் உடல்களுக்கு மட்டுமின்றி, கங்கை ஆற்றையும் நாம் மதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பீஹார் அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் இந்த பேச்சு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, உ.பி., மாநில பா.ஜ., அரசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE