பத்தாண்டுகளில் 75 படங்களில் நடித்து மக்கள் மனங்களை கவர்ந்தாலும் தனுஷிற்கு அம்மா ஆக நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறுகிறார் நடிகை கம்பம் மீனா. இயக்குனர் பாரதிராஜாவால் தெற்கத்தி பொண்ணு சீரியலில் அறிமுகமாகி, மணிரத்தினம், லோகேஷ்கனகராஜ் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்திருக்கும் தெற்கத்தி பொண்ணு நான் என்கிறார்.
சினிமா தந்த புகழால் பாக்யலட்சுமியில் செல்வி, தேன்மொழி பி.ஏ.,யில் பவானி, பாண்டியன் ஸ்டோர்ஸில் அண்ணி கதாபாத்திரங்களில் டிவி சீரியல்களில் பிஸியாகிஇருக்கிறார். கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு வந்த கம்பம் மீனா பேசியதிலிருந்து... கம்பத்தில் பத்தாம் வகுப்பு படித்த போதே திருமணமாகி விட்டது. இரு மகன்களும் பிறந்தனர். எல்.ஐ.சி., முகவரானேன். கம்பம் சுற்றுவட்டாரத்தில் நாச்சிமுத்துமீனாவை (அதாங்க என் உண்மையான பெயர்) தெரியாதவங்களே இருக்க முடியாது. மூலை முடுக்கெடுக்கலாம் நானே மொபட்டை ஓட்டி செல்வேன்.
2001 காலகட்டத்தில் இயக்குனர் பாரதிராஜா தெற்கத்திபொண்ணு சீரியலை தேனி மாவட்டத்தில் படமெடுத்து கொண்டிருந்தார். அதில் ஒரு கதாபாத்திரத்திற்கு கிராம பெண் தேவையாயிருந்தது. நான் மொபட்டில் சுற்றுவதை பார்த்திருந்த எங்கள் ஊரை சேர்ந்த அரசன், என்னை தேனிக்கு அழைத்து சென்று பாரதிராஜா முன்னால் நிறுத்தினார். அவரும் ஒரு வசனத்தை கொடுத்து நடித்து காட்ட கூறினார்.
நான் பேசிய வசனத்தை பார்த்த பாரதிராஜா, நாளைக்கே படப்பிடிப்புக்கு வந்துடு என கூறி விட்டார். அப்படி தான் சீரியலில் நடிக்க துவங்கினேன். அப்போது டூயட் நிறுவனம் மயிலு என படத்தை எடுத்து கொண்டிருந்தது. அதில் சிறிய ரோலில் நடித்தேன். அதையடுத்து சிலம்பாட்டம், வெடிகுண்டு முருகேசன், பூவா தலையா என பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிட்டியது.
2010ல் சென்னை சென்றேன். ஏற்கனவே இருந்த அறிமுகத்தால் மாயாண்டி குடும்பத்தார், முண்டாசுபட்டி, களவாணி, மாத்தி யோசி என வாய்ப்புகள் வரவேற்றன. மணிரத்தினத்தின் ராவணன், கடல் படங்களில் நடித்தேன். ராவணன் ஹிந்தி ரீமேக்கிலும் நடித்திருக்கிறேன். அசுரன் படத்தில் பத்து சீன்களில் நடித்தேன். தணிக்கையில் பல சீன்கள் வெட்டப்பட்டு விட்டன. லோகேஷ் கனகராஜின் கைதி, சகுனி என பத்தாண்டுகளில் 75 படங்களுக்கு மேல் அண்ணி, அம்மா, தங்கை, அக்கா கதாபாத்திரங்களில் நடித்து விட்டேன்.
ஆனாலும் என் மகன் மாதிரியுள்ள நடிகர் தனுஷூக்கு அம்மாவாக நடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் இருக்கிறது.மறைந்த இயக்குனர் தாமிராவின் இரட்டை சுழி படத்தில் இயக்குனர் பாரதிராஜா மருமகள் ரோலில் நடித்தேன். படப்பிடிப்பில் பாரதிராஜா 'நான் அறிமுகப்படுத்திய நீ எனக்கே மருமகளாக நடிக்க வந்துட்டாயா' என பாராட்டியதை மறக்க முடியாது.தற்போது 4 சீரியல்களில் நடித்து கொண்டிருக்கிறேன். பெரியதிரை, சின்னதிரையிலும் ஊர் பெயரை காப்பாற்றுமளவுக்கு மக்கள் மனங்களில் இடம் பிடிக்க வேண்டுங்க என்றார்.
வாழ்த்த 98659 69997
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement