புதுடில்லி: மத்திய அரசின் கொரோனாத் தடுப்பு ஆய்வுக் குழு மற்றும் ஆலோசனைக் குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து மூத்த வைராலஜிஸ்ட் ஷாகித் ஜமீல் திடீரென விலகியுள்ளார்.
சார்ஸ்கோவிட் வைரசின் மரபணு கூட்டமைப்பின் ஆய்வு மற்றும் ஆலோசனைக் குழு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கப்பட்டது. இந்த ஆய்வு மற்றும் ஆலோசனைக் குழுக்களுக்கு தலைவராக மூத்த வைராலஜிஸ்ட் ஷாகீத் ஜமால் நியமிக்கப்பட்டார். அசோகா பல்கலைக்கழகத்தின் திரிவேதி உயிர்அறிவியல் துறையின் தலைவராகவும் ஷாகித் ஜமீல் இருந்து வருகிறார்.

இந்தியாவில் தற்போது 3 உருமாறிய கொரோனா வைரஸ்கள் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதில் பிரிட்டனின் பி.1.1.7 வைரஸ், தென் ஆப்பிரிக்காவின் பி.1.351, பிரேசலின் பி.1. வகை வைரஸ்கள் உள்ளன. இந்த வைரஸ் குறித்தும் இந்தியாவில் புதிதாகக் கண்டறியப்பட்ட இரட்டை உருமாற்ற கொரோனா வைரஸ் குறித்தும் ஷாகித் ஜமீல் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தி வந்தனர்.
இந்நிலையில் எந்தவித காரணமும் வெளியிடாமல் ஷாகீத் ஜமீல் கொரோனாத் தடுப்பு ஆய்வுக் குழு மற்றும் ஆலோசனைக் குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

ஷாகித் ஜமீல் அமெரிக்காவில் வெளிவரும் ஒரு நாளேட்டில் எழுதிய கட்டுரை ஒன்றில் மத்திய அரசை விமர்சித்துள்ளார். குறிப்பாக, 'இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி மெதுவாக நடக்கிறது; தடுப்பூசி பற்றாக்குறையும் உள்ளது; கொரோனா பரிசோதனையும் வேகப்படுத்தவில்லை. இதற்கு மத்திய அரசே காரணம். கொரோனா குறித்து ஆய்வுகளை நடத்த போதுமான ஒத்துழைப்பு மத்திய அரசு தருவதில்லை. மாறாக மத்திய அரசிடம் இருந்து எதிர்ப்பு தான் வருகிறது' எனத் தெரிவித்திருந்தார். இதனால் ஏற்பட்ட நெருக்கடி தான் இவர் பதவி விலக காரணமாக இருக்கும் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE