சென்னை :முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, தாராளமாக நிதி வழங்கக் கோரி, 'உலகத் தமிழர்களே, உயிர் காக்க நிதி வழங்குவீர்' என்ற தலைப்பில், சமூக வலைதளங்களில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:தமிழகம் இப்போது, இரண்டு மிக முக்கியமான நெருக்கடிகளை, எதிர்கொண்டு வருகிறது. ஒன்று, கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள மருத்துவ நெருக்கடி; இன்னொன்று நிதி நெருக்கடி.கொரோனா முதல் அலையை விட, இரண்டாம் அலை, மிக மோசமானதாக இருக்கிறது.
கொரோனாவின் வீரியத்தை உணர்ந்து, மருத்துவமனைகள், மருந்துகள், படுக்கைகள், ஆக்சிஜன் வசதிகள், தடுப்பூசிகள் ஆகிய உள்கட்டமைப்பை, இன்னும் அதிகப்படுத்தியாக வேண்டும். படுக்கைகள், மருந்து மற்றும் ஆக்சிஜன் இருப்பை அதிகரிக்க, முழு வேகத்தில் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திடீர் அவசர செலவினங்களுக்காக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, தாராளமாக நிதி வழங்குவீர் என, வேண்டுகோள் வைத்தேன். கருணை உள்ளத்தோடு பலரும் வழங்கி வருகின்றனர்; பலரும் நிதி திரட்டி வருகின்றனர்.
புலம் பெயர்ந்து சென்ற தமிழர்கள், தாய் தமிழகத்தை மறக்கவில்லை. மருத்துவ நெருக்கடியும், நிதி நெருக்கடியும் இணைந்து சூழும், இந்த நேரத்தில், மக்களை காக்கும் மகத்தான பணியில், மக்கள் தங்களை தாங்களே முன்வந்து, ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.அதிலும் குறிப்பாக, புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழ் மக்களை காக்கும் முயற்சிக்கு, தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்க வேண்டும்.ஈகையும், இரக்கமும், கருணையும் பரந்த உள்ளமும் உடைய தமிழக மக்கள் அனைவரும், தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு, கை கொடுக்கிற வகையில், நிதி வழங்க கேட்டுக் கொள்கிறேன்.இது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.ஆக்சிஜன் பயன்படுத்தும் படுக்கைகள், தடுப்பு மருந்துகள், தடுப்பூசி போன்றவற்றுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
'ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்யுங்கள்'
பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கொரோனா தொற்றால், அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நோயை கட்டுப்படுத்த தேவையான தடுப்பூசிகளையும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளையும், மாநில அரசுகள் கொள்முதல் செய்து வருகின்றன.
இதை கருத்தில் வைத்து, ஜி.எஸ்.டி., கவுன்சிலோடு கலந்தாலோசித்து, தடுப்பூசி, மருந்துகள் மீதான, ஜி.எஸ்.டி., வரியை, குறிப்பிட்ட காலத்திற்கு, பூஜ்ய சதவீதம் என, நிர்ணயிக்க வேண்டும்.
பொருளாதார வளர்ச்சி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மாநில அரசுகளின் வரி வருவாய் வளர்ச்சி பெருமளவில் குறைந்துள்ளது. அதனால், அதை ஈடு செய்ய, மத்திய அரசு மூன்று நடவடிக்கைகள் எடுத்து, மாநில அரசுகளுக்கு உதவ வேண்டும்.
* நிலுவையில் உள்ள, ஜி.எஸ்.டி.,இழப்பீட்டு தொகைகளையும், மாநில நுகர்பொருள் கழகங்களுக்கு வழங்க வேண்டிய அரிசி மானிய தொகையையும், உடனடியாக விடுவிக்க வேண்டும்
* பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் வரி விதிப்பால், மத்திய அரசுக்கு கிடைத்துள்ள வருவாய், மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படவில்லை. தற்போது, கொரோனா தொற்றால், மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பீட்டை ஈடு செய்ய, சிறப்பு நிதி உதவி அளிக்கப்பட வேண்டும்.
* இக்காலத்தில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களை மேற்கொள்ள தேவைப்படும் நிதியை திரட்டுவதற்காக, அனுமதிக்கப்பட்டுள்ள கடன் வாங்கும் அளவு, மாநிலத்தின் உற்பத்தி மதிப்பில், 3 சதவீதமாக உள்ளது. இதை மேலும், 1 சதவீதம் உயர்த்த வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
கொரோனா நிவாரணம் விட்டுக் கொடுக்கலாமே!
கொரோனா நிவாரண தொகையாக, அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும், 4,000 ரூபாய் வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.முதல் தவணையாக, இம்மாதம், 2.07 கோடி குடும்பங்களுக்கு, தலா, 2,000 ரூபாய் வழங்க அரசு, 4,153.39 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இத்தொகை, 15ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.கொரோனா நோய் தடுப்பு பணிக்கு தேவைப்படுவதால், பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கும்படி, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், வருமான வரி செலுத்துவோர், வசதி படைத்தவர்கள் போன்றோரும், அரிசி கார்டு வைத்துள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில், பலர் அரசு அறிவித்துள்ள நிவாரண தொகையை விட்டு கொடுக்க விரும்புகின்றனர். அந்த தொகையை, முதல்வர் நிவாரண நிதியில் சேர்க்கலாம்.எனவே, நிவாரண தொகையை விட்டுக் கொடுக்க விரும்புவோர், தகவல் தெரிவிக்க வசதி ஏற்படுத்த வேண்டும். விட்டு கொடுப்போர் விபரத்தை, ஒவ்வொரு ரேஷன் கடை அறிவிப்பு பலகையிலும் எழுதலாம்.இது, மற்றவர்கள் இடையே உதவி மனப்பான்மையை ஏற்படுத்த உதவும். சில லட்சம் பேர் பணத்தை விட்டுக் கொடுத்தாலும், அது பெரும் உதவியாக இருக்கும். எனவே, இதற்கு தேவையான நடவடிக்கையை, அரசு எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE