லட்சத்தீவுக்கான புதிய விதிகளை திரும்பப் பெறுக: பிரதமருக்கு ராகுல் கடிதம்| Dinamalar

லட்சத்தீவுக்கான புதிய விதிகளை திரும்பப் பெறுக: பிரதமருக்கு ராகுல் கடிதம்

Updated : மே 27, 2021 | Added : மே 27, 2021 | கருத்துகள் (34)
Share
புதுடில்லி: லட்சத்தீவின் நிர்வாக அதிகாரியாக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நபர் சட்டம் ஒழுங்கு என்ற போர்வையில் ஜனநாயகத்தை குலைக்கவும், கருத்து வேறுபாடு கொண்டவர்களை தண்டிக்கவும் முயல்கிறார் என பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.பா.ஜ.,வைச் சேர்ந்த இவர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் டையூ யூனியன் பிரதேசத்தின் துணை நிலை கவர்னராக இருப்பவர்
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: லட்சத்தீவின் நிர்வாக அதிகாரியாக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நபர் சட்டம் ஒழுங்கு என்ற போர்வையில் ஜனநாயகத்தை குலைக்கவும், கருத்து வேறுபாடு கொண்டவர்களை தண்டிக்கவும் முயல்கிறார் என பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ.,வைச் சேர்ந்த இவர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் டையூ யூனியன் பிரதேசத்தின் துணை நிலை கவர்னராக இருப்பவர் பிரபுல் படேல். லட்சத்தீவின் நிர்வாக பொறுப்பும் இவருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் மாட்டிறைச்சிக்கு தடை, மது விடுதிகளுக்கு அனுமதி, வளர்ச்சிக்கு நிலத்தை எடுத்துக்கொள்ளும் வரைவு சட்டம், குண்டர் சட்டம் அமல் போன்ற நடவடிக்கைகளை லட்சத்தீவில் எடுத்தார். இது கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

இது குறித்து காங்., எம்.பி., ராகுல், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: லட்சத்தீவின் நிர்வாகி பிரபுல் படேல் அறிவித்துள்ள மக்கள் விரோத கொள்கைகளால் அத்தீவு மக்களின் எதிர்காலம் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கிறது. மக்கள் பிரதிநிதிகளிடமோ அல்லது பொதுமக்களிடமோ முறையாக ஆலோசிக்காமல் பெரும் மாற்றங்களை முன்வைத்துள்ளார். இந்த தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராக லட்சத்தீவு மக்கள் போராடுகின்றனர்.

தீவின் சுற்றுச்சூழல் புனிதத்தை குலைக்கும் அவரது முயற்சிக்கு சமீபத்தில் வெளியிடப்பட்ட லட்சத்தீவு மேம்பாட்டு ஆணைய ஒழுங்குமுறை வரைவே சாட்சி. அவ்விதி நில உரிமை தொடர்பான பாதுகாப்புகளை வலுவிழக்கச் செய்கிறது.


latest tamil news



சுற்றுச்சூழல் விதிமுறைகளை நீர்த்துப்போகச் செய்வதுடன், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கிடைக்கக்கூடிய சட்ட உதவிகளை கடுமையாக கட்டுப்படுத்துகிறது.குறுகிய கால வணிக லாபங்களுக்காக வாழ்வாதார பாதுகாப்பும், நிலையான வளர்ச்சியும் தியாகம் செய்யப்படுகின்றன.

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களை தேர்தலில் தகுதி நீக்கம் செய்யும் பஞ்சாயத்து ஒழுங்குமுறை வரைவில் உள்ள விதி அப்பட்டமான ஜனநாயக விரோதம். மேலும் குண்டர் சட்டம், லட்சத்தீவு விலங்குகள் பாதுகாப்பு ஒழுங்குமுறை, மது விற்பனை மீதான கட்டுப்பாடுகளை நீக்குதல் போன்றவை உள்ளூர் சமூகத்தின் கலாச்சார, மத இழை மீதான திட்டமிட்ட தாக்குதல்.

தயவுசெய்து இந்த விஷயத்தில் தலையிட்டு மேற்கூறிய உத்தரவுகள் திரும்பப் பெறப்படுவதை செய்யும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன். லட்சத்தீவு மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மதிக்கும், விருப்பத்தை பிரதிபலிக்கும் ஒரு வளர்ச்சிக்கு தகுதியானவர்கள். இவ்வாறு பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X