புதுடில்லி: இந்திய மருத்துவக் கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.கே.அகர்வால் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 62.
இந்திய மருத்துவக் கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.கே.அகர்வால், கொரோனா பெருந்தொற்று முதல் அலையின்போது பொதுமக்களுக்கு கொரோனா தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்கள் வாயிலாக தொடர்ந்து வழங்கி வந்தார்.
மேலும், பல்வேறு மருத்துவ அறிக்கைகளையும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு வழங்கினார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அகர்வால், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்றிரவு (மே 17) 11:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அகர்வாலின் மறைவை அவரது டுவிட்டர் பக்கத்தில் உறவினர்கள் தெரிவித்தனர். மேலும், தனது வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டும், என் மரணத்திற்காக வருந்தாதீர்கள் என அவர் கூறியிருந்ததாகவும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளனர். கே.கே.அகர்வாலின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதயநோய் சிகிச்சை நிபுணராக டாக்டர் அகர்வால், மருத்துவரான காலம் தொட்டு அகர்வால், மக்கள் நலன் காக்க பாடுபட்டவர். இவர் ஹார்ட் கேர் பவுண்டேஷன் ஆப் இந்தியாவின் தலைவராக இருந்தார். இவரின் சேவையை கவுரவிக்கும் வகையில் 2010ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE