வாஷிங்டன்: கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் மற்றும் 2-ம் டோசுக்கு இடைப்பட்ட காலத்தை 12 முதல் 16 வாரங்களாக மத்திய அரசு அதிகரித்திருப்பது நியாயமானது தான் என அமெரிக்க அரசின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி பாசி தெரிவித்தார்.
தேசிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோசுகளுக்கு இடைப்பட்ட காலத்தை 12-16 வாரங்களாக அதிகரிக்க பரிந்துரைத்தது. அதனை மத்திய அரசு ஏற்று கால இடைவெளியை அதிகப்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் 4 முதல் 6 வாரங்களாக இருந்தது. பின்னர் இடைவெளியை அதிகரிப்பது மேலும் நோய்தடுப்பில் பயனளிப்பதாக தெரிய வந்ததால் கால இடைவெளி 8 வாரங்கள் வரை அதிகப்படுத்தினர். தற்போது அதிகபட்சமாக 4 மாத இடைவெளி தந்துள்ளனர்.
பிரிட்டன் அரசு தங்கள் மக்களுக்கு அனைத்து தடுப்பூசிகளுக்கும் இடையேயான காலக்கட்டத்தை 3 மாதங்களாக நிர்ணயித்துள்ளது. இருப்பினும் மத்திய அரசின் இந்த கால நீட்டிப்பு, தடுப்பூசி பற்றாக்குறையை மூடி மறைக்க ஏற்படுத்தப்பட்ட ஒன்று என எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கியுள்ளன. மேலும், இடைவெளி அதிகமானால் தடுப்பூசியின் வீரியம் குறையாதா என்றும் கேள்வி எழுப்புகின்றன.

வீரியம் குறையாது!
இது பற்றி அமெரிக்க அரசின் தலைமை மருத்துவ ஆலோசகர் பாசி கூறியிருப்பதாவது: இந்தியா ஒரு பெரிய நாடு. மிகவும் கடினமான சூழலில் இருக்கும்போது, உங்களால் முடிந்தவரை விரைவாக தடுப்பூசி போடுவதற்கான வழிகளை முயற்சி செய்து கண்டுபிடிக்க வேண்டும். போதுமான தடுப்பூசிகள் இல்லாததை மூடி மறைக்க தான் இந்நடவடிக்கை என நான் குறிப்பிட மாட்டேன். இது ஒரு நியாயமான அணுகுமுறை என்று நான் நம்புகிறேன். 2-ம் தடுப்பூசி பெறுவதை நீண்ட காலம் தாமதப்படுத்துவது, தடுப்பூசியின் செயல்திறனில் எந்த ஒரு எதிர்மறை விளைவையும் உண்டாக்காது. இவ்வாறு கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE