பொது செய்தி

தமிழ்நாடு

என்ன பாவம் செய்தது ராமேஸ்வரம்: கோயிலுக்குள்ளையே சிகரெட், மது

Updated : ஜூலை 18, 2011 | Added : ஜூலை 16, 2011 | கருத்துகள் (35)
Share
Advertisement
கடல்தாண்டி சென்று தீர்த்தமாடி, பாவங்களை மூழ்கடித்துவிட்டு, புதுமனிதனாய் மாறும் இடம் ராமேஸ்வரம். இந்துக்கள் இந்த மண்ணை தொட்டாலே மோட்சம் உண்டு என்பது ஐதீகம்.இதனால்தான், வடமாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக இங்கே வந்து தரிசிக்கின்றனர். புண்ணியம் தரும் இந்த புனிதத்தலம் இன்று பல வழிகளிலும் "பாவமாக' காட்சியளிக்கிறது. "இக்கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த
என்ன பாவம் செய்தது புண்ணியம் தரும் ராமேஸ்வரம்

கடல்தாண்டி சென்று தீர்த்தமாடி, பாவங்களை மூழ்கடித்துவிட்டு, புதுமனிதனாய் மாறும் இடம் ராமேஸ்வரம். இந்துக்கள் இந்த மண்ணை தொட்டாலே மோட்சம் உண்டு என்பது ஐதீகம்.
இதனால்தான், வடமாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக இங்கே வந்து தரிசிக்கின்றனர். புண்ணியம் தரும் இந்த புனிதத்தலம் இன்று பல வழிகளிலும் "பாவமாக' காட்சியளிக்கிறது. "இக்கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்; இதுதொடர்பாக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என தமிழக அரசிற்குசென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
"வறட்சி பூமி' என்று அழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தின் தனிச்சிறப்பாய் இருக்கும் ராமேஸ்வரத்தை மேம்படுத்த என்ன வழி?முதலில் அக்னி தீர்த்தத்தில் குளித்துவிட்டு, கோயிலுக்கு செல்லும் சுவாமி சன்னதி வழியின் இருபுறமும் வாகன ஆக்கிரமிப்புகள், பிச்சைக்காரர்கள் அதிகம். கோயில் காணிக்கை மாடுகள் போட்டி போட்டுக் கொண்டு பக்தர்களோடு வலம் வருகின்றன. கடைக்காரர்கள் ரோட்டை மறித்து வியாபாரம் செய்கின்றனர். கோயில் வரை செல்லும் வாகனங்கள் முட்டி மோதி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன.
கோயிலுக்குள் சிகரெட், மது : ஸ்டேஷனில் மூன்றில் ஒரு பங்கு போலீசார்தான் இருப்பதால், கோயிலுக்குள்ளும் இவர்கள் வருவதில்லை. இதனால் இரண்டாம், மூன்றாம் பிரகார தூண்களில், பொறுப்பற்றவர்கள் காதல் சின்னங்களை வரைகின்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மதுகுடித்தும், சிகரெட் புகைத்தும் கோயில் புனிதத் தன்மையை கெடுத்து, பாவம் தேடுகின்றனர். 1975 ல் கும்பாபிஷேகத்திற்கு முன், 240 பணியாளர்கள் இருந்தனர். அன்றைய கூட்டத்திற்கு இந்த எண்ணிக்கை சரி. ஆனால் இன்று வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வெறும் 130 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். 30 தனியார் ஊழியர்களை கோயில் நிர்வாகம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இவர்களில் பலர் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை.
பாதுகாப்பு கேள்விக்குறி? : கோயிலில் உள்ள 22 கிணறுகளில் தீர்த்தமாடினால், பிரச்னைகள் தீரும் என்ற நிலைமாறி, வழுக்கி விழுந்து, அடிபட்டு, அதனால் புதுப்பிரச்னை உருவாகும் சூழல் உள்ளது. தீர்த்தமாட நபர் ஒருவருக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதற்கேற்ப பராமரிப்பு இல்லை. தீர்த்த எண் 2,3,4க்கு செல்லும் வழியில் பாசிபடர்ந்தும், அழுக்கு நீர் தேங்கியும் இருக்கிறது. சக்கர தீர்த்தத்தில்(எண் 6) குளித்துவிட்டு திரும்பும்போது துருப்பிடித்த கம்பிகள் குத்த தயாராக இருக்கும். பெரும்பாலான தீர்த்த தொட்டிகளில் பழைய மினரல் வாட்டர் கேன்களும், துருப்பிடித்த இரும்பு வாளிகளும் கிடக்கின்றன. பல தீர்த்த தொட்டிகளுக்கு முன், கற்கள் பெயர்ந்து, பக்தர்களின் கால்களை பதம்பார்க்கிறது. தீர்த்த நீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்ட சாக்கடையை சுத்தம் செய்வது இல்லை.
இருள் மண்டபம்: இரண்டாம் பிரகாரம் பழைய மண்டபம் இருள்சூழ்ந்து இருப்பதால், ஈரத்துணியுடன் செல்லும் பெண் பக்தர்கள் "கவனமாக' செல்ல வேண்டும். இம்மண்டபத்தை தாண்டியதும், அங்குள்ள 108 லிங்கங்களில் "வினோத், அகிலா, சிவகுமார்...' என "காதல் கொண்ட பக்தர்கள்' புது பெயர்களை சூட்டி இருப்பது கொடுமை.
பக்தர்கள் பாவம் : தெப்பக்குளமான சேதுமாதவ தீர்த்தம்(எண் 7), கழிவுகள் தேங்கும் இடமாக உள்ளது. இதை சுத்தப்படுத்தி, படிகளில் வளர்ந்துள்ள மரச்செடிகளை அகற்றி, பக்தர்கள் இளைப்பாற செய்யலாம்.கோயிலுக்குள் 22 தீர்த்தங்களிலும் நீராடினால்தான் பாவம் தீரும் என்பது ஐதீகம். ஆனால், கூட்டமான நேரத்தில், சில தீர்த்தங்களை மூடிவிடுவதால், பாதி தீர்த்தங்களில் நீராடி, பக்தர்கள் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது பாவமாக இருக்கிறது. வருமானத்தில் மட்டுமே குறியாக இருக்காமல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து, கோயில் நிர்வாகம் புண்ணியம் தேடிக்கொள்ள வேண்டும் என்பதே எல்லோருடைய வேண்டுதல்.
சுற்றுலா வசதி தேவை : ராமேஸ்வரம் நகரைச் சுற்றி கோதண்டராமர் கோயில், ராமர் பாதம், லட்சுமண தீர்த்தம், கந்தமான பர்வதம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை போன்ற பகுதிகளுக்கு பக்தர்கள் செல்ல, தனியார் வாகன ஓட்டுநர்கள் ரூ.1200 வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் தனுஷ்கோடி போன்ற இடங்களுக்கு செல்வதை பக்தர்கள் தவிர்க்கின்றனர். இதன் காரணமாக, புராண, வரலாற்று இடங்களை பார்க்க முடிவதில்லை. இதை தவிர்க்க, கோயில் நிர்வாகம் அல்லது சுற்றுலாத் துறை சார்பில் கட்டணத்துடன் கூடிய வாகன வசதி செய்யலாம். மேலும் கிடப்பில் போடப்பட்ட நான்குவழிச்சாலை திட்டத்தையும், கோயிலைச் சுற்றி மீன்பிடி துறைமுகம் வரை கடற்கரை ரோடு திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்.
"தினமலர்' சொன்னது; கோர்ட் ஆதாரமாக எடுத்தது: கோயில் பள்ளியறை சுவாமி முதல் உற்சவமூர்த்தி சிலைகள் வரை சேதமடைந்த விபரம், கடந்த 2007 அக்.,31ல், தினமலர் இதழில் வெளியானது. சிதைந்த சிலைகளுக்கு பூஜை செய்வது நல்லது அல்ல. சிதைவடைந்த சிலைகளை அதே உலோகங்கள் கொண்டு செப்பனிட வேண்டும் என மூல ஆகமத்தில் கூறப்பட்டுள்ளதும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்பின்பும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனிடையே, ராமேஸ்வரத்தை சேர்ந்த பட்ஷி சிவராஜன், 2010 ல் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, தினமலர் நாளிதழில் வந்த செய்தியையும் ஆதாரமாக எடுத்துக்கொண்ட கோர்ட், தற்போது இச்சிலைகளை செப்பனிட உத்தரவிட்டுள்ளது.
வீணான பேட்டரி கார்கள்: சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், ஒலிமாசை தடுக்கவும், ரதவீதிகளில் வாகனங்களுக்கு தடைவிதித்து, பக்தர்களின் வசதிக்காக பேட்டரி கார்களை இயக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.26 லட்சத்தில் ஆறு பேட்டரி கார்கள் வாங்கப்பட்டு, வீணாக கிடக்கின்றன. திருவிழா காலங்களில் பயன்படுத்துவதற்காக வாங்கிய நடமாடும் கழிப்பறைகள் இன்றும் அக்னி தீர்த்தக்கரை ஓரத்தில் "காற்று' வாங்கி வீணாகிறது.
ஆற்று படித்துறையான அக்னி தீர்த்தக்கரை:மண்தரை வழியாக அக்னி தீர்த்தக்கடலுக்கு சென்று, பாவமுழுக்கு போட்டு, அங்கிருந்தே கோபுர தரிசனம் செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது. ஆனால் தீர்த்தக்கரையில் ஆர்ச், மண்டபத்துடன்கூடிய 13 படிகளை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் டேவுராம்ஜி மகராஜ் என்ற சாமியார் கட்டியிருக்கிறார். தீர்த்தக்கரை ஓரத்தில் அமர்ந்து, லிங்க மண் பிடித்து, மூதாதையருக்கு காரியம் செய்த காலம் மாறி, இன்று சுகாதாரக்கேடான மண்டபத்திற்குள் அமர்ந்து, திவசம் கொடுக்க வேண்டி உள்ளது. பாசி படர்ந்த படிகளில் இறங்கி கடலுக்குள் செல்வதற்கு முன்பே, வழுக்கி விழுகின்றனர். சமீபத்தில் பக்தர் ஒருவர் வழுக்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். கடற்கரையில் படித்துறை அமைக்க தடை இருந்தும், இங்கே அமைத்தது ராமநாதசுவாமிக்கே வெளிச்சம். படித்துறை கட்டப்பட்டுள்ளதால், தீர்த்தவாரி உற்சவத்தின்போது, பக்தர்கள் ஒரேநேரத்தில் கடலில் இருந்து சுவாமியை தரிசிக்க முடிவதில்லை. ராமேஸ்வரத்தில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால், கழிவுகள் எல்லாம், தீர்த்தக்கரை ஓர தொட்டிகளில் சேகரித்து, சில மீட்டர் அப்பால் கடலுக்குள்"கலப்படம்' செய்வதால், சுற்றுச் சூழல் பாதிக்கிறது.
அவசர தேவைகள் :* ராமேஸ்வரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு அமலில் உள்ளது. இதை அறியாத வெளியூர் பக்தர்கள், பிளாஸ்டிக் பைகளுடன் வந்து, சுற்றுச்சூழலை பாதிக்க செய்கின்றனர். இதை தவிர்க்க ராமேஸ்வரம் வரும் பஸ்களில், ரயில்களில் இதற்கான அறிவிப்புகளை வைக்கலாம். சுற்றுலா வாகன டிரைவர்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.* அனைத்து பிரகாரங்களிலும் விளக்கு வசதி மற்றும் கண்காணிப்பு தேவை.* வடக்கு கோபுர பகுதியில், திறந்தவெளி நந்தவன கலையரங்கில் மண்டபம் கட்டினால், பக்தர்கள் தங்கிச் செல்ல முடியும். * அக்னி தீர்த்தக்கரை படித்துறைகளை அகற்ற வேண்டும். * கோயிலுக்குள் தீர்த்தமாடும் பகுதிகளில் படர்ந்துள்ள பாசிகளை அகற்ற வேண்டும்.* சுவாமி சன்னதிக்குள் போட்டி போட்டுக்கொண்டு கோயில் நிர்வாகமும், தனியாரும் வைத்துள்ள பிரசாத ஸ்டால்கள் வெளிப்பிரகாரத்திற்கு இடமாற்ற வேண்டும்.* பிரசாதங்கள் தரமற்றவையாக உள்ளது. தேவைக்கேற்ப தினமும் தயாரித்தால், பக்தர்களுக்கு வயிறு உபாதைகள் ஏற்படாது.* கோயிலைச் சுற்றியுள்ள இடங்களில் "பார்க்கிங்கை' போலீஸ் அனுமதிக்கக்கூடாது.- ஜி.வி.ரமேஷ் குமார் -- கே.ராம்குமார் -

