சட்டசபை தேர்தல் தோல்விக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச்செயலர் குமாரவேல், தலைமை அலுவலக பொது செயலரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட சமூக ஆர்வலர் பத்மபிரியா உள்ளிட்டோர் கட்சியில் இருந்து விலகினர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலராக இருந்த முருகானந்தம் திருச்சியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கட்சியில் இணைந்த போது எனக்கான சுதந்திரமும், ஜனநாயகமும் கொடுக்கப்பட்டது. இதனால், கட்சியில் என்னால் முழுமையாக உழைக்க முடிந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக கட்சியில் சர்வாதிகாரம் தலைதூக்கி ஜனநாயகம் அற்றுபோய் விட்டது. கட்சியின் தலைவர் மக்கள் நீதி மய்யத்தை நமது கட்சி என்பதை மறந்து அது என்னுடைய கட்சி என கூற ஆரம்பித்து விட்டார்.

சட்டசபை தேர்தலில் கட்சியில் எந்த நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்தாமல் , பலவீனமான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 100க்கும் அதிகமான இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதுதான் தோல்விக்கு காரணம். எதற்காக நூறு இடங்களை கூட்டணிக்கு ஒதுக்கினார் என்பது இதுவரை தெரியவில்லை. கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் பல்வேறு கேள்விகளை நான் கமலிடம் எழுப்பினேன். ஆனால், அவர் எதற்கும் பதில் கூறவில்லை.

மக்கள் நீதி மய்யத்தின் தலைமை சரியான தலைமை அல்ல. சரியான பாதையில் அந்த கட்சி வழி நடத்தப்படவில்லை. தோல்வியை அவர் ஏற்காமல், எங்கள் மீது திருப்பி விட்டார். ஆனால், மநீம தோல்விக்கு கமல் தான் காரணம். மநீம கட்சியில் வகித்த பொதுச்செயலர் பொறுப்பில் இருந்தும், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுகிறேன். என்னுடன் சேர்ந்து கட்சியில் 15 நிர்வாகிகள் கட்சியில் இருந்துவிலகி விட்டனர். வரும் நாட்களில் மேலும் சிலர் விலகுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE