சென்னை :'கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஓரளவு குறைந்தாலும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அதுகுறித்த எந்த கவலையும் பொறுப்பும் இல்லாமல், சாலைகளில் வாகனங்களில் வலம் வருவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பது மிகவும் அச்சமளிக்கிறது.ஒரு சில நகரங்களை தவிர, மற்ற நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி ஊர் சுற்றுவோரை கட்டுப்படுத்த, அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.
ஊரடங்கு என்றால் எவரும் வெளியே வரக்கூடாது. சாலைகளில் அவசர ஊர்தி தவிர, மற்ற வாகனங்கள் வலம் வரக்கூடாது. அந்த அளவுக்கு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த கசப்பு மருந்துகள் எல்லாம் அடுத்த சில வாரங்களுக்குத் தான். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி விட்டால், மக்கள் எந்த அச்சமும் இல்லாமல் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வலம் வரலாம்.ஊரடங்கை கடுமையாக்கவும் சாலைகளில் வாகன போக்குவரத்தை தடுக்கவும், தமிழக சிறப்பு காவல்படை, ஆயுதப்படை, ஊர்க்காவல் படையினரை சாலைகளில் நிறுத்த வேண்டும்.
தேவைப்பட்டால், மத்திய துணை ராணுவ படைகளையும், தமிழகத்திற்கு அழைக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
அன்புமணி பாராட்டு
முதல்வர் ஸ்டாலினுக்கு, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வேகமாக பரவி வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்றை கட்டுப்படுத்த, தாங்கள் முதல்வராக பதவியேற்ற பின் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு, என் பாராட்டுக்கள். பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதும், அதிலிருந்து மக்களை காப்பதும், மிகவும் சவாலான பணி என்பதில் ஐயமில்லை. கொரோனா தடுப்பு பணிகளுக்காக, அனைத்து தரப்பினரும் நிதி வழங்கும்படி, தாங்கள் வேண்டுகோள் விடுத்தீர்கள். பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் - எம்.பி.,யின் ஒருமாத ஊதியம், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கப்படும் என, ராமதாஸ் அறிவித்திருந்தார். என் ஒரு மாத ஊதியமான, 1 லட்சத்து, 89 ஆயிரம் ரூபாயை, வங்கிப் பரிமாற்றத்தின் வாயிலாக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளேன்.இவ்வாறு, அன்புமணி கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE