திருவனந்தபுரம்:கேரள அரசியல் மற்றும் அரசுகளில் அசைக்க முடியாதவராக திகழ்ந்த, மூத்த அரசியல் தலைவர் 'இரும்பு பெண்' கே.ஆர்.கவுரி அம்மா, 102, வயது மூப்பு பிரச்னைகளால் உயிரிழந்தார்.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. ஆலப்புழா மாவட்டம் செர்தாலாவைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவரான கவுரி அம்மா, உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
பெண் அமைச்சர்
வயது மூப்பு பிரச்னை களால் அவர் நேற்று உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 1919ல் பிறந்த கவுரி அம்மா கேரளாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்வதற்கு காரணமான முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார்.திருவாங்கூர் - கொச்சி சட்டசபைக்கு 1952, 1954ல் தேர்ந்தெடுக்கப் பட்டார்.அதன்பின் கேரள சட்டசபைக்கு 1957, 1960, 1967, 1970, 1982, 1987, 1991 மற்றும் 2001 தேர்தலில் வென்றார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் கே.எம்.மாணிக்கு பின், நீண்டகாலம் சட்டசபை உறுப்பினராக இருந்த பெருமையை பெற்றுள்ளார், கவுரி அம்மா.கேரளாவின் முதல் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரே பெண் அமைச்சராகவும் இருந்தார். கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்த, 1957, 1967, 1980 மற்றும் 1987ல், இவர் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
கட்சியில் இருந்து வெளியேறி, ஜே.எஸ்.எஸ்., எனப்படும் ஜனாதி பத்திய சம்ரக் ஷண சமிதி என்ற கட்சியை துவக்கினார். காங்., தலைமையிலான கூட்டணியில் 2001 மற்றும் 2006ல் அமைச்சராக இருந்துள்ளார்.
நேர்மை - கடுமை
கேரளாவின் முதல் அமைச்சரவையில் உடன் பணியாற்றிய டி.வி.தாமஸை திருமணம் செய்தார்.கட்சி உடைந்தபோது, கவுரி அம்மா, மார்க்சிஸ்ட் கட்சியிலும், அவரது கணவர் இந்திய கம்யூனிஸ்டிலும் இணைந்தனர்.நிர்வாகத்தில் மிகவும் நேர்மையாகவும், கடுமையாகவும் இருந்ததால், இரும்பு பெண் என அவர் அழைக்கப்பட்டார்.அவரது மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE