புதுடில்லி:'இந்திய சட்டங்களுக்கும், இந்தியர்களின் தனிநபர் தகவல் பாதுகாப்புக்கும் எதிராக உள்ளதால், புதிய தனிநபர் பாதுகாப்பு கொள்கை திரும்பப் பெற வேண்டும்' என 'வாட்ஸ்ஆப்' நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒரு வாரம் கெடு விதித்துள்ளது.
சமூக வலைதளமான 'வாட்ஸ் ஆப்' இந்திய பயனாளிகளுக்கான தன் தனிநபர் தகவல் பாதுகாப்பு கொள்கையை மாற்றியுள்ளது. அதன்படி, பயனாளிகளின் தகவல்கள், அதன் தாய் நிறுவனமான 'பேஸ்புக்' சமூக வலைதளத்துடன் பகிரப்படும்.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து இதை அமல்படுத்துவதை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த புதிய கொள்கை, இம்மாதம் 15ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக வாட்ஸ் ஆப் கூறியுள்ளது. ஆனால், கொள்கையை ஏற்காதவர்களின் கணக்குகள் நீக்கப்படாது என்றும் கூறியுள்ளது. இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன. இந் நிலையில், வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நேற்று முன்தினம் 'நோட்டீஸ்' ஒன்றை அனுப்பிஉள்ளது.

இது குறித்து தகவல் தொழில்நுட்ப அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:'இந்த புதிய கொள்கை, இந்திய சட்டத்துக்கு எதிராக உள்ளது. மேலும், இந்தியர்களின் தனிநபர் தகவல் பாதுகாப்புக்கு எதிராகவும் உள்ளது. அதனால், அதை திரும்பப் பெற வேண்டும்' என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ஒரு வாரத்துக்குள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அவ்வாறு பதிலளிக்காவிட்டால், இந்திய சட்டங்களின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், ஐரோப்பிய நாடுகளில் உள்ள பயனாளிகளைப் போல் அல்லாமல், இந்தியர்களை வேறுபடுத்தி பார்க்கும் வகையிலும் அதன் கொள்கைகள் உள்ளதும் சுட்டி காட்டப்பட்டுள்ளது. இது, இந்திய மக்களை இழிவுபடுத்தும் செயலாகும் என மத்திய அரசு கண்டிப்புடன் கூறியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.