லண்டன் : ''கொரோனா சவாலை சமாளிக்க முன்னுரிமை அளிக்கப்படும்,'' என, பிரிட்டன் ராணி எலிசபெத் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பார்லி., கூட்டத் தொடர், ராணி எலிசபெத் உரையுடன் நேற்று துவங்கியது. கணவர் பிலிப் மறைவுக்குப் பின், எலிசபெத் முதன் முறையாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அனைத்து எம்.பி.,க்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பிரிட்டன் அரசு நிறைவேற்ற உள்ள 30 மசோதாக்கள், செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து ராணி எலிசபெத் பேசியதாவது:இந்த அரசு கொரோனாவில் இருந்து நாட்டை மீட்க முன்னுரிமை அளிக்கும். இதற்கு அனைத்து தரப்பில் உள்ள வாய்ப்புகளும் பயன்படுத்திக் கொள்ளப்படும். வேலைவாய்ப்புகள், வர்த்தகம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஆதரவான கொள்கைகள் அமல்படுத்தப்படும்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறியதால் நாட்டின் கொள்முதல் கொள்கை தொடர்பாக புதிய சட்டம் இயற்றப்படும்.ஓட்டு போடுவதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அடையாள அட்டை காண்பிப்பது கட்டாயமாக்கப்படும். உடல் பருமனை கட்டுப்படுத்துவதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அதன்படி, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவை அடங்கிய உணவுப் பொருட்களின் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். வலைதளங்களில் சட்டவிரோத கருத்துகள் பரப்புவதை தடுக்க பாதுகாப்பு சட்டம் இயற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE