வரும் 21ல், ராஜிவ் நினைவு தினம் வருகிறது. அன்றைய நாளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளின் கீழ், அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். ஒவ்வொரு எம்.பி., - எம்.எல்.ஏ.,வும், தங்கள் தொகுதியில், ஒரு லட்சம் பேருக்கு முக கவசம் வழங்க வேண்டும்.
-தமிழக காங்., தலைவர் அழகிரி

'வீட்டிலிருந்தபடி அஞ்சலி செலுத்தினாலே போதும். ஒரு லட்சம் முக கவசம் கொடுக்கிறேன் பேர்வழி என, கொரோனாவை கூட்டி விடக் கூடாது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை
கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில், அரசியலுக்கு அப்பாற்பட்டு, இப்போதைய அரசுக்கு ஒத்துழைப்போம். கொரோனாவை, தடுப்பூசி மட்டுமே விரட்டும். எனவே, நாட்டு மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
-தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை
'தமிழக அரசின் அனைத்து கட்சி கொரோனா ஒழிப்பு குழுவில் இடம் பெற்றுள்ளீர்கள்; தொடர்ந்து பணியாற்றி, கொரோனாவை விரட்டுங்கள்...' என, பாராட்டத் தோன்றும் வகையில், தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை
ஹிந்து ஆலயங்களின் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என சொன்ன தற்காக, ஜக்கி வாசுதேவ் மீது, தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் குற்றம் சாட்டுகிறார். அவரை மிரட்டிப் பார்த்து, ஹிந்துக்களை கிள்ளுக்கீரைகள் என நினைக்கிறார்.
-தமிழக பா.ஜ., கலாசார பிரிவு தலைவர் நடிகை காயத்ரி ரகுராம்

'இவர்கள் நினைப்பது போல, அவர் தனி மனிதரல்ல; ஹிந்துக்களின் குரலாக ஒலிப்பவர். எனவே, அமைச்சரின் மிரட்டல் எடுபடாது என்கிறீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., கலாசார பிரிவு தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் அறிக்கை
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற, ஈ.வெ.ரா.,வின் கனவை நனவாக்கியவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவர் இயற்றிய சட்டப்படி, அர்ச்சகர் ஆக காத்திருப்போரை பதவியில் நியமித்து, வரலாற்று சாதனையை, முதல்வர் ஸ்டாலின் படைக்க வேண்டும்.
-திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை

'முதலில் அவரை, கொரோனாவை ஒழிக்க விடுங்கள். அதன் பிறகு, அர்ச்சகர் விவகாரத்தை வைத்துக் கொள்ளலாம். ஏனெனில், எல்லா கோவில்களிலும் அர்ச்சகர்கள் போதுமான எண்ணிக்கையில் உள்ளனர்...' என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை
கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்படுபவர்களில், கட்டுமான தொழிலாளர்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், தடுப்பூசி வழங்குவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்கள் இறந்தால், ஐந்து லட்சம் ரூபாய், நல நிதியிலிருந்து வழங்க வேண்டும்.
- ஏ.ஐ.டி.யு.சி., கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலர் ரவி
'கட்டுமானத் தொழிலாளர் நலன் காப்பாற்றப்படத் தான் வேண்டும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், ஏ.ஐ.டி.யு.சி., கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலர் ரவி அறிக்கை