கோவை:மருத்துவமனைகளில் காலி படுக்கைகள் குறித்து, மாவட்ட நிர்வாகம் அளிக்கும் தவறான அறிக்கைகளால், நோயாளிகள் - மருத்துவமனைகள் இடையே, மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. படுக்கை இருக்கிறதென உயிரை கையில் பிடித்தபடி வரும் நோயாளிகள், வேறு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழக்க நேரிடுகிறது. இந்த பெருந்தொற்று காலத்தில், உயிர்களுடன் ஏனிந்த விளையாட்டு?சென்னைக்கு அடுத்தபடி யாக, கோவையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.
கொரோனா நோயாளிகள் படுக்கைகளுக்காக, தினமும் மருத்துவமனைகள் முன் தவம் கிடக்கும் சூழல் நீடித்து வருகிறது.கோவை அரசு மருத்துவமனையின், கொரோனா சிறப்பு வார்டு முன் ஆம்புலன்ஸ்களில், நோயாளிகள் சாதாரண படுக்கைக்காகவும், ஆக்சி ஜன் படுக்கைக்காகவும், மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலநிலை காணப்படுகிறது.
மருத்துவமனை சார்பில், ஆக்சி ஜன் படுக்கைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டாலும்,அவையனைத்தும் குறுகிய காலத்தில் நிரம்பி விடுகின்றன.தனியார் மருத்Yவமனைகளில், லட்சக்கணக்கில் பணத்தை செலவழிக்க தயாராக இருப்போருக்கும், கிடைக்கும் ஒரே பதில், படுக்கைகள் இல்லை என்பதே.
இந்நிலையில், நோயாளிகளின் வசதிக்காக மருத்துவமனைகளில் சாதாரண, ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ள படுக்கைகளின் விபரங்கள், மாவட்ட நிர்வாகம் சார்பில் தினமும் வழங்கப்படுகிறது.இந்த அறிக்கையில் குறிப்பிடப்படும், படுக்கைகளின் விபரங்களுக்கும், உண்மையில் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகளின் எண்ணிக்கைக்கும், பெரிய வித்தியாசம் உள்ளது.
உதாரணத்துக்கு, நேற்று முன்தினம் கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 149 ஆக்சி ஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், காலியாக உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், உண்மையில் மருத்துவமனையில் இருந்த, 723 ஆக்சி ஜன் படுக்கைகளும், நிரம்பி விட்டன. இதே போல், தனியார் மருத்துவமனை ஒன்றில், 108 ஆக்சி ஜன் படுக்கைகள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.ஆனால், உண்மை நிலவரப்படி அங்கு படுக்கைகள் காலியாக இல்லை.
உயிரை கையில் பிடித்துக் கொண்டு, அரசின் அறிக்கையை படித்து விட்டு, நம்பிக்கையுடன் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.அதன் பின், அவசரம் அவசரமாக வேறு மருத்துவமனையை தேடி செல்வோர் சிலர், வழியிலேயே உயிரிழக்க நேரிடுகிறது.இதே நிலை நீடித்தால் மருத்துவமனைகள், நோயாளிகள் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைக்கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் உண்மை நிலவரத்தை வெளியிட வேண்டும்.
இது குறித்து, மாவட்ட கலெக்டரின் கருத்தை அறிய, வாட்ஸ் ஆப் மூலம் தகவல் தெரிவித்தும், எந்த பதிலும் கிடைக்கவில்லை.யாரை திருப்திப்படுத்த?தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மாநில சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், கொரோனா பாதிப்பு குறித்து வெளிப்படையான அறிக்கை அளிக்க வேண்டும் என, அனைத்து ஊழியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், கோவை மாவட்ட நிர்வாகம் உயிரிழப்பு, காலிப்படுக்கைகள் குறித்து தொடர்ந்து தவறான தகவல்களையே அளித்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் யாரை திருப்திபடுத்த, இவ்வாறு தவறான அறிக்கையை அளித்து வருகிறது என தெரியவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE