இந்த உலகில் தடம் பார்த்து நடப்பவர்கள் மனிதர்கள், தடம் பதித்து நடப்பவர்கள் மாமனிதர்கள். ஆனால் தடம்பதித்து நடப்பது அவ்வளவு எளிதல்ல என்றாலும் சாத்தியமே... வெற்றி பெற்ற மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றில் எல்லோருமே கடைசி பக்கத்தை மட்டுமே படிக்க விரும்புகிறோம், அதற்கு முந்தைய பக்கங்களை படிப்பது இல்லை, அதைப்பற்றி உணர்வதும் இல்லை.
எப்பொழுதுமே ஒருவனுடைய வளர்ச்சியை மட்டுமே பார்க்காதீர்கள், அவனது முயற்சியையும் பாருங்கள்.வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயம் ஊக்கம். எந்த சூழ்நிலையிலும் ஊக்கத்தை மட்டும் நாம் இழந்துவிடக்கூடாதுயார் நம்மை மிதித்தாலும் மனம் தளராமல் முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற பாடத்தை நமக்கு கற்றுக்கொடுத்த முதல் குரு சைக்கிள் தான்.நாம் எடுக்கின்ற முயற்சிக்கான பலன்கள் உடனே கிடைக்கவில்லை என்பதற்காக மனம் தளரக் கூடாது. கடமையை சரிவர செய்து கொண்டே வர வேண்டும்.நம்முடைய எண்ணங்களை நிறைவேற்ற நினைக்கும் முன்னே சந்திக்க வேண்டிய இடையூறுகள் ஏராளம் இருக்கும்.போட்டிகளுடன், பொறாமையும் இணைந்து போர் தொடுக்கும்.
மனம் தளரக்கூடாது :
எதிர்ப்புகளும் துரோகங்களும் நம்மை வலுவிழக்கச் செய்ய வாய்ப்பு தேடும்.இதையெல்லாம் கண்டு மனம் தளரக்கூடாது. எடுத்துக்கொண்ட முயற்சியில் இருந்து பின் வாங்கக்கூடாது.ஏனெனில் யானைகள் வாழ்கின்ற பூமியில் தான் எறும்புகளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. சிறுத்தைகள் சீறுகின்ற காட்டில்தான் புள்ளி மான்கள் துள்ளி ஓடுகின்றன. பூனைகள் வாழ்கின்றவீட்டில் தான் எலிகள் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கின்றன.பாம்புகள் படமெடுக்கின்றவயலுக்குள் தான் தவளைகள் தத்திக்கொண்டிருக்கின்றன.எனவே இந்த உலக வாழ்க்கை என்பது ஓடி ஒளிவதற்கல்ல,போராடி ஜெயிப்பதற்கே...பொதுவாக நம் வாழ்க்கையில் அதிக நேரம் இருக்காது அதிர்ஷ்டம்.நீண்ட தூரம் வராது சிபாரிசு. எல்லா நேரமும் கிடைக்காது உதவி.ஆனால் எப்பொழுதுமே ஜெயிக்கும் தன்னம்பிக்கை.எத்தனையோ சோதனைகளை சந்தித்தாலும் மனம் தளராமல் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அடிக்கடி சோதிக்கப்படுவதால் தங்கம் தகரமாகி விடாது.ஒரு பொழுதும் சோதிக்க படாமல் இருப்பதால் தகரம் தங்கம் ஆகிவிடாது.தரத்தில் கூடிய தங்கம்தான் அடிக்கடி சோதிக்கப்படும் என்பதை நாம் உணரவேண்டும்.பொதுவாக மரம் செடியாக இருக்கும் பொழுது ஆடுகள் அதனை கடிக்கும். அதே செடி மரமானதும்கடித்த ஆடுகள் அனைத்தும் மரத்தின் நிழலில் படுத்து உறங்கும்.இதன் பெயர்தான் வெற்றி.வெற்றியை நோக்கிப் பற...பறக்க முடியாவிட்டால் ஓடு...ஓட முடியாவிட்டால் நட....நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல் ... ஆனால் எப்படியாவது நகர்ந்துகொண்டே இரு...மழை வருவது விதி, அது இறைவன் கையில் இருக்கிறது.ஆனால் குடை பிடிப்பது முயற்சி. அது நம் கையில்தான் இருக்கிறது. முயற்சியும், பயிற்சியும் நம்மை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும்.
