இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : மே 15, 2021 | Added : மே 15, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்3 கைதிகள் உயிரிழப்புசித்ரகூட்: உத்தர பிரதேசத்தின் ரகவுலி மாவட்ட சிறையில், கைதிகளுக்கு இடையே நேற்று கலவரம் ஏற்பட்டது. இதை தடுக்கச் சென்ற, சிறை அதிகாரியின் துப்பாக்கியை பறித்த கைதி அன்ஷு தீட்சித், இரு கைதிகளை சுட்டுக் கொன்றார். மேலும் பலரை துப்பாக்கி முனையில் மிரட்டிய அன்ஷுவை, சிறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்விபத்தில் 4 பேர் பலிலக்னோ: உத்தர
today, crime roundup, இன்றைய, கிரைம் ரவுண்ட் அப்


இந்திய நிகழ்வுகள்

3 கைதிகள் உயிரிழப்பு

சித்ரகூட்: உத்தர பிரதேசத்தின் ரகவுலி மாவட்ட சிறையில், கைதிகளுக்கு இடையே நேற்று கலவரம் ஏற்பட்டது. இதை தடுக்கச் சென்ற, சிறை அதிகாரியின் துப்பாக்கியை பறித்த கைதி அன்ஷு தீட்சித், இரு கைதிகளை சுட்டுக் கொன்றார். மேலும் பலரை துப்பாக்கி முனையில் மிரட்டிய அன்ஷுவை, சிறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்

விபத்தில் 4 பேர் பலி

லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூரை அடுத்த பூர்பேஹர் பகுதியில், ஒரு கார் நிலைதடுமாறி கால்வாய்க்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் நால்வர் பலியாயினர்.

நக்சல் சுட்டுக்கொலை

தாந்தேவாடா: சத்தீஸ்கரின் தாந்தேவாடா மாவட்டம், முஸ்டல்நார் கிராமத்தில் பதுங்கியிருந்த நக்சல்களை, பாதுகாப்பு படையினர் நேற்று சுற்றி வளைத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டார்.

மணிப்பூர் பயங்கரவாதி கைது

புதுடில்லி: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், 2017ம் ஆண்டு, அசாம் ரைபிள்ஸ் படை பிரிவின் அதிகாரி பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மியான்மருக்கு தப்பிய பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவரான மாயாங்லாம்பம் சிரோமணி, 32, என்பவரை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவினர் நேற்று கைது செய்தனர்.

அசாமில் குண்டுவீச்சு: இருவர் பலி

டின்சுகியா: அசாமின் டின்சுகியா மாவட்டத்தில், நேற்று நடந்த குண்டுவீச்சில் இருவர் பலியாயினர். அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.

இங்குள்ள டின்சுகியா மாவட்டத்தில், நேற்று பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் குண்டுகளை வீசினர். இதில் இருவர் பலியாயினர்; ஒருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த குண்டுவீச்சு சம்பவத்திற்கு, 'உல்பா' பயங்கரவாதிகள் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதை, அந்த அமைப்பினர் மறுத்துள்ளனர்.முதல்வர் ஹிமந்த பிஸ்வா கூறும்போது, ''விரக்தி அடைந்த கோழைகள் நடத்தும் இது போன்ற அராஜக செயல்களை, அரசு ஒருபோதும் ஏற்காது,'' என்றார்.

ஆக்சிஜன் உதவி கேட்ட பெண்ணை படுக்கைக்கு அழைத்த கொடூரன்

புதுடில்லி: கொரோனாவால் உயிருக்கு போராடும் தந்தையை காப்பாற்ற ஆக்சிஜன் உதவி கேட்ட பெண்ணை, தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி அழைத்த டில்லி நபரின் செயலுக்கு, கண்டனங்கள் குவிந்து வருகின்றன.கொரோனா தொற்று பரவல் கடுமையாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்ட வற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன.

ஆக்சிஜன், மருத்துவமனைகளில் படுக்கை உள்ளிட்ட உதவிகள் கேட்டு உறவினர்களும், நண்பர்களும் அல்லாடி வருகின்றனர். இந்நிலையில், டில்லியின் உயர்மட்ட பிரிவினர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார்.அதில், 'என் நெருங்கிய தோழியின் தந்தை, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். அவருக்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை. உதவி செய்யும்படி, என் வீட்டருகே வசிக்கும் ஒருவரிடம், தோழியின் இளைய சகோதரி கோரிக்கை விடுத்தார். 'என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள சம்மதித்தால், ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்து தருவதாக அந்த நபர் கூறியுள்ளார்.

இது போன்ற நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது?' எனக் கேள்வி எழுப்பிஉள்ளார்.அந்த நபர் மீது, போலீசில் புகார் அளிக்கும்படி பலரும் டுவிட்டரில் பதில் அளித்து வருகின்றனர். கொரோனாவுக்காக உதவி கோருபவர்களிடம், பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவங்கள் நாடு முழுதும் அதிகரிக்க துவங்கியுள்ளன.

'ட்ரோன்' அத்துமீறல் ஆயுதங்கள் பறிமுதல்

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் ஆள் இல்லா உளவு விமானங்களில் இருந்து போடப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதிக்குள், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து, 'ட்ரோன்'கள் எனப்படும், ஆளில்லா சிறிய வகை விமானங்கள், அத்துமீறி நுழையும் சம்பவங்கள் சமீப காலமாக தொடர்ந்து நடக்கின்றன.இந்நிலையில், அதுபோன்ற ஒரு சம்பவம், தற்போது மீண்டும் அரங்கேறி உள்ளது.

இது குறித்து பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஜம்மு - காஷ்மீரின் சம்பா மாவட்ட எல்லைப் பகுதியில், மஞ்சள் நிற கவரில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன.அதனுடன், ட்ரோன்களில் எடைகளை தாங்க பொருத்தப்பட்டிருக்கும் மரச்சட்டமும் கண்டெடுக்கப்பட்டது.இதன் வாயிலாக, ட்ரோன் உதவியுடன் இந்த ஆயுதங்கள், அந்த பகுதியில் போடப்பட்டிருப்பது உறுதியாகிறது. இந்த ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, பாகிஸ்தான் எல்லைக்குள், அந்த ட்ரோன் மீண்டும் சென்றிருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தமிழக நிகழ்வுகள்

விதிமீறல் கடைகளுக்கு சீல்
திருவாடானை: ஊரடங்கை மீறி கடை திறந்து வியாபாரம் செய்த மளிகை கடைக்கு சீல் வைக்கபட்டது.திருவாடானை தாசில்தார் செந்தில்வேல்முருகன், எஸ்.ஐ. சுதர்சன் ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது கடம்பாகுடியில் கொரோனா ஊரடங்கை மீறி மளிகை கடையை திறந்து குழந்தைவேல் 30, என்பவர் வியாபாரம் செய்தார். அதிகாரிகள் அவரது கடையை பூட்டி சீல் வைத்தனர்.ராமநாதபுரம்: ராமநாதபுரம் பாரதிநகர் சோத்துாரணி ஓட்டலில் சமூக இடைவெளியின்றி செயல்பட்டதாகவும், அதிக கூட்டம் இருந்ததாகவும் கூறி கேணிக்கரை இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் நேற்று மதியம் ஓட்டலுக்கு சீல் வைத்தனர்.இதே போல் நேற்று நகராட்சி சார்பில் 70 கடைகளுக்கும், போலீஸ் சார்பில்50 கடைகளுக்கும் நேற்று அபராதம் விதித்தனர்.

கொரோனா நோயாளி தற்கொலை

செங்கல்பட்டு : செங்கல்பட்டு, சின்னமேலமையூர் காண்டீபன் தெருவைச் சேர்ந்த குமாரசாமி மகன் கலைச்செல்வன், 26.இவருக்கு, ஏப்., 20ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

இந்நிலையில், நேற்று காலை உறவினர்கள் வந்து பார்த்தபோது, வீட்டில் கலைச்செல்வன் துாக்கிட்டு தொங்கியது தெரிந்தது. தகவலறிந்து வந்த செங்கல்பட்டு போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனியாக இருந்து, மன உளைச்சலில் துாக்கிட்டு இறந்திருக்கலாம் என, அவர்கள் தெரிவித்தனர்.

விதி மீறியோரிடம் ரூ 23,000 அபராதம்

திரு.வி.க.நகர்: திரு.வி.க.நகரில், கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியோருக்கு, அதிகாரிகள், 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.திரு.வி.க.நகர் மண்டலத்தில், கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க, மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல், சாலைகளில் சுற்றுத்திரிந்தோரை பிடித்து மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.முககவசம் அணியாதது, சமூக இடைவெளி பின்பற்றாதது என, விதிமீறலில் ஈடுபட்டோரிடம், நேற்று ஒரே நாளில் 23 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தனர். விதிமீறிலில் ஈடுபட்டோரை கடுமையாக எச்சரித்தனர்.

