சென்னை:சென்னை, கே.கே.நகர், பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியை, தி.மு.க., முக்கிய புள்ளி கையகப்படுத்தப் பார்ப்பதாக புகார் எழுந்துள்ளது.
நல்லாட்சி தரும் முயற்சியில் இறங்கி இருக்கும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவர் மனைவி துர்கா ஸ்டாலின் பெயர் இதில் இழுக்கப்படுவதால், களங்கம் ஏற்படும் முன், முதல்வர் இதில் தலையிட்டு, விவகாரத்தைத் தீர்க்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
அவப்பெயர்
பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ஒருவர், 'ஆன்லைனில்' பாடம் நடத்தும்போது, மாணவியரிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், மொபைல் போன் மூலம் தவறான கண்ணோட்டத்துடன் குறுஞ்செய்திகள் அனுப்புவதாகவும் புகார் எழுந்தது. தற்போது அந்த ஆசிரியர், 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் உள்ளார்.
அந்தப் பள்ளி மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு, அரசே பள்ளியை ஏற்று நடத்த முனைப்பு காட்டி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷும், 'அரசு ஏற்று நடத்த ஆலோசனை நடத்துகிறோம்' என்ற ரீதியில், நேற்று முன்தினம் பேட்டி கொடுத்தார்.இதற்குப் பின்னணியில் தி.மு.க., முக்கிய புள்ளி ஒருவர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அந்த முக்கிய புள்ளியின் மகனுக்கு, பல ஆண்டுகளுக்கு முன், பள்ளியில் படிக்க 'சீட்' கொடுக்கவில்லை என்ற காரணத்தால், பழி வாங்கும் நோக்கில், பள்ளியை அபகரிக்கும் முயற்சியில் அவர் ஈடுபடுகிறார் என்று சொல்லப்படுகிறது. அந்த முக்கிய புள்ளி, தி.மு.க.,வின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுக்கு மிக நெருங்கிய சொந்தம் என்பதால், முதல்வர் பெயரைப் பயன்படுத்தியும், அவர் மனைவி துர்காவின் பெயரைப் பயன்படுத்தியும், அபகரிப்போ, அரசுடைமை செய்யும் முயற்சியோ நடக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பத்மா சேஷாத்ரி பள்ளி, மறைந்த திருமதி ஒய்.ஜி.பி.,யால் நிறுவப்பட்டது என்பதால், ஒரு குறிப்பிட்ட சமூகம் இந்த விவகாரத்தில் குறிவைத்து, மிகக் கேவலமாகத் தாக்கப்படுகிறது. ஏதோ அந்தச் சமூகம் தான், ராஜகோபாலனை பாலியல் ரீதியாக தவறு செய்யத் துாண்டியது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டு, அவப்பெயர் உண்டாக்கப்படுகிறது.இன்னொரு புறம், திருமதி ஒய்.ஜி.பி.,யின் பேத்தியான மதுவந்தி அருண், பா.ஜ.,வில் உள்ளார். கோவை தெற்கு சட்டசபை தொகுதியில், வானதி சீனிவாசனின் தேர்தல் பிரசாரத்தின் போது, அவருக்கு ஆதரவாக மதுவந்தி பணியாற்றினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மீண்டும் பதிவிட்டு, பா.ஜ., மீதும் சேற்றை வாரிப் பூசும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
காழ்ப்புணர்ச்சி
ராஜகோபாலன் செய்தது முற்றிலும் தவறு என்பதை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. அதற்கான விசாரணையிலும், உரிய தண்டனை வழங்கப்படுவதிலும் யாரும் தலையிட முடியாது. அதேபோல, அந்தப் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்களைக் கண்காணிக்கத் தவறிவிட்டதா என்ற கோணத்தில் ஆராய்வதும் முக்கியம்.

ஆனால், ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளை விட்டுவிட்டு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது குற்றம் சுமத்துவதிலேயே பல பிரபலங்களும், சமூக ஊடகங்களும் கவனம் செலுத்துகின்றன. இங்கே வேருன்றிப் போயிருக்கும் ஒரு சமூகத்துக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியை மீண்டும் துாண்டிவிட்டு, குளிர்காய முயற்சி மேற்கொள்ளப்படு கிறதோ என்ற எண்ணம் இதனால் வலுவடைகிறது.
நெருக்கடி மேல் நெருக்கடி கொடுத்தபடி இருந்தால், ஒரு கட்டத்தில் அந்தப் பள்ளி நிர்வாகம், மொத்த குழுமத்தையுமே யாருக்கேனும் விற்றுவிட்டு, அமைதியான வாழ்க்கையை நோக்கி நகர்ந்துவிட முயற்சி செய்யலாம். அதற்கான ஆரம்பப் புள்ளி தான் இந்த நடவடிக்கையோ என்ற எண்ணமும் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.இதற்கான அச்சாரமாகத் தான், பத்மா சேஷாத்ரி பள்ளியை அரசே கையகப்படுத்தி, நிர்வாகம் செய்யவிருக்கிறது என்ற பிரசாரம். அப்படிச் செய்ய முடியுமா?
சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் கே.எஸ்.ஜெயகணேஷ் கூறியதாவது:பத்மா சேஷாத்ரி பள்ளி, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தைப் பின்பற்றும் தனியார் பள்ளி. அது எந்த வகையிலும் அரசின் நிதி உதவியை பெறவில்லை. அதனால், தமிழ்நாடு அரசு இந்த பள்ளியை கையகப்படுத்த முடியாது.அந்தப் பள்ளியின் ஓர் ஆசிரியர் குற்றம் செய்திருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம்.
இதேபோல, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பாலியல் அத்துமீறல்கள் நடைபெற்றுள்ளன. அப்போதெல்லாம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் பட்டு, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுஉள்ளதை காண முடிகிறது. தனியார் கல்லுாரி மற்றும் பல்கலைகளில், இதுபோன்ற சம்பவங்கள் நடந்தபோது, அதைச் செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்தே தவிர, அந்த நிர்வாகத்தை அரசே எடுத்து நடத்த முயற்சி செய்யவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
பதவி ஏற்ற நாள் முதல், அரசுக்கும், தனக்குமான நற்பெயருக்கு எந்த களங்கமும் ஏற்படக் கூடாது என்றும், மிகச் சிறந்த ஆட்சி கொடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடனும் செயல்பட்டு வரும் முதல்வர் ஸ்டாலின், இவ்விவகாரத்தில் தலையிட்டு, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, பள்ளிக்கு பங்கம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என, பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE