புதுடில்லி :''கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை குறைத்துக் காட்ட வேண்டாம். பரவலைத் தடுக்க, உள்ளூர் அளவில் கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,'' என, மாநில அரசுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை, நாடு முழுதும் தீவிரமாக உள்ளது. இந்நிலையில், மருந்துகள், ஆக்சிஜன், மருத்துவமனைகளில் படுக்கை வசதி, தடுப்பூசி உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எண்ணிக்கை
வைரஸ் பரவலைத் தடுப்பது குறித்து, உயர்நிலை குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார். அதில், மோடி பேசியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:சில மாநிலங்களில் பாதிப்பு மற்றும் பலி
எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. அதிக எண்ணிக்கை இருந்தால், தங்களுக்கு நெருக்கடி ஏற்படுமோ என்ற அச்சம் இல்லாமல், மாநில அரசுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
பாதிப்பு
பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை. இரண்டாவது அலையில் கிராமப் பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதனால், கிராமப் பகுதிகளுக்கு தேவையான ஆக்சிஜன் வினியோகத்துக் கான வழிமுறைகளை மாநிலங்கள் உருவாக்க வேண்டும். இது போன்ற கருவிகளை இயக்க, கிராமப் பகுதியில் உள்ள மருத்துவ ஊழியர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்க வேண்டும்; தடையில்லாமல் மின்சாரம் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.கிராமப் பகுதியில் சுகாதார சேவை அளிக்கும், 'ஆஷா' ஊழியர் மற்றும் அங்கன்வாடி ஊழியர் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.கிராமங்களில் மருத்துவப் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
நடவடிக்கை
கடந்த மார்ச்சில், ஒரு வாரத்தில் 50 லட்சமாக இருந்த பரிசோதனை, தற்போது 1.3 கோடியாக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்று ஏற்படும் விகிதம் குறைந்து வருகிறது. அதே நேரத்தில் குணமடைவோர் அளவு அதிகரித்து வருகிறது. நம் மருத்துவ ஊழியர்கள், மத்திய - மாநில அரசுகள் எடுத்துள்ள சிறப்பான நடவடிக்கையால் பாதிப்பு குறைந்து வருகிறது.இருப்பினும் பாதிப்பு களை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில், உள்ளூர் அளவில் கட்டுப்பாடு திட்டங்களை வகுக்க வேண்டும். அனைத்து ஆதாரங்களையும் திரட்டி, வீடு வீடாக பரிசோதனை செய்வது, கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீஸ் வழக்கு
கொரோனா தடுப்பூசிக்கான தட்டுப்பாடு தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து, டில்லியின் பல இடங்களில், 'போஸ்டர்'கள் ஒட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக 17, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையை, டில்லி போலீஸ் பதிவு செய்துள்ளது. வழக்கு தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE