தமிழக முதல்வருக்கு:
மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் இந்த சூழ்நிலையில், புதிதாகத் துவங்கும் ஆட்சியில், நம்பிக்கையூட்டும் வகையிலும், மக்களுக்கு உடனடியாக தேவையான சில நல்ல திட்டங்களையும் ஆரம்பக்கட்டத்திலேயே துவக்கியுள்ளீர்கள். அந்த நம்பிக்கைக்கு வலிமையான ஒரு அடித்தளத்தை அமைத்து விட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்.தன் தோல்வி மூலம் பாடம் கற்றுக் கொண்டவன் அறிவாளி; அடுத்தவன் தோல்வியில் பாடம் கற்றுக்கொண்டவன் மிகச்சிறந்த அறிவாளி.முந்தைய அரசின் தோல்விக்கான காரணங்களை அறிந்து வைத்திருக்கும் இன்றைய அரசு, அந்த குறைகளை நிறைவு செய்தால் தான், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதுடன், அடுத்த தேர்தலையும் துணிவோடு சந்திக்க இயலும்.
அரசியல் நாகரிகம்
முதல்வரின் ஆரவாரமில்லாத, அமைதியான, ஆனால் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல்படுத்தப்பட்டுள்ள முதல் திட்டங்கள், அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள், அவரது முதிர்ச்சி பெற்ற அரசியல் அனுபவத்தை வெளிப்படுத்துகின்றன.சூழ்நிலையை உத்தேசித்து, வெற்றியை விமரிசையாக்காத பெருந்தன்மை, பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சியினருக்கு அளிக்கப்பட்ட உரிய மரியாதை, எதிர்க்கட்சி ஆகிவிட்ட முன்னாள் ஆட்சியினரை பற்றி விமர்சிக்காத அரசியல் நாகரிகம் போற்றத்தக்கது. இவை தொடருமானால், இந்த ஆட்சி, மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து விடும்.
கொரோனா தொற்று சிகிச்சை சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க அனைத்துக் கட்சியினரின் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளீர்கள். அந்த குழுவில் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு முக்கியத்துவம் கொடுத்து இடம்பெற செய்தது நல்ல யுக்தி.
தேர்தலுக்கு முன்பும், தேர்தல் பிரசாரத்தின் போதும், முதல்வர் சந்தித்த நாகரிகமற்ற, பண்பாடற்ற விமர்சனங்கள் ஏராளம். அப்படி துாற்றிய பலரும் தங்களின் தவறான கணிப்புக்காக வெட்கப்படும்படி செய்துள்ளீர்கள். அதை ஒரு சாதனையாகக் கூட குறிப்பிடாதது போற்றுதலுக்குரிய பெருந்தன்மை. 'முகஸ்துதியையும், பொய்யுரையையும் தவிருங்கள்' என்று கட்சியினருக்கு கட்டளையிட்டிருப்பது அனுபவமிக்க அறிவுரை. ஆனால், முதல்வர் வாழ்க்கையின் வெற்றிப்பாதை, வருங்கால இளைஞர்களுக்கு வழிகாட்டுதலாக அமையும் என்பதால் அதைப் பற்றி பேசுவது தவறில்லை.
கட்சித் தலைமையையும், தங்கள் பகுதித் தலைவர்களையும் திருப்தி படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், அராஜகத்தில் ஈடுபடும் சில அடிமட்டத் தொண்டர்களை அடையாளம் கண்டு, அடக்கி வைக்க வேண்டும்.தேவைப்பட்டால் களையெடுக்கவும் தயங்கக்கூடாது. அது பல புதிய உண்மைத் தொண்டர்களைக் கட்சிக்கு கொண்டு வரும் என்பதை முதல்வர் உணர்ந்து கொள்ள வேண்டும். 'அம்மா' உணவகத்தைச் சேதப்படுத்தியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையும், அந்த உணவகத்தைச் சரி செய்து கொடுக்க உத்தரவிட்டதும் நடுநிலையாளர்களின் மனதில் நம்பிக்கையை ஊட்டியிருக்கிறது.
வரவேற்கத்தக்கது
தேர்தல் சமயத்தில் பெறப்பட்ட மனுக்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க, தனி அதிகாரியை நியமித்ததும், அதற்கென்று காலக்கெடுவை நிர்ணயித்ததும் மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை. இது தொடர வேண்டும் என்பதே மக்கள் விருப்பம். ஆளும் அரசின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படுத்தும் ஒரே விஷயம், அதிகாரிகளின் அலட்சியமும், மெத்தனப்போக்கும் தான். மக்களின் அபரிமிதமான விழிப்புணர்வும், அதற்கு துணை நிற்கும் சமூக ஊடகங்களும், அதிகாரத்தில் இருந்து கொண்டு தவறு செய்பவர்களைத் திணற அடித்துக்கொண்டிருக்கின்றன என்பதை மறந்து விடக்கூடாது.
அரசு அதிகாரிகளில் பலரின் ஒட்டுமொத்த கவனமும், அரசு பொறுப்பில் இருக்கும் ஆட்சியாளர்களின் நன்மதிப்பை சம்பாதித்து, தங்களின் வாழ்க்கை வசதியை வளப்படுத்திக் கொள்வதில் மட்டுமே இருக்கிறது. இதில் விதிவிலக்காக சில அதிகாரிகள் இருக்கின்றனர். இந்த 'சில' என்பது 'பல' என்று அதிகரித்தால் போதும். அந்த விதிவிலக்கான அதிகாரிகளும் தங்களால் தாக்குப்பிடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படும்போது, விருப்ப ஓய்வில் வெளியேறி விடுகின்றனர். சில அதிகாரிகளின் சொந்த நலனை, ஆட்சியில் இருப்பவர்கள் கவனித்துக் கொள்கின்றனர். ஓட்டுப்போட்டு ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்த மக்களை யார் கவனிப்பது என்பது தான் நடுநிலையாளர்களின் கேள்வி.
ஒரு ஆளும் கட்சி, தேர்தலில் தோல்வியைச் சந்திப்பதற்கு மற்றுமொரு காரணம், தங்களின் மக்கள் பிரதிநிதிகள், மக்களை மறந்து விடுவது தான். அப்படி மறந்த மக்கள் பிரதிநிதிகளை மக்களும் மறந்து விடுகின்றனர். அடுத்த தேர்தலில் அவர்கள் போட்டியிட இயலாத நிலை ஏற்படுகிறது. போட்டியிட்டாலும் வெற்றி பெற இயலாத நிலை உருவாகிறது. கட்சி சார்பில்லாத நடுநிலையான மக்கள் தங்களுக்கு ஓட்டளிக்கவில்லை; ஓட்டளித்திருக்க மாட்டார்கள் என்ற சந்தேகத்தின் படி, அவர்களின் நலனைப் புறக்கணிப்பது ஒரு நல்ல அரசுக்கு அழகல்ல. உண்மையில் அது நாகரிகமற்ற அரசியல்.
அந்த பகுதியில் போட்டியிட்டு, வெற்றி வாய்ப்பை இழந்த ஆளும் கட்சி வேட்பாளர் கூட, அந்தத் தொகுதி மக்களை விரோதிகளாகப் பார்க்க கூடாது. மாறாக, ஆட்சியாளர்களிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, நன்மைகளை செய்து கொடுத்தால், மக்களின் நன்மதிப்பை பெறுவதோடு, அடுத்த தேர்தலில் வெற்றியையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். தன் தொகுதியில் வாழும் மக்களின் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றுவது தான் மக்கள் பிரதிநிதிகளின் கடமை. தவிர, மக்களை தங்களின் கோரிக்கைகளுக்காக சாலை மறியல், அரசு சொத்துக்களை நாசம் செய்யும் போராட்டம் ஆகியவைகளில் ஈடுபட்டு கைதாக வைப்பது சரியல்ல.
மேலும், அவர்களை அடக்கத் தவறியதாக காவல் துறையை குற்றம் சாட்டுவதும் அவர்களின் கடமை அல்ல. இதை உணராத மக்கள் பிரதிநிதிகளுக்கு முதல்வர் என்ற முறையிலும், கட்சித் தலைவர் என்ற முறையிலும் அறிவுரை கொடுக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அந்த உறுப்பினர் பற்றிய, அவர் தொகுதி மக்களின் கருத்துகளை கேட்டறிந்து பாராட்டலாம் அல்லது கண்டிக்கலாம்.
எதிர்பார்ப்பு
இதன் மூலம், கட்சி உறுப்பினர்களுக்கு அவர்களின் கடமையை உணர்த்துவதோடு, அவர்கள் கண்ணியத்துடனும், கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்வர் என்று எதிர்பார்க்கலாம். 'முதல்வரின் கார், கவர்னர் மாளிகைக்கு சென்றாலே அமைச்சர்கள் வயிற்றில் புளியை கரைக்க வேண்டும். 'என்னை, மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., தனியாக சந்தித்து பேசினார் என்றாலே, அமைச்சர்கள் மத்தியில் அச்சம் சூழ்ந்து கொள்ளும்' என்று, முன்னாள் போலீஸ் உளவுத்துறை தலைவர் மோகன் தாஸ், தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமைச்சர்களும், அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள துறைகளும் மிகவும் கவனமாக சிந்தித்து, தகுதியானவர்களை தேர்வு செய்திருப்பதாகத் தெரிகிறது. வரும் காலத்தில் அவர்களின் செயல்பாடுகள் தான் அதை உறுதி செய்ய வேண்டும். ஒரு ஆட்சி, பதவிக்கு வந்த தினத்திலிருந்தே, அந்த ஆட்சியின் ஒவ்வொரு செயல்பாட்டிலும், அமல்படுத்தும் ஒவ்வொரு திட்டத்திலும் குற்றம் கண்டுபிடிப்பது எதிர்க்கட்சியினரின் கடமையாகி விட்டது. ஜனநாயகம் அதை அனுமதிக்கிறது.
ஆளும் கட்சியின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் எதிரணியின் முயற்சிக்கு ஆயுதமாகப் பயன்படுவது, சட்டம் - ஒழுங்கு பற்றிய குற்றச்சாட்டு. அதற்கு அவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் இலக்கு, முதல்வர் பொறுப்பில் உள்ள காவல் துறை.எங்கோ, அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழும் தவறுகளையும், கவனக்குறைவுகளையும் ஊதிப்பெரிதாக்கி, மக்கள் முன் பூதாகரமாகக் காட்டும் யுக்தியை எதிரணியினர் கையாளுகின்றனர். ஆனால், இதை முற்றிலும் மறுக்கும் அளவுக்கு, காவல் துறையின் செயல்பாடுகள் இல்லை.
எடுத்ததெற்கெல்லாம் போராட்டம் என்று, ஆளும் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கத்தோடு, சம்பிரதாயமாக நடத்தப்படும் போராட்டங்கள், காவல் துறையின் செயல்பாட்டை முடக்குகிறது.இது தவிர, மேலதிகாரிகளால் நடத்தப்படும் தேவையற்ற, சம்பிரதாய ஆலோசனைக்கூட்டம் போன்றவற்றால், காவல் நிலையத்துக்கு வரும் சிறு புகார் மனுக்களை போலீஸ் அதிகாரிகள் தீர்த்து வைக்கத் தவறுகின்றனர். அதுவே பெரிதாக உருவெடுத்து, சட்டம் - ஒழுங்கு பிரச்னையாக மாறுகிறது.
குற்றங்கள் குறைப்பு
இதனால், காவல் துறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுவதற்கு பதிலாக வெறுப்பு ஏற்படுகிறது. சமூக காவல் பணி என்பது, மக்களுக்கு தேவையான காவல் துறை சேவையை, மக்களின் ஒத்துழைப்போடும், துணையோடும் மக்களுக்கு கொடுப்பது. இந்த முறை பல வெளிநாடுகளில் வெற்றிகரமாக செயல் படுத்தப்பட்டு, குற்றங்கள் குறைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஒரு சிறந்த செயல்முறையைப் பயன்படுத்தினால் ஒழிய, வரும் காலங்களில் குற்றங்களை குறைத்து, மக்களின் நன்மதிப்பை, காவல் துறை மட்டுமல்ல, அரசும் பெற இயலாது. எனவே, காவல்துறை பணியில், முதல்வர் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
ஆட்சியின் நல்ல ஆரம்பமாக, இப்போது குறுகிய காலத்தில் அதிக அளவிலான மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டிருக்கின்றன. இதே முறை காவல் துறையிலும் செயல்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்தால், ரவுடிகள் பிரபலமாவதும், தாதாக்கள் உருவாவதும் தவிர்க்கப்படும். காவல் துறையின் கண்ணியம் காப்பாற்றப்படும்!
மா.கருணாநிதி
காவல் துறை கண்காணிப்பாளர், ஓய்வு
தொடர்புக்கு:
மொபைல்: 9840488111
இ - மெயில்: spkaruna@gmail.com