புத்த ஜெயந்தி நாளில், புத்தரை பற்றி பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. வர்ணாசிரமத்தை எதிர்த்து கிளம்பியவர் புத்தர். மோடியை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்போ வர்ணாசிரமத்தை தொடர்ந்து நிலைநாட்ட வேலை பார்ப்பது. இதிலே புத்தரை பற்றி பேச இவருக்கு என்ன அருகதை இருக்கிறது?
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் அருணன்
'வர்ணாசிரமம், புத்தர், ஹிந்து மதம் போன்றவை கம்யூ.,க்கள் வெறுக்கும் வார்த்தைகள். அதுபற்றி பேச உங்களுக்கு அருகதை இருக்கிறதா...' என, சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை.
ஏழைகளுக்கு தரமான சுகாதாரம், ஏழை மாணவர்களுக்கு இலவச கல்லுாரி மேற்படிப்பு வேண்டும் என்பதற்காக, லாட்டரி சீட்டை கொண்டு வரலாம் என்று கூறினேன். அது, விவாத பொருளாக மாறி இருக்கிறது. லாட்டரி சீட்டு இல்லாமல், வேறு வகையில் வருமானம் வந்தாலும், ஏழை மக்களுக்கு தரமான மருத்துவம், இலவச கல்லுாரி படிப்பு, இரண்டையும் கொடுக்க முடிந்தால் அதை நான் வரவேற்கிறேன்.
- காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்
'படாதபாடு பட்டு, லாட்டரியை ஒழித்துள்ளனர். அதை மீண்டும் கொண்டு வரச் சொன்னால் தப்பில்லையா... எப்படியோ உங்களின் விளக்கம் சரி தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேட்டி.
இந்த அரசில் தனிநபரின் அந்தரங்கம் என்பது அர்த்தமற்றதாகி விட்டது. ஒவ்வொருவர் படுக்கை அறைக்குள்ளும் இந்த அரசு எட்டிப் பார்க்கிறது.
- முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா

'சமூக வலைதளங்களை பயன்படுத்தி நடக்கும் குழப்பங்களை தடுக்க நினைத்தால், அதற்கும் கண்டனமா...' எனக் கேட்க தோன்றும் வகையில், பா.ஜ.,விலிருந்து வெளியேறியுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா அறிக்கை.
'பி.எம்., கேர்ஸ்' எனப்படும், பிரதமரின் நிதி மூலம், மஹாராஷ்டிராவின் மரத்வாடா நகருக்கு வழங்கப்பட்ட, 150 வென்டிலேட்டர்களில், 113 வேலை பார்க்கவில்லை. இது குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசை, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வென்டிலேட்டர்களை, குஜராத் நிறுவனம் 'சப்ளை' செய்தது.
- திரிணமுல் காங்., - பெண் எம்.பி., மஹுவா மொய்த்ரா
'உங்களுக்கு எப்படியாவது குஜராத்தையும், பிரதமர் மோடியையும் கண்டிக்க வேண்டும்... கருவி வேலை பார்க்காததற்கும் மோடி தான் காரணமா...' என, கண்டிக்க தோன்றும் வகையில், திரிணமுல் காங்., - பெண் எம்.பி., மஹுவா மொய்த்ரா அறிக்கை.
பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் பாதிக்கப்பட்டுள்ள சிறுமியருக்கு நீதி கிடைக்கவும், பிற சிறுமியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு ஆணையிடுமாறு, தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
'தி.மு.க., ஆட்சியில் எல்லாம், 'முறைப்படி' நடக்கும். சற்று அமைதியாக இருங்கள்...' என, ஜாடையாக சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE