இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : மே 17, 2021 | Added : மே 17, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்பத்திரிகையாளர் கைதுஇம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் பலியானதாக சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்தி பரப்பியதாக, பத்திரிகையாளர் கிஷோரேச்சந்திர வாங்கேம் மற்றும் அரசியல் ஆர்வலர் எரேண்ட்ரோ லெய்கொம்பம் ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கைதுசிலிகுரி: 'மேற்கு
today, crime, round up, இன்றைய, கிரைம், ரவுண்ட் அப்


இந்திய நிகழ்வுகள்

பத்திரிகையாளர் கைது

இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் பலியானதாக சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்தி பரப்பியதாக, பத்திரிகையாளர் கிஷோரேச்சந்திர வாங்கேம் மற்றும் அரசியல் ஆர்வலர் எரேண்ட்ரோ லெய்கொம்பம் ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.

பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கைது

சிலிகுரி: 'மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியில் முறையான கொரோனா மீட்பு நடவடிக்கை எடுக்கவில்லை' என, திரிணமுல் காங்., அரசுக்கு எதிராக, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சங்கர் கோஷ், ஆனந்தமோய் பர்மன் மற்றும் சிகா சட்டோபாத்யாய் ஆகியோர் சிலிகுரியில் நேற்று போராட்டம் நடத்தினர். ஊரடங்கு விதி மீறல் என அவர்களை கைது செய்த போலீசார், பின் விடுவித்தனர்


latest tamil newsதமிழக நிகழ்வுகள்

13 இறைச்சி கடைகளுக்கு அபராதம்

திருத்தணி : முழு ஊரடங்கு போது, திருத்தணி நகரத்தில் திறந்திருந்த, 13 இறைச்சி கடைகளுக்கு, தாசில்தார் ஜெயராணி அபராதம் விதித்து எச்சரித்துள்ளார்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருவதால், ஞாயிற்றுக் கிழமைகளில் எவ்வித தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.அந்த வகையில், திருத்தணி நகரத்தில், நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், திருத்தணி, மேட்டுத் தெரு, காந்தி ரோடு மெயின் மற்றும் பைபாஸ் ஆகிய இடங்களில், விதிமுறைகள் மீறி மீன் மற்றும் இறைச்சி கடைகள் திறந்து விற்பனை செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி தாசில்தார் ஜெயராணி, வருவாய் ஆய்வாளர் உதயகுமார் மற்றும் ஊழியர்கள் மேற்கண்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

அப்போது, 8 மீன் கடைகள், 5 இறைச்சி கடைகள் திறந்து விற்பனை செய்யப்பட்டதை கண்டுபிடித்து, ஒவ்வொரு கடைக்கும், தலா, 1,000 ரூபாய் வீதம், 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வசூலித்தார்.மேலும், இனிவரும் நாட்களில், அரசு உத்தரவை மீறி கடைகள் திறந்ததால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என, எச்சரித்தனர்.இது தவிர, தாசில்தார் ஜெயராணி, நகராட்சி முழுதும் வலம் வந்து திறந்த கடைகளை மூட செய்தார்.

ஊரடங்கில் உலா வந்தவர்களுக்கு அபராதம்

ஊத்துக்கோட்டை : முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பைக்கில் சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த, 10ம் தேதி முதல் வரும், 24ம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்தியது. இதன்படி, பால், மருந்தகம் வழக்கம்போல் இயங்கலாம். மளிகை, காய்கறி கடைகள் காலை, 10:00 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கண்ட கடைகள் இயங்க அனுமதி இல்லை. பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் நேற்று முழு ஊரடங்கை மீறி வாகன ஓட்டிகள் பைக்கில் சுற்றித் திரிந்தனர்.

ரயிலில் அடிபட்டு சிறுவன் பலி

திருவொற்றியூர் : திருவொற்றியூர், பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்; பெயின்டர். இவரது மகன் ராகுல், 15; அரசு பள்ளியில், பிளஸ் 1 படித்தார்.

நேற்று முன்தினம் மாலை, வீட்டருகே உள்ள மைதானத்தில், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது, பந்து எதிர்பாராத விதமாக, அருகேயிருந்த ரயில்வே தண்டவாளத்தில் விழுந்தது. ஊரடங்கால், ரயில் அதிகளவில் வராததால், சிறுவன் மெத்தனத்தில், பந்தை எடுக்க சென்றுஉள்ளான்.அப்போது, அவ்வழியே வந்த ரயில் மோதியதில், ராகுல் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து, தகவலறிந்து அங்கு வந்த கொருக்குப் பேட்டை ரயில்வே போலீசார், உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


latest tamil news


ரெம்டெசிவிர் விற்ற மூவர் கைது
அடையாறு : அடையாறில், கள்ளச்சந்தையில் 'ரெம்டெசிவிர்' மருந்து விற்ற மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.

அடையாறு பகுதியில், ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பதாக அடையாறு காவல் மாவட்ட தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று, அடையாறு, இந்திரா நகரில் மருந்துடன் நின்ற மூன்று பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அயனாவரத்தில் மருந்து கடை நடத்தி வரும் ராஜ்குமார், 27; அங்கு வேலை பார்க்கும் சையத் அம்ஜித், 30 மற்றும் மருந்து விற்பனை பிரதிநிதி ஆதித்யன், 24, ஆகியோரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து இரண்டு பாட்டில் மருந்து மற்றும் 89 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.89 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை : துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட, 89.17 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டியை, சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின், துபாய் நகரிலிருந்து, 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானம் நேற்று காலை, 8:25 மணிக்கு, சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த, சென்னையைச் சேர்ந்த, முகமது அஸ்ரப், 21, என்பவரை, சுங்கத்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டனர்.அதில், அவரது இரு கால்களிலும் சுற்றப்பட்டிருந்த, பாண்டெய்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 1.8 கிலோ தங்க கட்டி, 89.17 லட்சம் ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டது. முகமது அஸ்ரபிடம் நடந்த விசாரணையில், 'விமான முனையத்திற்கு வெளியே, இந்த தங்கத்தை பெற ஒருவர் வருவார்' என்றார்.

முகமது அஸ்ரப்பை விமான முனையத்திற்கு வெளியே அழைத்து வந்து, அவர்களது கண்காணிப்பில் வைத்தனர். சில நிமிடத்திற்கு பின், சென்னையைச் சேர்ந்த, முகமது இப்ராகிம், 39, என்பவர், அஸ்ரப்பை தங்கத்தை கேட்டு அணுகினார். தயாராக இருந்த, சுங்கத்துறையினர், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவனுடன் தகராறு: மனைவி தற்கொலை

பொள்ளாச்சி:நெகமம், காளியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் ராம்குமார், 30, தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலையில், மேற்பார்வையாளராக பணியாற்றுகிறார். இவரது மனைவி திலகவதி, 25, இவர்களுக்கு, ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.தனிக்குடித்தனம் செல்வதில், கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே தகராறு இருந்தது. நேற்று முன்தினம் இரவு, தகராறு ஏற்பட்டதில், மனமுடைந்த திலகவதி, வீட்டுக்குள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.நெகமம் போலீசார் விசாரிக்கின்றனர். திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குள் பெண் தற்கொலை செய்து கொண்டதால்,சப் - கலெக்டர் விசாரணை நடக்கிறது.

நள்ளிரவில் குழந்தை மாயம்; கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு

செஞ்சி: செஞ்சி அருகே, நள்ளிரவில் பெற்றோரோடு துாங்கியபோது காணாமல் போன ஏழு மாத பெண் குழந்தையை, கிராம மக்கள் கிணற்றில் இருந்து மீட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மேல்சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 33; மனைவி சரண்யா, 30. இவர்களுக்கு நட்சத்திரா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது.நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணன், சரண்யா இருவரும் குழந்தை நட்சத்திராவோடு, வீட்டுக்கு வெளியே உறங்கினர். நேற்று அதிகாலை, 1:30 மணிக்கு கண் விழித்து பார்த்த போது, குழந்தையை காணவில்லை.பதற்றமடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், அப்பகுதி முழுதும் தேடினர்.

அதிகாலை, 2:30 மணிக்கு கிருஷ்ணன் வீட்டுக்கு, 500 மீட்டர் தொலைவில் உள்ள, 29 அடி ஆழமுள்ள தண்ணீரில்லாத பொது கிணற்றில், குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. கிணற்றில் டார்ச் லைட் அடித்து பார்த்த போது, குழந்தை நட்சத்திரா கிணற்றில் இருந்தது தெரியவந்தது,இளைஞர்கள் சிலர், கிணற்றில் இறங்கி குழந்தையை மீட்டனர். குழந்தைக்கு காயம் ஏதுமில்லை. பெற்றோரோடு துாங்கிய குழந்தை, விலங்குகளுக்கு கூட எட்டாத சுற்றுச்சுவர் உள்ள கிணற்றுக்குள் மர்மமான முறையில் விழுந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

தொற்று நோயாளிகளின் உறவினர்கள் போராட்டம்

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் அரசு மருத்துவ மனையில் 950க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு உதவியாக, உறவினர்கள் உடனிருந்து கவனிக்கின்றனர்.அவர்கள், நோயாளிகளுக்கு தேவையானவற்றை வாங்க வெளியே சென்று வருகின்றனர். இதனால், நோய் பரவும் நிலை உள்ளதோடு மருத்துவர்களுக்கு இடையூறாக இருப்பதால், அவர்களை வெளியேற்ற 'டீன்' முருகேசன் உத்தரவிட்டார்.அவர்களை, காவலாளிகள் நேற்று வெளியே அனுப்பியதால் வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:மருத்துவர்கள், செவிலி யர்கள், கொரோனா சிகிச்சை மையத்துக்கு சரியாக வருவதில்லை. நோயாளிகளையும் சரியாக கவனிப்பதில்லை. செவிலியர்கள், நோயாளிகளுக்கு ஊசி போடும்போது, ரத்தம் வந்தாலும் கண்டு கொள்வதில்லை.தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, வெளியே வரும் நோயாளிகளுக்கு படுக்கை கொடுக்காமல் தரையில் படுக்கும் நிலை உள்ளது.

அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வாங்கி கொடுக்கிறோம்.இல்லையெனில், நோயாளிகளே வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். குடிக்க சுடுநீர் வசதி கூட சரியாக இல்லை. காலை உணவு 10:00 மணிக்கு மேல் தான் வழங்கப்படுகிறது. இதையெல்லாம் சரி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

போலீசார், 'கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிப்பர். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் அச்சமின்றி செல்லுங்கள்' என்றனர். இதையடுத்து, நோயாளிகளின் உறவினர்கள் 200க்கும் மேற்பட்டோர், கொரோனா வார்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஊரடங்கால், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எப்படி சொந்த ஊருக்கு செல்வது என தெரியாமல் தவித்தனர்.


உலக நிகழ்வுகள்

புலி பத்திரமாக மீட்பு

ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் விக்டர் ஹூகோ குவியஸ் என்பவர், வங்கப் புலி ஒன்றை வளர்த்து வந்தார். 'இந்தியா' என பெயரிடப்பட்டிருந்த அந்த புலி, கடந்த வாரம் ஹூஸ்டனில் காணாமல் போனது. இது, அப்பகுதி மக்களை பீதியடைய வைத்தது. இந்நிலையில், அந்த புலி நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டு, சரணாலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குழந்தைகள் கொலை: தாய் கைது

டெம்பே: அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் யூய் இனோயி, 40, என்ற பெண், நேற்று காவல் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்த அதிகாரிகளிடம், தன் வீட்டிற்கு உடனடியாக வரும்படி அழைத்தார். தன் குழந்தைகளை கொல்லும்படி, வீட்டில் ஒரு குரல் கேட்பதாக கூறினார். ஒன்றும் புரியாத அதிகாரிகள், அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு, 10 வயதுக்கு உட்பட்ட அவரது இரண்டு குழந்தைகளும் உடலில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தனர். பின், அந்த தாயை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

வீடுகள் மீது குண்டு வீச்சு

ஹாக்கா: நம் அண்டை நாடான மியான்மரில், ராணுவ புரட்சிக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இங்குள்ள சின் மாகாணத்தில் நேற்று, மியான்மர் ராணுவத்தினர், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பல வீடுகள் சேதமடைந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், மாகாணத்தில் இருந்து வெளியேறினர். இந்த தாக்குதலுக்கு, மியான்மரில் உள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டன் துாதரகங்கள் கவலை தெரிவித்துள்ளன.

துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி

கராச்சி: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், நீண்ட கால பகையால், ஜாகிரானி மற்றும் சாச்சர் என்ற இரண்டு பழங்குடியின பிரிவினருக்கு இடையே, நேற்று மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டனர். இதில், ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X