போலி நிறுவனம் நடத்திய 3 பேர் கைது

சென்னை: வேளச்சேரி, பேபி நகரைச் சேர்ந்தவர் முரளிகிருஷ்ணா 35; இவர், ஆண்கள் விடுதி நடத்தி வருகிறார். அதை விரிவுபடுத்துவதற்காக கடன் கேட்டு, தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் 2019ம் ஆண்டு மனு செய்திருந்தார்.அந்நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி, ஒரு நபர், மொபைல் போனில் பேசியுள்ளார். எந்த அடமானமும் இல்லாமல், லட்சக்கணக்கில் கடன் பெற்று தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.பின் காப்பீடு தொகையாக, 20 ஆயிரம் ரூபாயை வங்கி கணக்கில் செலுத்தும்படி கூறியுள்ளார். அதன்பின் பல கட்டங்களாக, 25 லட்சம் ரூபாய் வரை பெற்று, கடன் பெற்று தராமல் ஏமாற்றிஉள்ளார்.ஒரு கட்டத்தில், அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முரளிகிருஷ்ணா, அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமனிடம் புகார் செய்துள்ளார்.சைபர் கிரைம் போலீசார், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இதில், அந்த நிதி நிறுவனம், திருச்சி, தில்லை கங்கா நகரில் போலியாக நடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், நிறுவனத்தை அமர்நாத், 30, சஞ்சய், 27, சையத் அப்துல்லாஹ், 27, ஆகியோர் சேர்ந்து நடத்தியதும் தெரியவந்தது.பின், மூவரும் கைது செய்யப்பட்டு, தரமணி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


latest tamil news


ரெம்டெசிவிர் மருந்தை கூடுதல் விலைக்கு விற்ற மருந்தக உரிமையாளர்கள் கைது

சென்னை-கள்ள சந்தையில்,'ரெம்டெசிவிர்' மருந்தை கூடுதல் விலைக்கு விற்று வந்த, மருந்தக உரிமையாளர்கள் இருவரை, போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து, 145 'ரெம்டெசிவிர்' மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல்சென்னையில், 'ரெம்டெசிவிர்' மருந்து தட்டுப்பாட்டை பயன்படுத்தி, கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. இந்த கும்பலை பிடிக்க, கிழக்கு மண்டல இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், தனிப்படை அமைத்தார்.ரகசிய தகவலின்படி, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம், தாகூர் மருத்துவக் கல்லுாரி அருகே ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய காத்திருந்த மருந்தாளுனரான விஷ்ணுகுமார், 32 என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து, 7 குப்பி மருந்தை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், கோவில்பட்டியைச் சேர்ந்த சண்முகம் என்பவரிடம், இரு தினங்களுக்கு முன், 10 குப்பி மருந்து வாங்கி, மூன்றை விற்று, மீதி வைத்திருந்தது தெரிந்தது.தொடர்ந்து, கோவில்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்து, சண்முகத்தை கைது செய்து, 44 குப்பி ரெம்டெசிவிர் மருந்தை பறிமுதல் செய்தனர்.

தனிப்படைசண்முகம், திருநெல்வேலியைச் சேர்ந்த பிரவீன்குமாரிடமிருந்து,ரெம்டெசிவிர் வாங்கியது தெரிந்ததால், திருநெல்வேலி போலீசாருக்கு தகவல் அளித்து, பிரவீன்குமாரை கைது செய்து, அவரிடமிருந்து, 4 குப்பி ரெம்டெசிவிர் மருந்தை பறிமுதல் செய்தனர்.பிரவீன்குமாரிடம் விசாரித்ததில், சென்னை, மதுரவாயலைச் சேர்ந்த புவனேஷ்வர்குமாரிடம் இருந்து, 200 குப்பி மருந்தை, கூரியர் மூலம் வாங்கியது தெரிந்தது.இதையடுத்து, நேற்று புவனேஷ்குமாரை கைது செய்து தனிப்படையினர் விசாரித்த போது, கொண்டித்தோப்பில் வசிக்கும், ராஜஸ்தானைச் சேர்ந்த நிஷித் பண்டாரியிடமிருந்து, ரெம்டெசிவிர் மருந்து வாங்கியது தெரிந்தது.தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 145 குப்பி மருந்தை பறிமுதல் செய்தனர். சிறப்பாக செயல்பட்ட, தனிப்படை போலீசாரை, கமிஷனர் வெகுவாக பாராட்டினார்.

ஊரடங்கு விதிகளை மீறிய வாகனங்கள் பறிமுதல்

சென்னை: சென்னையில், ஊரடங்கு விதிகளை மீறி வெட்டியாய் ஊர் சுற்றிய 1,727 பேரின் வாகனங்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.கொரோனா பரவலை தடுக்க, மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

ஊரடங்கை மீறுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, டி.ஜி.பி., திரிபாதி நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்து இருந்தார். அதேபோல, வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என, போலீசாருக்கு உத்தரவிட்டார்.அதன்படி, சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீசார் நேற்று 2,079 வழக்குகள் பதிவு செய்தனர்.

வெட்டியாய் ஊர் சுற்றிய 1,727 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முக கவசம் அணியாதது தொடர்பாக 1,346 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதே போல், சமூக இடைவெளி பின்பற்றாதது தொடர்பாக 83; விதிகளை மீறி கடைகள் திறந்து வைத்திருந்தது தொடர்பாக 64 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.சென்னை முழுவதும் இன்று 'ட்ரோன்' வாயிலாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

புதுவயலில் பாரம்பரிய வீட்டில் தீவிபத்து

காரைக்குடி: புதுவயல் பங்களா ஊரணியில் ராமன் என்பவருக்கு சொந்தமான பாரம்பரிய வீடு உள்ளது. பர்னிச்சர் மற்றும் பாத்திர வியாபாரம் செய்வதற்காக பொருட்களை வாங்கி இந்த வீட்டில் வைத்திருந்தார். அருகிலேயே மற்றொரு வீட்டில் ராமன் வசித்து வருகிறார். நேற்று மாலை 4:00 மணிக்கு வீட்டிலிருந்து புகை வந்ததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தேவகோட்டை, திருமயம், அறந்தாங்கி. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதில் பர்மா தேக்கில் ஆன தூண்கள் மரக்கதவுகள் பலகைகள் மற்றும் பர்னிச்சர் எரிந்தது.


உலக நிகழ்வுகள்

உலக சுகாதார நிறுவனத்தில் பாலியல் குற்றம்

லண்டன்: உலக சுகாதார நிறுவனத்தில் நடந்த பாலியல் குற்றங்கள் அம்பலமாகி உள்ளன.ஆப்ரிக்காவைச் சேர்ந்த காங்கோவில், 2018ல் 'எபோலா' வைரஸ் பரவியது.

இது தொடர்பாக அங்கு சென்ற, உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த, டாக்டர் ஜீன் பால் நகண்டு என்பவர், ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து, ரகசியம் வெளியில் தெரியாமல் இருக்க பெருந்தொகை கொடுத்துள்ளார்.இதுதவிர பிரசவ செலவிற்கு தனியாகவும், காங்கோவில் ஒரு நிலம் வாங்கவும் பணம் தந்துள்ளார். இது தொடர்பான ஒப்பந்த நகலை, 'அசோசியேடட் பிரஸ்' நிறுவனம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதேபோல உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த பொபாகர் டையலோ என்ற டாக்டர், மூன்று பெண்களை பாலுறவுக்கு அழைத்த தகவலும் வெளியாகியுள்ளது.

'எங்களுக்கு உலக சுகாதார நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்து, அதற்கு கைமாறாக, பொபாகர் டையலோ பாலுறவுக்கு அழைத்தார்' என, அந்த பெண்கள் பகிரங்கமாக பேட்டி கொடுத்துள்ளனர்.இத்தகைய பாலியல்குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்த, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனம் கெப்ரியேசஸ், ரகசிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதற்கிடையே உலகசுகாதார நிறுவனத்தில் நடந்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து, அந்நிறுவனத்திற்கு பெருமளவு நிதியுதவி செய்யும் நாடுகளும், தொண்டு நிறுவனங்களும் கவலை தெரிவித்து உள்ளன.இந்த குற்றச்சாட்டுகள்குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என, அவை கோரியுள்ளன.


latest tamil newsமசூதியில் குண்டுவெடிப்பு ஆப்கனில் 12 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள மசூதியில், நேற்று நடந்த குண்டுவெடிப்பில் 12 பேர் பலியாயினர்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் தலைநகர், காபூலின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு மசூதியில், நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு தொழுகை நடந்தது. அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. மசூதியின் இமாம் மொப்தி நைமான் உட்பட, 12 பேர் பலியாயினர்; 15 பேர் காயமடைந்தனர்.

இமாம் மொப்தி நைமானை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு, இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை.ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஆப்கன் அரசு மற்றும் தலிபான் பயங்கரவாதிகள் தரப்பில், மூன்று நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. போர் நிறுத்தத்தின் இரண்டாம் நாளான நேற்று, மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு, மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X