அனாதையாகும் குழந்தைகள் அரவணைக்க திட்டம் தேவை

Added : மே 24, 2021
Share
Advertisement
உலக அளவில் ஒவ்வொரு நாளும், பல ஆயிரம் குழந்தைகள் அனாதையாவதாகவும், தற்போது, 14 கோடிக்கும் மேற்பட்ட அனாதை குழந்தைகள் இருப்பதாகவும், 'யுனிசெப்' அமைப்பின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உண்மை நிலவரம், இதை விட அதிகமாகவே இருக்கும் என, கூறப்படுகிறது. குழந்தைகள் அனாதையாவதற்கு, போர், இயற்கை சீற்றங்கள் மற்றும் நோய் பரவலே முக்கிய காரணம். கடந்த, 20 ஆண்டுகளில் மட்டும்,7.50

உலக அளவில் ஒவ்வொரு நாளும், பல ஆயிரம் குழந்தைகள் அனாதையாவதாகவும், தற்போது, 14 கோடிக்கும் மேற்பட்ட அனாதை குழந்தைகள் இருப்பதாகவும், 'யுனிசெப்' அமைப்பின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உண்மை நிலவரம், இதை விட அதிகமாகவே இருக்கும் என, கூறப்படுகிறது.

குழந்தைகள் அனாதையாவதற்கு, போர், இயற்கை சீற்றங்கள் மற்றும் நோய் பரவலே முக்கிய காரணம். கடந்த, 20 ஆண்டுகளில் மட்டும்,7.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர், இயற்கை சீற்றங்கள், நோய்களால் இறந்துள்ளனர். அதனால், பல ஆயிரம் குழந்தைகள் அனாதைகளாகி உள்ளன. அந்த வகையில், தற்போது, கொரோனா தொற்று பரவலால், நாடு முழுதும் ஏராளமான குழந்தைகள், பெற்றோரை இழந்து தவிப்பதும், பிள்ளைகளை இழந்த மூத்த குடிமக்கள் நிர்கதியாக நிற்பதும் ஆங்காங்கே நடக்கிறது.

கொரோனா பரவலை தடுப்பதுடன், இப்படி ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களை, பாதுகாக்க வேண்டிய கடமையும், தற்போது, மத்திய -மாநில அரசுகளுக்கு உருவாகியுள்ளது.குறிப்பாக, பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. இத்தகைய குழந்தைகளை கவனிக்காமல் விட்டு விட்டால், அவர்கள் ஆள்கடத்தல், உடல் உறுப்புகளுக்காக குழந்தைகளை கடத்துவோர் மற்றும் பாலியல் தொழிலுக்காக குழந்தைகளை கடத்தும் சதிகாரர்கள் வலையில் சிக்கி விடலாம். இல்லையெனில், குழந்தை தொழிலாளர்களாகும் அபாயம் உள்ளது.அதனால் தான், பெற்றோரை இழந்த குழந்தைகளை மீட்டு, அவர்களுக்கு நவோதயா பள்ளிகளில் சிறப்பான கல்வி வழங்க வேண்டும் என, காங்கிரஸ் தலைவர் சோனியா வலியுறுத்தியுள்ளார்.

துயரத்தில் சிக்கியுள்ள அந்த குழந்தைகளுக்கு, காப்பகங்களில் சரியான தங்குமிட வசதி ஏற்படுத்தி தருவதோடு, அவர்களுக்கு தரமான, இலவச கல்வி வழங்குவதன் வாயிலாக, அவர்களின் எதிர்காலம் மீட்டெடுக்கப்படும் என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், 'பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, மாதந்தோறும், 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அவர்களுக்கு இலவசமாக கல்வி அளிக்கப்படும்' என, அறிவித்துள்ளார்.

பெற்றோரை இழந்த குழந்தைகள், அறிமுகம் இல்லாதவர்களின் பராமரிப்புக்கு செல்லநேரிட்டால், அவர்கள் மனரீதியாக பெரும் பாதிப்புக்கு ஆளாகலாம். அதனால், நெருங்கிய உறவினர்களே, அவர்களை பராமரிக்கும் வகையிலான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என, சில தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதற்கு உறவினர்களுக்கு நிதியுதவி தேவைப்படலாம். எனவே, அனாதையான அந்த குழந்தைகளை, 18 வயது வரை கவனிப்பவர்களுக்கு, மாதம்தோறும் உதவித்தொகை கிடைக்க, ஹிமாச்சல பிரதேச மாநில அரசு உத்தரவிட்டது போல, மற்ற மாநில அரசுகளும் உத்தரவிடலாம்.

இப்படிப்பட்ட குழந்தைகளுக்காக சிறப்பு திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்த வேண்டும். மேலும், இவர்களை தத்தெடுக்க விரும்புவோரும், உரிய நடைமுறைகளை, சட்ட விதிகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்து, சமூக வலைதளங்கள் வாயிலாக செய்திகளை பரப்புவதை தடை செய்ய வேண்டும். இல்லையெனில், கடத்தல்காரர்கள், சமூக விரோதிகளின் கைகளில் இந்த குழந்தைகள் சிக்கி, அவர்களின் எதிர்காலம் பாழாகி விடும்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதிக்கும் போதே, அவர்களின் குழந்தைகள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்கள் பற்றிய விபரங்களை உரிய படிவங்கள் வாயிலாக பெற வேண்டும்.அப்படி பெற்றால், துயர சம்பவங்கள் நிகழும் போது, இறந்தவர்களின் குழந்தைகளுக்கு, அரசு சார்ந்த அமைப்புகள் வாயிலாக உரிய நேரத்தில் உதவி கிடைப்பதுடன், அவர்கள் மன ரீதியாக பாதிப்புக்கு ஆளாவது தடுக்கப்படுவதோடு, உறவினர்களின் தொல்லைகளுக்கு உள்ளாவதும் தவிர்க்கப்படும். இதுபோன்ற நடவடிக்கைகளை நாடு தழுவிய அளவில் மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா முதல் அலை மற்றும் தற்போது ருத்ரதாண்டவம் ஆடி வரும், 2வது அலைக்கு, இதுவரை, 2.95 லட்சத்திற்கும் மேற்பட்டோர், நாடு முழுதும் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மட்டும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.இந்த இறப்புகளால் எத்தனை குழந்தைகள் அனாதையாகி உள்ளன என்பது குறித்த தெளிவான புள்ளி விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றாலும், அரசுகள் அறிவித்துள்ள, ஹெல்ப்லைன் நம்பருக்கு இத்தகையை குழந்தைகள் குறித்த தகவல்கள் தினமும், அதிக அளவில் வருவதாக, சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கொரோனாவால் ஆதரவற்றவர்களாகிய குழந்தைகளுக்காக, சிறப்பு திட்டம் ஒன்றை வகுத்து, வரும், 30ம் தேதிக்குள் வெளியிடும்படி, பா.ஜ., முதல்வர்களை அக்கட்சியின் தலைவர் நட்டா வலியுறுத்தியுள்ளார். அதுபோன்ற திட்டங்களை, அனைத்து மாநில அரசுகளும் வகுக்க வேண்டும் என்பதே ஏராளமானவர்களின் விருப்பம். அதை மாநில அரசுகள் செய்யும் என, நம்புவோமாக.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X