சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பள்ளி கல்வி இயக்குனர் பதவியை ரத்து செய்ததற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பள்ளிக்கல்வித்துறையில் நீண்டகாலமாக நடைமுறையிலிருக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் எனும் பதவியினை நிர்வாகச்சீர்திருத்தம் என்ற பெயரில் ரத்து செய்து ஆணையமாக மாற்ற முடிவெடுத்து, தமிழக அரசு செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது. அரசின் இம்முடிவு கல்வியாளர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் பல்வேறு விதமான குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
பள்ளிக்கல்வி இயக்குனர் பொறுப்பை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாக அவரது பொறுப்புகளை பள்ளிக்கல்வி ஆணையரே மேற்கொள்வார் என்பது ஏற்கத்தக்கதல்ல. பள்ளிக்கல்வி ஆணையர் பதவி என்பது ஐ.ஏ.எஸ். படித்த நிர்வாக அதிகாரிகளுக்கானது. அவர்களுக்கு பள்ளிக்கல்வி முறை குறித்தும், பள்ளி ஆசிரியர்களின் சிக்கல்கள், மாணவ மாணவியரின் தேவைகள், பாடத்திட்டச் சிக்கல்கள் குறித்த அடிப்படை அனுபவ அறிவும், நடைமுறைச்சிக்கல்கள் சார்ந்த தீர்வுகள் எடுக்கும் திறனும் இருக்கும் என எதிர்பார்ப்பது தவறானது.
எனவே, பள்ளிக்கல்வி இயக்குனரகத்தை மூடிவிட்டு அதை ஆணையமாக மாற்றும் தமிழக அரசின் முடிவு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கல்வியாளர்கள் அச்சப்படுவது முழுக்க முழுக்க நியாயமானது.

அதுவும் பள்ளிக்கல்வி இயக்குனர் பதவியை ரத்து செய்வது குறித்து பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித்துறையைச் சார்ந்த நிர்வாகிகள் இவர்களுக்கிடையே எந்தக் கருத்து கேட்புக் கூட்டமும் நடக்காத சூழலில் தமிழக அரசு திடீரென இம்முடிவை அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. பள்ளிக்கல்வித்துறையின் நலனைப் பாதிக்கும் இம்முடிவு ஆசிரியப் பெருமக்களிடையேயும், கல்வியாளர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஆகவே, மாணவர்கள், ஆசிரியர்களின் நலனை மனதிற்கொண்டு பள்ளிக்கல்வி இயக்குனரகத்தை ஆணையமாக மாற்றும் அரசாணையை ரத்து செய்து, ஏற்கனவே நடைமுறையிலிருந்த பழைய முறையையே பின்பற்ற வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறி உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE