- நமது நிருபர் குழு -தமிழகம் முழுதும் இன்று முதல், தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.ஒரே நாள் மட்டும் அனைத்து வகை கடைகளையும் திறக்க அனுமதி வழங்கியதால், ஊரடங்கு காலம் நீட்டிக்கப்படலாம் என்ற பதற்றத்தில், திருவிழா கால நெரிசல் போல, பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்கிச் சென்றனர்.
திடீரென தேவை அதிகரித்ததால், வியாபாரிகளும் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அத்தியாவசிய பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தினர்; காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்களை பன்மடங்கு விலை உயர்த்தி விற்றனர்.நேற்று முன்தினம் வரை, 1 கிலோ, 10 - 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட காய்கறிகள் நேற்று, 50 - 200 ரூபாய்க்கு உயர்ந்தன. அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படாததும், தமிழக அரசின் திட்டமிடப்படாத திடீர் அறிவிப்புமே, இந்த குளறுபடிகளுக்கு காரணம் என, பொதுமக்கள் குற்றஞ்சாட்டிஉள்ளனர்.
தமிழகத்தில், கொரோனா இரண்டாம் அலையின் வேகம் அதிகரித்துள்ளதை அடுத்து, அதை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழகம் முழுதும் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக, 24ம் தேதி முதல், தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படும் என, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதற்கு முன், நேற்றும், நேற்று முன்தினமும், அனைத்து வகை கடைகளும் திறந்திருக்க அனுமதிப்பதாகவும், அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. இது வரை, உணவகங்கள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்டவற்றை திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், திடீரென இரு தினங்களுக்கு மட்டும், அனைத்து வகை கடைகளும் திறக்கலாம்;
அதற்கு பின், எந்த கடைகளுக்கும் அனுமதி இல்லை என்ற அரசின் அறிவிப்பு, மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு முதல் அலையின் போது, அத்தியாவசிய கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, அனுமதிக்கப்பட்டன. அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்பனை கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், மக்களின் அத்தியாவசிய தேவைகள் நிறைவேறின. தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற பதற்றத்தில், பெரிய அளவில் மக்கள் கூட்டம் காணப்படவில்லை. ஆனால், இம்முறை முழு ஊரடங்கு காலம் மேலும் நீட்டிக்கப்படுமா என்ற அச்சமும், அதன் பின் அத்தியாவசிய பொருட்கள் தேவை நிறைவேறுமா என்ற பதற்றமும் மக்கள் மனதில் எழுந்தன. இதனால், அடுத்த ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை அள்ளிச் செல்ல, பொதுமக்கள் அந்தந்த பகுதி மார்க்கெட்டுகளில் குவிந்தனர். பிராட்வே, கொத்தவால்சாவடி மார்க்கெட்டில் பெருந்திரளானோர் ஒன்று கூடியதால், சமூக இடைவெளி காற்றில் பறந்தது.
கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும், மக்கள் கூட்டம் அலைமோதியது.வட சென்னையில், திருவொற்றியூர், மணலி, அம்பத்துார், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலும், மக்கள் அலை அலையாய் திரண்டு வந்து, பொருட்கள் வாங்கிச் சென்றனர். திருவொற்றியூரில் காலடிப்பேட்டை மற்றும் பட்டினத்தார் கோவில் தெரு மார்க்கெட்டுகள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், எண்ணுார் விரைவு சாலைக்கு மாற்றப்பட்டன.இருப்பினும், நேற்று அனைத்து கடைகளும் செயல்பட அனுமதித்ததால், காலடிப்பேட்டை சன்னதி தெரு, தேரடி சன்னதி தெரு, பட்டினத்தார் கோவில் தெரு, அஜாக்ஸ் மாணிக்கம் நகர் பிரதான சாலை, விம்கோ மார்க்கெட், எண்ணுார் - கத்திவாக்கம் பஜார், தாழங்குப்பம் மார்க்கெட் போன்ற பகுதிகளில் காய்கறி, பழங்கள், பல சரக்கு பொருட்கள் வாங்க, மக்கள் கூட்டம் அலைமோதியது.
மணலி, காமராஜர் சாலை, பாடசாலை தெரு, மணலிபுதுநகர் மார்க்கெட் போன்ற இடங்களிலும், தொற்று பரவல் அச்சமின்றி, நுாற்றுக்கணக்கான மக்கள் கூடியதால், நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மீன் மார்க்கெட்காசிமேட்டில், நேற்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. ஒரே இடத்தில் மீன்கள், காய்கறிகள் வாங்க பொதுமக்களும், வியாபாரிகளும் குவிந்ததால், இருசக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோ என அனைத்தும், ஒரே இடத்தில் ஸ்தம்பித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பழைய வண்ணாரப்பேட்டை காய்கறி சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது; சமூக விலகலை கடைப்பிடிக்காமல் இறைச்சி, காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் வாங்கிச் சென்றனர்.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், கடைகள் மற்றும் சாலைகளில் கூடிய கூட்டத்தால், தொற்று பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. நியாயமற்ற கொள்ளைகொரோனா காலத்தில் கிடைக்கும் சிறிதளவு வருமானத்தை வைத்து, வயிற்று பசியை தீர்க்கவே, பொது மக்கள் பொருட்களை வாங்க வருகின்றனர். அவர்களிடம், வியாபாரிகள் கொள்ளை அடிப்பது, நியாயமற்றது. வரும் காலங்களிலாவது, இது போன்ற நிலை ஏற்படாமல் தடுக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.எம்.சபரிமுத்து, 35,மேற்கு தாம்பரம்.பாத்திரக் கடையிலும்திருவிழா கூட்டம்அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி, பாத்திரக் கடைகள், ஜவுளிக் கடைகள் போன்றவற்றிலும் கூட்டம் அலைமோதியது. மயிலாப்பூர், தி.நகர், புரசைவாக்கம், பிராட்வே உள்ளிட்ட பகுதிகளில், அனைத்து கடைகளிலும் திருவிழா காலம் போல கூட்டம் அலைமோதியது. வைகாசி மாதம் என்பதால் திருமண ஏற்பாடு செய்துள்ள பலரும், பாத்திரக் கடைகள், ஜவுளிக் கடைகளில் குவிந்ததாக கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE