சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை துவங்கியது. இதனை வாங்க, ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, 'ரெம்டெசிவிர்' ஊசி மருந்து கொடுக்கப்படுகிறது. தொற்று, 2வது அலை தீவிரமடைந்து உள்ளதால், பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ரெம்டெசிவிர் மருந்தின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில், ரெம்டெசிவிர் மருந்து இல்லாததால், வெளியில் சென்று வாங்கி வருமாறு, நோயாளிகளின் உறவினர்களிடம் டாக்டர்கள் சொல்கின்றனர். அவர்கள், டாக்டரின் பரிந்துரை சீட்டை வைத்து கொண்டு, கடை கடையாக செல்கின்றனர். ஆனால், எந்த மருந்து கடைகளிலும், மருந்து இருப்பு இல்லை; கள்ளச்சந்தையில் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில், சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரியில், ஏப்., 26ம் தேதி முதல், ரெம்டெசிவிர்மருந்து விற்பனை செய்யப்பட்டது. இங்கு கூட்டம் அலைமோதியதை தொடர்ந்து, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி மாவட்டங்களிலும், மருந்து விற்பனை துவங்கப்பட்டது. ஆனாலும், கீழ்ப்பாக்கத்தில் மக்களின் கூட்டம் குறையவில்லை.

இந்நிலையில், கீழ்ப்பாக்கத்திற்கு பதிலாக, சென்னை, பெரியமேடு பகுதியில் உள்ள, நேரு உள் விளையாட்டு அரங்கில், நேற்று முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை துவங்கும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், அங்கு மருந்து விற்பனை செய்வதற்கான கட்டமைப்பு பணிகள் முடிவடையாததால், விற்பனை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பணிகள் முடிந்ததை தொடர்ந்து, மருந்து விற்பனை இன்று துவங்கியது.
அதன்படி, நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆண்கள் விடுதியில் அமைக்கப்பட்டு உள்ள 4 கவுண்டர்களில் இன்று(மே.,15) காலை 9 மணி முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 300 பேருக்கு மருந்து வழங்கப்படும் என்றும், கூட்டத்தை தவிர்க்க கூடுதலாக மையங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.

ரெம்டெசிவிர் விற்பனை துவங்குவதற்கு முன்னரே, மருந்தை வாங்குவதற்கு கவுண்டர் முன்பு ஏராளமானோர் குவிந்தனர். மருந்து வாங்க இடம்பிடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் சமூக இடைவெளியை மறந்து முண்டியடித்தனர். சிலர் தடுப்புகளை மீறி செல்ல முயன்றதால், தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. அவர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
ரெம்டெசிவிரை வாங்க அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருகின்றனர். இதனால், இங்கு கூட்டத்தை குறைக்க அனைத்து மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மருந்தை வாங்க வந்த ஒருவர் கூறுகையில், எனது மொத்த குடும்பமும் மருத்துவமனையில் உள்ளது. 10 நாட்களாக ரெம்டெசிவிர் மருந்தை வாங்க முயற்சி செய்து வருகிறேன். ஆனால், இதுவரை கிடைக்கவில்லை. படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE