பெய்ஜிங்: தென் சீனக் கடலில் தங்கள் நாட்டின் பிராந்திய பரப்பிற்குள் அமெரிக்க போர் கப்பல் சட்டவிரோதமாக நுழைந்ததாக சீனா தெரிவித்துள்ளது.
தென் சீன கடல் பகுதியை ஏகபோகமாக சீனா சொந்தம் கொண்டாட முயல்கிறது. இதனை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தென் சீன கடல் பகுதிக்கு, சீனா உரிமை கோர முடியாது. அதனை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஒருபோதும் ஏற்காது. தன் கடலோரத்தில் இருந்து, 12 கடல் மைல் தாண்டி, எந்த பகுதியையும் சீனா சொந்தம் கொண்டாட முடியாது என ஏற்கனவே அமெரிக்கா கூறியுள்ளது.
மேலும் தங்கள் நாட்டின் போர் கப்பல்களை தென் சீன பிராந்தியத்தில் இயக்கி வருகிறது. இது சீனாவுக்கு குடைச்சலாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க போர் கப்பல் சீனா ஆக்கிரமித்துள்ள தீவு எல்லை அருகே கப்பலை இயக்கின.
இந்நிலையில் இன்று (மே 20) பாரசெல் தீவுகளுக்கு அருகிலுள்ள தங்களின் பகுதிக்குள் அமெரிக்க போர் கப்பல் நுழைந்ததாக, சீன ராணுவத்தின் தென் பகுதி படைப்பிரிவின் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“அமெரிக்க கப்பல் படையின் கர்டிஸ் வில்பர் என்ற போர் கப்பல் எங்கள் பிராந்தியத்திற்குள் நுழைந்தது. எங்களின் கப்பல்களும், விமானங்களும் அக்கப்பலை பின் தொடர்ந்தன. அமெரிக்காவின் இந்த செயலை எதிர்க்கிறோம். இது இறையாண்மை மற்றும் பிராந்திய அமைதியை மீறுவதாகும்.” என்றார்.
அதற்கு பதிலளித்துள்ள அமெரிக்க கடற்படை, பாரசெல் தீவுகளுக்கு அருகே பயணிப்பதற்கான உரிமையும், சுதந்திரமும் தங்களுக்கு உண்டு என அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளது. சர்வதேச சட்டப்படி தாங்கள் பயணித்தது தவறில்லை. முன் கூட்டியே அறிவிக்க வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE