புதுடில்லி: மத்திய அரசுடன் நடந்த ஆலோசனைக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி , தமிழகத்தில் கட்டாயம் பிளஸ் 2 தேர்வு நடக்கும் என தெரிவித்தார்.

சி.பி.எஸ்.இ., மற்றும் பல மாநில கல்வி வாரியங்கள், கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளன. பிளஸ் 2 வகுப்பு தேர்வு தள்ளி வைக்கப் பட்டு உள்ளது. அதுபோல, உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப் பட்டு உள்ளன. மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் பாதுகாப்பு உட்பட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து, பிளஸ் 2 தேர்வு நடத்துவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக, மத்திய கல்வி அமைச்சகம், அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பி இருந்தது.

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு மற்றும் உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்து, இன்று அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கல்வி அமைச்சர்கள், செயலர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜாவேத்கர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தின் சார்பில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் செயலாளர் தீரஜ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாநில அரசுகள் தெரிவிக்கும் கருத்துகள் அடிப்படையில், பிளஸ் 2 தேர்வை நடத்துவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும்.
இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கட்டாயம் நடக்கும். கொரோனா பரவல் குறைந்த பிறகு, பிளஸ் 2 தேர்வு தொடர்பாக முடிவு எடுக்கப்படும். மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு நடத்தவில்லை எனில், தமிழகத்தை விட்டு வேறு மாநிலத்திற்கு அல்லது மத்திய கல்வி நிறுவனங்களுக்கு படிக்க செல்லும் மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். எனவே கண்டிப்பாக பிளஸ் 2 தேர்வு நடக்கும்.
சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து மத்திய அரசிடம் வரும் செவ்வாய் கிழமைக்குள் தெரிவிக்கப்படும். ஜேஇஇ நுழைவு தேர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு கூடாது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் நீட் நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE