புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கம் சற்றுக் குறைந்து வந்தாலும், தமிழகத்தில் புதிதாக பாதிப்புகளின் எண்ணிக்கை பல நாட்களாக குறையாமல் இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக சமீபத்திய தேர்தலில் கூடிய கூட்டத்தின் காரணமாக கொரோனா எகிறி வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இது போல் மேற்குவங்கம், அசாம், கேரளாவிலும் கொரோனா உயர்ந்திருக்கிறது.
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளன. இதனால், தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 4 லட்சம் என்ற உச்சத்தில் இருந்து படிப்படியாக குறைந்துள்ளது. குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,67,334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,54,96,330 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 4,529 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,83,248 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,19,86,363 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3,89,851 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 1.11 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 86.23 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை சற்று ஆறுதல் அளித்தாலும், தமிழகத்தின் நிலை மக்களை பீதியடையச் செய்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் மே 15ம் தேதி, 33,658 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 16ம் தேதி 33,181 பேரும், 17ம் தேதி 33,075 பேரும், நேற்று அதைவிடச் சற்று குறைவாக 33,059 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 64 ஆயிரத்து 350ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 2,42,929ஆக அதிகரித்துள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் மேல் இருந்த பாதிப்பு, தற்போது 2.67 லட்சமாக குறைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில், புதிதாக பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை 33 ஆயிரத்தில் இருந்து பல நாட்களாக குறையாமல் இருப்பது வேதனையளிக்கிறது. முழு ஊரடங்கை அமல்படுத்தினால் மட்டுமே இந்த நிலையில் மாற்றம் வரும்.