திருப்பூர்:திருப்பூரில், நேற்று, அனைத்து கடைகளிலும், மக்கள் திரண்டனர். கடைவீதிகள் 'கலகல'த்தன.நேற்று முன்தினமும், நேற்றும் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. திருப்பூரில், ஞாயிறு என்றாலே, மக்கள் கூட்டத்தால், கடை வீதிகள் 'கலகல'க்கும். நேற்று வழக்கத்தை விட மிக அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
இறைச்சி, காய்கறி, மளிகை, துணி, நகை என அனைத்து கடைகளும், நேற்று திறந்திருந்தன. கடைகள் அனைத்திலும் வாடிக்கையாளர் கூட்டம் காலை முதல் இரவு வரை குறைவின்றிக் காணப்பட்டது.பிரதான வீதிகள், குறுக்கு வீதிகளில் உள்ள கடைகளிலும் வாடிக்கையாளர் கூட்டம் நிரம்பி வழிந்தது. அனைத்து ரோடுகளிலும் வாகனப் போக்குவரத்து குறைவின்றி இருந்தது.பெரும்பாலான கடைகளில் 'சமூக இடைவெளி'யே காணப்பட வில்லை. ஆங்காங்கே முக கவசம் குறித்த விழிப்புணர்வு கூட இல்லாமல் சிலர் சுற்றித் திரிந்தனர்.
சில நாட்களாக தடை விதிக்கப்பட்ட ஓட்டல் மற்றும் பேக்கரிகளும் நேற்று திறக்கப்பட்டு, வாடிக்கையாளர் கூட்டம் அதிகவில் இருந்தது.சமையலுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது; பொழுது போக்குவதற்கு வசதியாக தாயக் கட்டை, கேரம், செஸ், சீட்டுக்கட்டு போன்றவற்றையும் பலர் வாங்கிச் சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE