ஆழிப்பேரலையாய் தாக்கும் கொரோனா!| Dinamalar

ஆழிப்பேரலையாய் தாக்கும் கொரோனா!

Updated : மே 17, 2021 | Added : மே 15, 2021 | |
'ஹவுஸ்புல்' போர்டு தியேட்டர்களில் தொங்கினால், இன்று போய் நாளை வரலாம். ஆனால், அதே போர்டு சுடுகாட்டில் தொங்கினால், பிணத்துடன் மறுபடியும் வீட்டுக்கு போக முடியுமா? சாலையில் ஏதாவது ஆம்புலன்ஸ் சீறிப் பாய்ந்து செல்கையில், உள்ளிருக்கும் உயிருக்கு போராடும் நோயாளி, நலம் பெற வேண்டி, 2 நிமிடம் கண்மூடி பிரார்த்திப்போர் உண்டு. இன்றோ, மருத்துவமனைகளில் எங்கு திரும்பினும்
உரத்த சிந்தனை, ஆழிப்பேரலை, கொரோனா

'ஹவுஸ்புல்' போர்டு தியேட்டர்களில் தொங்கினால், இன்று போய் நாளை வரலாம். ஆனால், அதே போர்டு சுடுகாட்டில் தொங்கினால், பிணத்துடன் மறுபடியும் வீட்டுக்கு போக முடியுமா?

சாலையில் ஏதாவது ஆம்புலன்ஸ் சீறிப் பாய்ந்து செல்கையில், உள்ளிருக்கும் உயிருக்கு போராடும் நோயாளி, நலம் பெற வேண்டி, 2 நிமிடம் கண்மூடி பிரார்த்திப்போர் உண்டு. இன்றோ, மருத்துவமனைகளில் எங்கு திரும்பினும் உயிர்மூச்சுக்காக ஏங்கி தவிக்கும் கொரோனா தொற்றாளர்களின் அவஸ்தை ஒலி மனதை அறுக்கிறது.

டில்லி உள்ளிட்ட சில வட மாநிலங்களின் பெருநகரங்களில், கொரோனா எனும் பெரும் அரக்கனால் மருத்துவமனைகளில் விடாது கேட்கும் மரண ஓலங்களும், சுடுகாடுகளில் அடாது எரியும் பிணங்களும், நாட்டை நிலைகுலையச் செய்துள்ளன.இரண்டாம் அலையே மனித உயிர்களை வாரிச்சுருட்டி எரியூட்டிக் கொண்டிருக்கையில், மூன்றாம் அலை வெகு தொலைவில் இல்லை என, மருத்துவ மற்றும் அறிவியல் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

முதல் அலையிலிருந்து என்ன தான் நாம் பாடம் கற்றிருந்தாலும், இம்முறை பெரும்பான்மை தொற்றாளர்களுக்கு அறிகுறிகள் தோன்றுவதில்லை என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை. நம்மை சுற்றிலும், 80 சதவீதம் பேர் அறிகுறிகள் இன்றியும், சாதாரண அறிகுறிகளுடனும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமல், நோயை பரப்பி வருகின்றனர்.

கடந்த முறை, வீட்டு தனிமையில் வைக்கப்பட்ட தொற்றாளர்களின் வீடுகளில், 'ஸ்டிக்கர்' ஒட்டும் முறை இருந்ததால், தொற்றாளர்களோ, வீட்டினரோ நோய்க்காலம் முடியும் வரை வெளியில் வந்து, நோய் பரப்புவது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், இம்முறை அப்படி இல்லாமல், தொற்றாளர்கள் வெளியில் நடமாடுவதால், இப்போது முந்தைய அலையை விட, நான்கு முதல் ஐந்து மடங்கு வேகத்தில் தொற்று பரவிக் கொண்டிருக்கிறது.

உருமாற்றம் அடைந்த இந்த கொரோனா வகைகள், தீவிரமாக பரவுவதால், தொற்றை உணரும் முன்னரே, நுரையீரல் வரை பாதிக்கப்பட்டு, 'வென்டிலேட்டர்' மற்றும் ஆக்சிஜன் தேவை வரை சென்று விடுகிறது. நோய் பரவலின் வேகத்தால், இம்முறை குறைந்த வயதினரும் மரணிக்க வேண்டிய நிலையுள்ளது.

'தமிழகம், டில்லிக்கு இரண்டு வாரம் பின்னே மட்டுமே இருக்கிறது' என, கவலை தரும் எச்சரிக்கை விடுக்கிறார், அசோகா பல்கலைக்கழக உயிரியல் பேராசிரியர் கவுதம் மேனன். அதற்கேற்றாற்போல், தமிழகத்தில் தற்போது, தொற்று எண்ணிக்கை நாளொன்றுக்கு, 25 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி, 25 ஆயிரத்தை நெருங்குகிறது தொற்று பாதிப்பு. 12 வயதுக்கு கீழுள்ளவர்களின் பாதிப்பு, 800ஐ கடந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, தமிழகத்தின் பெரு நகரங்களில், 'வென்டிலேட்டர்' வசதி உள்ள படுக்கைகள் காலியில்லை. படுக்கைக்காக காத்திருப்போர் பட்டியலும் வெகு நீளம். படுக்கைகளை கூடுதல் பணம் தந்து, 'பிளாக்' செய்து, செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்குவதாகவும் குறை சொல்லுவோர் உண்டு.


'நம்ம உழைப்புக்கும், சாப்பாட்டுக்கும் எதுவும் வராது' என இருந்த, கிராமப்புற மக்களும் தொற்றுக்கு பலியாக ஆரம்பித்துள்ளனர். நிலைமை மேலும் தீவிரமடைவதை தடுக்க வேண்டுமெனில், அரசு சார்பில், கொரோனா விழிப்புணர்வு மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும். சாதாரண தொற்றுள்ள வர்களும் தற்போது மருத்துவமனைகளில் குவிவதால், பெருந்தொற்று கொண்டோருக்கும் படுக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு, உயிர்ப்பலி அதிகரிக்கிறது.

'எப்படியும் மருத்துவமனைக்கு போனாலும், கொரோனாவுக்கு, மல்டி வைட்டமினும், இரும்பு சத்து மாத்திரையும் தானே தருகின்றனர்...' என சுய மருத்துவம் செய்து, தொற்று முற்றிய நிலையில் ஆபத்தான கட்டத்தை எட்டி பலியாவோரும் உண்டு. எனவே, புதிய அரசு சில விஷயங்களை கவனத்தில் கொண்டு செயல்படுவது நலம்.

நிகழப்போகும் பெரும் அபாய சூழலை தவிர்க்க, தொற்று அதிகம் காணப்படும் பகுதிகளில், மருத்துவ முகாம்களை, சிறு இடைவெளிகள் விட்டு நடத்தி, தேவைப்படுவோரை மட்டும், மருத்துவ மனைகளுக்கு அனுப்ப பரிந்துரைக்கலாம். சிறு தொற்று, சாதாரண சளி, காய்ச்சலுக்கு அங்கேயே மருந்து கொடுத்து அனுப்பி வைக்கலாம். இதனால் மக்களும் மன உளைச்சலின்றி இருப்பர்.


தடையின்றி தடுப்பூசி


ஆரம்பத்தில் பயத்தில் மறுத்தாலும், தொற்றின் தீவிரம் உணர்ந்து, தடுப்பூசிக்காக மக்கள் மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் குவிந்து வருகின்றனர். ஆனால் தடுப்பு மருந்து தட்டுப்பாடு காரணமாக, பல இடங்களில் அவர்கள் திருப்பி அனுப்பப்படுகையில், நிலைமை சண்டை சச்சரவுகளில் முடிகிறது.

சென்னையின் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதியாக கருதப்படும் அண்ணா நகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், சமீபத்தில் காலை வேளை, 'கோவாக்சின்' இரண்டாம் தடுப்பூசி போட பலரும் காத்திருந்தனர். அப்போது, 'கோவாக்சின் ஊசி ஸ்டாக் இல்லை... கோவிஷீல்ட் தான் உள்ளது' என, செவிலியர்கள் கூறியதும், மருத்துவர்களிடமும், செவிலியர்களிடமும் மக்கள் தகராறில் ஈடுபட்டனர். மருத்துவர்களின் உரையாடலை, 'பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில், 'லைவ்' வீடியோவாக பதிவு செய்து, மொபைலில் அனுப்ப ஆரம்பித்தனர். பலகட்ட நெருக்கடியிலும், இடைவிடாத பணியாலும் அயராது உழைக்கும் மருத்துவ பணியாளர்களின் நிலையை எண்ணியாவது, பொதுமக்கள் இது போன்ற செயல்களை தவிர்த்திருக்கலாம்.

அரசும் அந்தந்த பகுதியில் தடுப்பூசி நிலவரம் குறித்து சரியான தகவலை தருவதன் மூலம், இத்தகைய சிக்கலை தவிர்க்கலாம். அரசின், 'ஆரோக்ய சேது ஆப்' இன்னும் சிறப்பாக செயல்பட்டால், அது போன்ற தகவல்களுக்கு ஏதுவாக இருக்கும்.

மருத்துவமனைகளில் படுக்கை இருப்பு நிலவரம் குறித்த விபரங்களுக்கு என, தனி இணையதளம் செயல்பட்டாலும், சாமானிய மக்களுக்கு அது பெரும்பாலும் சென்றடைந்ததாக தெரியவில்லை. இத்தகைய தகவல்களை அரசு, பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் வெளியிடலாம். மருத்துவமனையில் படுக்கைக்காக புரோக்கர்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் அப்பாவி மக்களை காக்கலாம். நிலவரம் தெரியாமல், ஒரே மருத்துவமனையில் மக்கள் குவிவதையும் தடுக்கலாம்.


மருந்துகள் இருப்பு


'ரெம்டெசிவிர்' மருந்தால் பெரிய பலன் இல்லை என, சில மருத்துவர்கள் பேட்டி கொடுக்கின்றனர். ஆனால், இது மருத்துவமனைகளில் பரிந்துரைக்கப்பட்டு, சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தினம் கூட்டம் முண்டியடிக்கிறது. தனியார் சிலர் இதை பதுக்கி வைத்து, மக்களிடம் காசு பார்க்கின்றனர்.

உயிர் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றி தான், இன்று நாடு முழுமைக்கும் ஒரே பேச்சாக இருக்கிறது. இதன் போதாமையை பற்றித் தான் அனைவரும் பேசுகின்றனர். ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் டில்லி, குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களில் உயிரிழப்புகள் நேர்ந்த போதே, நாம் சுதாரிக்காததன் விளைவு, இன்று நமக்கும் வந்துவிட்டது.

சென்னைக்கு அடுத்து பாதிப்பு அதிகமுள்ள கோவையில், தினமும், மருத்துவமனைகளுக்கான ஆக்சிஜன் தேவை, 15 - 20 டன். தற்போது கிடைப்பதோ, மூன்று நாட்களுக்கு ஒரு முறை, 5 - 10 டன் மட்டுமே.அரசு மருத்துவமனைகளுக்கு, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து திரவ நிலை ஆக்சிஜன் வினியோகிக்கப் படுகிறது.

தனியார் மருத்துவமனைகளுக்கு கேரள மாநிலம், கஞ்சிக்கோட்டில் இருந்து ஆக்சிஜன் வழங்கப்பட்டு வந்தது. அங்கிருந்து வரும் ஆக்சிஜன் அளவு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதால், இங்கு பிரச்னை உள்ளதாக தெரிகிறது.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், 24 மணி நேரத்துக்கு, மூன்று முறை கன்டெய்னர்களில் வந்திறங்கினாலும், தேவை பூர்த்தியாவதில்லையாம். பாண்டிச்சேரியிலிருந்து வருவது நிறுத்தப்பட்டு, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதுார் போன்ற இடங்களில் இருந்து, சென்னைக்கு திரவ ஆக்சிஜன் சப்ளை செய்யப்படுகிறது.

கன்டெய்னர் லாரிகளில் இதை கொண்டு செல்ல ஆகும் கால அளவு மிக அதிகம். ஆக்சிஜன் போர்க்கால அடிப்படையில் தேவைப்படும் நிலையில், ஆம்புலன்ஸ் போல சிக்னல்கள், டிராபிக் தடங்கல்கள் இல்லாமல், இந்த வாகனங்களுக்கும் சிறப்பு அனுமதிக்கு ஏற்பாடு செய்தால் உயிர்கள் காப்பாற்றப்படும்.

சென்னையில், அரசு மருத்துவமனைகளில் ஒன்றில், ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும் பட்சத்தில், மற்றொரு மருத்துவமனையிலிருந்து அனுப்பி வைத்து சமாளித்து வருவதாக கூறுகின்றனர். அரசு மருத்துவமனைகளின் தேவையை சமாளிக்க, தனியார் மருத்துவமனைகளிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர் தரப்பட வேண்டும் என்ற அரசின் தற்போதைய அறிவிப்பால், அரசு மருத்துவர்களுக்கு கூடுதல் சுமையே.

எனவே, அதிகரித்து வரும் ஆக்சிஜன் தேவைக்காக, அரசு மாற்று ஏற்பாடு களை தேடுவது அவசியமும், அவசரமும் கூட.துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்தியை விரைவுபடுத்துவதுடன், ஆக்சிஜன் கையிருப்பையும் அதிகரிப்பதன் மூலம் தேவை சற்று பூர்த்தியாகலாம்.அதே போல, உலக நாடுகள் பலவும் நமக்கு உதவிக்கரம் நீட்டும் பொருட்டு, மருந்து மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்பி வருகின்றன. இவற்றிற்கு சுங்க இலாகா சிறப்பு அனுமதியுடன், விரைந்து பயன்பாட்டுக்கு வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.


பணியாளர் எண்ணிக்கைதினம் தினம் வந்து குவியும் நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாமல், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மன உளைச்சலில் உள்ளது கண்கூடு. சமீபத்தில் இத்தகைய நிலையில், மன உளைச்சலில் இளம் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது யாருக்கும் மறந்திருக்காது. ஓய்வு ஒழிச்சலில்லாமல் உழைக்கும் மருத்துவர்களின் அத்தியாவசிய தேவைகளை அரசு கண்டுணர்ந்து, பூர்த்தி செய்ய வேண்டிய கடமையுள்ளது. மருத்துவ காலி பணியிடங்களை நிரப்புவதன் மூலம், மருத்துவர்களின் பணிச்சுமையை சற்று குறைக்கலாம்.தலையாய பிரச்னை சில பகுதிகளில், வீட்டு சிகிச்சையில் இருக்கும் தொற்றாளர்களின் மருத்துவ கழிவுகளை அகற்றுவதில் சுணக்கம் காட்டப்படுகிறது.

பல இடங்களில் குப்பை அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால், நோய் தொற்று அதிகரிக்கும் அபாயமுண்டு. நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, 15 நாட்கள் முழு ஊரடங்கு கொண்டு வந்தால் மட்டுமே, நிலைமையை சமாளிக்க முடியும் என்று கருதிய தமிழக அரசு, அதை செயல்படுத்தியுள்ளது.புதிய முதல்வராக பதவியேற்றிருக்கும் ஸ்டாலினுக்கு இருக்கும் பெரும் சவாலே கொரோனா தான். அவர் தலைமையிலான அரசு, திறம்பட செயல்படுவதின் மூலம், இப்பெருந்தொற்று ஆழிப்பேரலையாய் உருவெடுக்காமல் தடுக்கப்படும் என நம்புவோம்!

ஜீவா,

பத்திரிகையாளர்,

தொடர்புக்கு:
இ - மெயில்: kovaijheeva@gmail.com


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X