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
18-ஜூலை-201103:36:25 IST Report Abuse
GOWSALYA எல்லோருக்கும் நன்றி.....ஆனாலும் ஒரு சின்ன வேண்டுகோள்.....அந்தக் கோயிலில் புதையல் இருக்கு என்று ஒரு சின்னக் கிளர்ச்சியைக் கிளப்பினால் சரி.......அந்தக் கோயில் சுத்தமாகும் அல்லவா?????என்ன நான் சொல்லறது????ஹஹஹா.....
Rate this:
Cancel
sp - USA - new york,யூ.எஸ்.ஏ
17-ஜூலை-201121:36:05 IST Report Abuse
sp - USA நான் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ராமேஸ்வரம் சென்று இருந்தேன். மிகவும் சுத்தமாகவும், பிரமிப்பாகவும் இருந்தது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்ற போது நொந்து போனேன். அதே சமயம் தஞ்சாவூர் பெரிய கோயில் சென்று இருந்தேன். இன்றும் சுத்தமாக இருக்கிறது. கோவில் நிர்வாகத்தை சொல்லி பயனில்லை, மக்களும் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Pondy Sam - london,யுனைடெட் கிங்டம்
17-ஜூலை-201121:29:10 IST Report Abuse
Pondy Sam சுத்தம் பற்றி குறு படம் எடுத்து எல்லா தமிழ் டிவி சானலிலும் அதிலும் மாலை 6 முதல் 9 வரை, சராசரியாக 3 முறை, ஓரு வருடம் கண்டிப்பாக போட வேண்டும் என தமிழக ஆரசு ஆணை போட வேண்டும். சுத்தம் பற்றி மக்கள் உணர்வார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X