அங்கீகாரம்
விதை விதைத்தவுடன் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது.செய்கின்ற கடமையை சரிவரச் செய்தால் வெற்றி நிச்சயம். செய்கின்ற செயலை கடமைக்காக செய்தால் வெற்றியும் நம்மை விட்டு விலகி நிற்கும்.நம்மில் எத்தனையோ பேருக்கு நாம் செய்கின்ற செயலுக்கு அடுத்தவர்களின் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற கவலை இருக்கும்.எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் மற்றவர்கள் நம்மை கண்டு கொள்ளவே இல்லை என்ற மன வருத்தமும் இருக்கும். இவற்றையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் நம் கடமையை சரிவர செய்து வந்தால் நாளைய நாட்கள் அனைத்தும் நம் வசமாகும் .சில சூழ்நிலைகளில் நியாயமாக நமக்கு கிடைக்க வேண்டிய பெயர், புகழ், பாராட்டு இவை அனைத்தும் வேறு நபர்களுக்கு கிடைக்கிறது என்று மனம் வாடக்கூடாது. ஒரு கட்டடம் கட்டும் போது சவுக்கு மரத்தை முக்கியமாக வைத்து சாரம் கட்டி குறுக்கே பலகைகள் போட்டு அதன் மேல பல சித்தாள்கள் நின்று வேலை பார்த்து கட்டடம் உயர்ந்துகொண்டே போகும் .அதன்பின்பு அந்த கட்டட வேலை முடிந்த பின் கட்டடத்துக்கு வர்ணஜாலம் பூசிய பின்னர் ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டிடம் கட்டப்பட்டு முடிந்தபின் கிரகப் பிரவேசம் செய்வதற்கு தயாராகிவிடும்.இதுவரையிலும் எந்த சவுக்கு மரம் கட்டடம் கட்டுவதற்கு முக்கியமாக இருந்ததோ, அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாத இடத்தில் வீட்டின் பின்புறம் மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கோ முளைத்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரகப்பிரவேசம் நடத்தி வரவேற்பார்கள்.
மூன்று நாள் வாழ்க்கை
அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். ஆனால் அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும்.அதன்பின்பு ஆடுகள் மேயும், குழந்தைகள் பிய்த்து எடுப்பார்கள், பின்பு குப்பை தொட்டியில் போய்ச் சேரும்.ஆனால் இதுவரையிலும் வீட்டின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த சவுக்கு மரம், அடுத்த கட்டடத்தை கட்டுவதற்கு தயாராக இருக்கும்.நாமும் சவுக்கு மரமாகத்தான் வாழ வேண்டுமே தவிர, வாழை மரமாக அல்ல.அடுத்தவர்கள் அங்கீகரிக்காமல் குறை கூறுகிறார்கள் என்று கவலைப்படக் கூடாது. முன்னேறிச் சென்று திரும்பி பாருங்கள் குறை கூறியவர்கள் அதே இடத்தில் வேறு ஒரு நபரை குறை கூறிக் கொண்டிருப்பார்கள்.சூழ்நிலைகளை காரணம் காட்டி பின் வாங்காதீர்கள். சூழ்நிலையை உருவாக்கி வெற்றி காணுங்கள்.நம்மை மதிப்பவர்களுக்கு மலராகவும், மிதிப்பவர்களுக்கு முள்ளாகவும் இருக்க நினைத்தால் ஊக்கம் ஒன்றே நம்மை வழிநடத்தும்.
நாமாக இருக்க வேண்டும்
உலகிலுள்ள தலைவர்கள் எல்லோருமே ஊக்கம் ஒன்றையே ஊன்று கோலாகக் கொண்டு முன்னேறியவர்கள். தங்களுக்கு ஏற்பட்ட அவமானங்களை கூட வெகுமானங்களாய்மாற்றியதால் தான் அவர்கள் தலைவரானார்கள்.வெற்றி என்பது நம் நிழல் போல, நாம் அதைத் தேடிப் போக வேண்டியதில்லை. வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது அதுவும் நம் கூடவே வந்துவிடும்.நம்மை புதைக்க நினைப்பவர்களுக்கு முன்னால், நாம் முளைத்துக் காட்ட வேண்டும்.வஞ்சித்துக் கொண்டு வாழ்பவர்கள் மத்தியில், வளர்ந்து காட்ட வேண்டும்.குறை கூறிக்கொண்டு கூச்சலிடுபவர்களுக்கு இடையில் நாம் குறைவில்லாமல் வாழ்ந்து காட்ட வேண்டும்.மற்றவர்கள் எப்படி இருந்தாலும், நாம் நாமாகவே இருக்க வேண்டும்.-எஸ்.ராஜசேகரன், தலைமையாசிரியர்ஹிந்து மேல்நிலைப்பள்ளிவத்திராயிருப்பு94429 84083
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE