துவங்கியாச்சு உடன்பிறப்புகள் நாட்டாமை... 'கொரோனா' சாவிலும் 'கல்லா' கட்டுறாங்க!

Updated : மே 18, 2021 | Added : மே 18, 2021
Share
Advertisement
நகர்வலம் சென்று விட்டு, வீட்டுக்குத் திரும்பிய மித்ராவுக்கு, சூடாக பில்டர் காபி கொடுத்து, உபசரித்தாள் சித்ரா.மின் விசிறியை சுழல விட்டு, சோபாவில் அமர்ந்த மித்ரா, ''அக்கா, வெளியே போகவே ரொம்ப பயமா இருக்கு. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை கூடிட்டே போகுது. எந்த தகவலையும் மறைக்கக் கூடாதுன்னு, சி.எம்., சொல்லியிருந்தாலும், மாவட்ட நிர்வாகம் எல்லாத் தகவலையும் மூடி மறைக்குது,''
  துவங்கியாச்சு உடன்பிறப்புகள் நாட்டாமை...  'கொரோனா' சாவிலும் 'கல்லா' கட்டுறாங்க!

நகர்வலம் சென்று விட்டு, வீட்டுக்குத் திரும்பிய மித்ராவுக்கு, சூடாக பில்டர் காபி கொடுத்து, உபசரித்தாள் சித்ரா.மின் விசிறியை சுழல விட்டு, சோபாவில் அமர்ந்த மித்ரா, ''அக்கா, வெளியே போகவே ரொம்ப பயமா இருக்கு. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை கூடிட்டே போகுது. எந்த தகவலையும் மறைக்கக் கூடாதுன்னு, சி.எம்., சொல்லியிருந்தாலும், மாவட்ட நிர்வாகம் எல்லாத் தகவலையும் மூடி மறைக்குது,'' என, ஆரம்பித்தாள்.''என்னப்பா, இப்படிச் சொல்றே. ஹெல்த் மினிஸ்டர், புட் மினிஸ்டர், பாரஸ்ட் மினிஸ்டருன்னு, மூணு பேரு வந்துட்டு போயிருக்காங்களே,''''ஆமா, மூணு மினிஸ்டர்க வந்தாங்க; ஆய்வு செஞ்சாங்க. ஒருத்தர் கூட, அரசு அலுவலகங்கள்ல இன்னும் சி.எம்., படத்தை ஏன் மாட்டலைன்னு, கேள்வி கேட்கலையே. நேத்துதான் அவசர அவசரமா, கார்ப்பரேசன் ஆபீசிலும், கலெக்டர் ஆபீசிலும் சி.எம்., படத்தை மாட்டியிருக்காங்க. இன்னும் மத்த ஆபீஸ்களுக்கு, போட்டோ போயி சேரலை. அந்தளவுக்கு செய்தித்துறை ரொம்பவே சுணக்கமா செயல்படுதாம்,''''அப்படியா,'' என்ற சித்ரா, மித்து, ெஹல்த்து மினிஸ்டருக்கு, நம்மூர்ல, தடுப்பூசிகளை பதுக்குற விஷயமே தெரியாது போலிருக்கே,''''ஆமாக்கா, மருந்து கிடங்குல, 6,000 டோஸ் மருந்து 'ஸ்டாக்' இருக்கறதா, கலெக்டர் ஸ்டேட்மென்ட் கொடுக்குறாரு. ஆனா, ஏழை எளிய ஜனங்களுக்கு ஊசி போடுறதில்லை. கூடுதலாவும் ஒதுக்கீடு கேட்டு வாங்குறதில்லை. ஒதுக்குற தடுப்பூசிகளும் எங்கே போகுதுன்னே தெரியலை; புரியாத மர்மமா இருக்கு,''''பலி எண்ணிக்கையும் தெனமும் 80-90ன்னு எக்குத்தப்பா போகுது; யாரிடமும் சொல்லக்கூடாதுன்னு சவக்கிடங்கு பொறுப்பாளர்களுக்கு, கறாரா உத்தரவு போட்டிருக்காங்களாம்,''''அதனால, காரமடை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையத்துல இருக்கற மயானங்களையும் பயன்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க. பொள்ளாச்சியில இருக்கற மயானத்தையும் பயன்படுத்துறதுக்கு, ஏற்பாடு நடந்துக்கிட்டு இருக்குதாம்,'' என்றபடி, 'டிவி'யை 'ஆன்' செய்தாள் மித்ரா.கொரோனா தொற்றை விரட்டக்கூடிய, பவுடர் மருந்து தொடர்பான செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.அதைக்கேட்ட சித்ரா, ''ரெண்டாவது டோஸ் தடுப்பூசி போடுறதுக்கு மக்கள் அலையாய் அலையுறாங்க. சூலுார் ஏரியாவுல இருக்கற ஒரு கவர்மென்ட் ஆஸ்பத்திரி டாக்டர், இலவசமா போட வேண்டிய ஊசிக்கு, ரெண்டாயிரத்துல இருந்து நாலாயிரம் வரைக்கும் வாங்குறாராம். நெருக்கடியான நேரத்துல, இப்படியும் காசு பறிக்கிறாங்களேன்னு ஜனங்க புலம்புறாங்க,''''அக்கா, இதுமட்டுமா செய்றாங்க. சாயிபாபா காலனியில இருக்கற ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரியில, கொரோனாவுல இறந்தவரு சடலத்தை கொடுக்குறதுக்கும் ஆயிரக்கணக்குல பணம் வாங்குறாங்களாம். கார்ப்பரேசன் அலுவலர்கள் கேட்குறாங்கன்னு சொல்லி, சடலத்தை 'பேக்கிங்' செய்றதுக்கு ரூ.8,000, ஆம்புலன்ஸ் கட்டணம், மயானத்துல எரியூட்டுற கட்டணம்னு சொல்லி, மொத்தம் ரூ.25 ஆயிரம் கேட்டாங்களாம். பேரம் பேசுனதுக்கு அப்புறம், ரூ.22 ஆயிரம் கொடுத்த பிறகே, சடலத்தை எரியூட்ட ஒப்படைச்சாங்களாம்,''''மயானத்துல சடலத்துக்கு மாலை அணிவிச்சு, மரியாதை செலுத்தனும்னா, அதுக்கு தனியா, ரூ.10 ஆயிரம் கேட்டிருக்காங்க. ஏற்கனவே, உறவை தொலைச்சிட்டு, பரிதவிப்புல நிக்குற குடும்பத்துக்காரங்க, என்ன செய்றதுன்னே தெரியாம திகைச்சுப் போயிட்டாங்களாம்,''.''அப்ப, மூணு மினிஸ்டர்ஸ் நம்மூருக்கு வந்து, என்ன நடவடிக்கை எடுத்தாங்க. இவ்வளவு அநியாயம் நடக்குதுன்னு சொல்றே,''''அக்கா, பொறுமையா கேளுங்க. நம்மூர்ல இன்னொரு விஷயமும் நடந்துக்கிட்டு இருக்கு. சின்னதா கிளினிக் வச்சு நடத்திட்டு இருந்த டாக்டர்களெல்லாம் குழுவா சேர்ந்து, காலியா இருந்த ஆஸ்பத்திரிகளை ஆக்கிரமிச்சிருக்காங்களாம். பெரிய, பெரிய ஆஸ்பத்திரிகளில் படுக்கையில்லாம தவிக்கிற நோயாளிகளை வளைச்சுப் போட்டு, 'அட்மிசன்' போட்டு, கறார் வசூல்ல ஈடுபடுறாங்களாம்,''''கேக்குறதுக்கே, ரொம்ப கொடுமையா இருக்குப்பா. கொரோனாவை விட்டுட்டு, வேற சப்ஜெக்ட் இருந்தா சொல்லு,''''ஆமா, எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. புதுசா நியமிச்ச போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் செயல்பாடு எப்படி இருக்குமோன்னு, பல இன்ஸ்.,களும் கலக்கத்துல இருக்காங்களாம்,'' என, 'ரூட்' மாறினாள்.''ஏம்ப்பா, புது கமிஷனர் கறார் பேர்வழியா,''''அவரு, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, சரக டி.ஐ.ஜி., வேலை பார்த்தப்போ, சில இன்ஸ்.,களையும், அதிகாரிகளையும் மாத்தியிருக்காரு. உடனே, முந்தைய ஆட்சியில அதிகாரத்துல இருந்தவங்க மூலம், அவரையே துாக்கிட்டாங்க,''''அப்போ, 'என் வேலையை ஒழுங்கா செஞ்சா இடம் மாத்துவாங்களா; ஒரு நாள் உண்மை ஜெயிக்குமுனு சொல்லிட்டு போனாரு'. இப்ப, கமிஷனரா திரும்பி வந்திருக்காரு. அதனால, இன்ஸ்.,கள் பலரும் நடுங்கிட்டு இருக்காங்க,''''மாவட்ட சுகாதார அதிகாரி மீதும் ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் சொன்னாங்களாமே,''''அவரு, யாரையும் மதிக்கறதில்லையாம். கட்சிக்காரங்க எந்த உதவி கேட்டாலும், செய்றதில்லையாம். ஹெல்த் மினிஸ்டர் கிட்ட உடன்பிறப்புகள் பொங்கியிருக்காங்க. பொறுமையா எல்லா புகாரையும் உள்வாங்கி இருக்காரு,''''அதே மாதிரி, சின்ன சின்ன பிரைவேட் ஹாஸ்பிடல்கள்ல கூட, லட்சக்கணக்குல பணம் பறிக்கிற விஷயத்தை கேள்விப்பட்டு, ஆய்வு கூட்டத்துல 'வார்னிங்' குடுத்துருக்காரு,'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள் மித்ரா.அவளை பின்தொடர்ந்த சித்ரா, ''ரேஷன் கடைக்காரங்க ஏகப்பட்ட சிக்கல்ல மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்களாமே,'' என, கேட்டாள்.''ஆமாக்கா, நம்ம மாவட்டத்துல, கூட்டுறவு சொசைட்டி கன்ட்ரோல்ல ஏகப்பட்ட ரேஷன் கடைக இருக்கு. பெரும்பாலான சொசைட்டிக்கு தலைவர்களா, அ.தி.மு.க.,காரங்க இருக்காங்க. நிவாரண நிதி கொடுக்கறது, டி.எம்.கே., கவர்மென்ட். மக்களுக்கு தொகை கொடுக்குறதுக்கு, சொசைட்டி தலைவரை, கடைக்கு கூப்பிட முடியலை; கூப்பிட்டாலும், அவுங்களா வர முடியாத நிலைமை,''''உடன்பிறப்புகள் பலரும் கடைக்கு வந்து, நாட்டாமை செய்றாங்க. அவுங்களை கட்டுப்படுத்த முடியாம, கடைக்காரங்க தவிக்கிறாங்க,''''இருந்தாலும், மினிஸ்டர் தலைமையில நடந்த ஆய்வு கூட்டத்துல, மாஜி அமைச்சர் வேலுமணி தலைமையில அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கலந்துக்கிட்டதா, சொன்னாங்களே,''''ஆமா, கலந்துக்கிட்டாங்க; மேடையில ஒக்கார வச்சு, கவுரவப்படுத்துனாங்க; பேசுறதுக்கும் வாய்ப்பு கொடுத்தாங்க. எதிர்க்கட்சிக்காரங்களா இருந்தாலும், உரிய மரியாதை கொடுக்குறோம்ங்கிறதை, டி.எம்.கே., கவர்மென்ட் பதிவு பண்ணியிருச்சு,''''இனி, சட்ட ரீதியா நடவடிக்கை எடுத்தா, அவுங்க செஞ்ச தப்புக்கு கெடைக்கற தண்டனைன்னு சொல்லிடுவாங்களாம்,''''ஓ... உதவியாளரை 'சஸ்பெண்ட்' செஞ்ச விவகாரத்தை சொல்றீயா,''''யெஸ், கரெக்ட்டா சொல்லிட்டீங்க. அந்த உதவியாளர்கிட்ட, 77 லட்சம் ரூபாய் இருந்துச்சாம்; வசமா மாட்டியிருக்காரு. என்னுடைய பணம்னு ஒத்துக்க முடியாது; யாரு கொடுத்ததுன்னு சொல்ல முடியாது; கொடுத்தவரு மாட்டிக்குவாரு. இந்த விவகாரத்துல என்ன பதில் சொன்னாலும், இலைக்கட்சி புள்ளிக்கு சிக்கல்னு, உயரதிகாரிகள் சொல்றாங்க,''''அதெல்லாம் இருக்கட்டும்...பேமென்ட்டுகளை நிறுத்தி வைக்கச் சொல்லி இருக்காங்களாமே,'' என, கிளறினாள் சித்ரா.''ஆமாக்கா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, கார்ப்பரேஷன் அதிகாரிங்க, உள்ளாட்சித்துறை அமைச்சர் நேருவை, மரியாதை நிமித்தமா சந்திக்க போயிருக்காங்க; கடுமையா, 'டோஸ்' விழுந்துச்சாம். முந்தைய ஆட்சிக்காலத்துல நடந்த வேலைக்கு, அவசர அவசரமா 'பேமென்ட்' கொடுக்குறதை நிறுத்தி வைக்கச் சொல்லி, உத்தரவு போட்டிருக்காராம். இப்போ, அஞ்சு வருஷ பைல்களையும், கிளறிட்டு இருக்காங்களாம்,''''அதிருக்கட்டும். அந்த இன்ஸ்., போலீஸ்காரங்களை ஒரு ரவுண்டு கட்டுனாராமே,''''அதுவா, எஸ்.பி.சி.ஐ.டி., போலீஸ்காரங்களை, கொரோனா வார்டுக்குள்ள நேர்ல போயி விசாரிச்சு, உண்மையை புட்டு புட்டு வைக்கணும்னு, சொல்லி இருந்ததை நாம பேசுனோம்ல. அதை யாரு, வெளியே சொன்னதுன்னு, போலீஸ்காரங்கள மிரட்டியிருக்காரு,'' என்றபடி, தக்காளி சட்னி அரைக்க ஆரம்பித்தாள் மித்ரா.முட்டை தோசை போடுவதற்கு தயாரானாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X