மாடல் அழகியால் வந்த பிரச்னை!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'மாடல்' அழகியால் வந்த பிரச்னை!

Updated : மே 28, 2021 | Added : மே 28, 2021 | கருத்துகள் (34)
Share
''பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் பிரச்னையை, ஒரு மாடல் அழகி மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது,'' என, தமிழக பா.ஜ., பிரமுகர் காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.தமிழக பா.ஜ., கலை- இலக்கிய பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் கூறியதாவது:பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் அவரது மகள் மதுவந்தியை
மாடல் அழகி, பிரச்னை,  காயத்ரி ரகுராம், பாஜ, பா.ஜ., கிரிபாலி சாம்டாரியா

''பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் பிரச்னையை, ஒரு மாடல் அழகி மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது,'' என, தமிழக பா.ஜ., பிரமுகர் காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ., கலை- இலக்கிய பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் கூறியதாவது:பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் அவரது மகள் மதுவந்தியை குறிவைத்து, பரபரப்பாக்கி வருகின்றனர். என்ன காரணம்,- இருவரும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்பட்டனர் என்பது தான். பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுவது, அவ்வளவு பெரிய குற்றமா? இது சிலரின், 'டார்கெட்' என்றால், வேறு பலரின், 'டார்கெட்' ஜாதிய ரீதியில், இந்தப் பள்ளியை வீழ்த்த வேண்டும் என்பது. நடந்த சம்பவத்தில் குற்றம் இழைத்தவர், ஆசிரியராக இருந்த ராஜகோபாலன். அவரை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; அதில் தவறில்லை. ஆனால், பள்ளியையும், பள்ளி நிர்வாகத்தையும் வம்புக்கு இழுப்பது ஏன்?

பள்ளியில் 'சீட்' கிடைக்காதவர்கள் எல்லாம் சேர்ந்து, இந்த பிரச்னையை பெரிதுபடுத்துவதாக சொல்கின்றனர். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதோடு, பள்ளி நிர்வாகத்துக்கு நெருக்கமான குடும்பத்தைச் சேர்ந்த, எனக்கும் அந்தப் பள்ளியில் 'சீட்' கிடைக்கவில்லை தான். அதற்காக, அந்தப் பள்ளி மீது அவதுாறு செய்ய முடியுமா?


latest tamil newsதமிழகத்தைப் பொறுத்தவரை, தி.மு.க., புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கிறது. கொரோனா பிரச்னையை மறைக்க, ஒரு கருவி தேடிக் கொண்டிருந்தனர். வசமாக சிக்கி விட்டது, பள்ளி பாலியல் துன்புறுத்தல் விவகாரம். நடந்தது தவறு தான். அதை யாரும் இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால், எங்குமே இந்த விவகாரம் நடக்காதது போல, ஒரு தோற்றத்தை உருவாக்கி, அதை பெரிதுபடுத்துவதைத் தான் ஏற்க முடியவில்லை. 'பள்ளியை அரசு ஏற்று நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் சொல்கிறார் என்றால், என்ன அர்த்தம்? பிராமணர் நடத்தும் பள்ளி, சிறப்பாக நடத்தப்பட்டு வந்தால், அதை அரசு ஏற்று நடத்துமா?

இந்த பள்ளியில் படித்த 'மாடல்' கிரிபாலி சாம்டாரியா என்பவர் தான், பாலியல் துன்புறுத்தல் குறித்து, புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பது, போலீஸ் விசாரணைக்குப் பின் தெரிய வரும்.

ஒரு விஷயத்தை மடைமாற்றம் செய்வதற்காக, காங்., தான், இப்படிப்பட்ட காரியங்களை செய்து வந்தது. இப்போது, தி.மு.க.,வும் செய்யத் துவங்கி இருக்கிறது. குற்றம் என்றால் எல்லாமே குற்றம் தான். முதல்வர் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில், ஆங்கில மொழியில் பேசவில்லை என்றால், அபராதம் விதிக்கின்றனர். தாய் தமிழ் மொழியில் பேசக் கூட, சுதந்திரம் இல்லாமல் தான், அங்கே குழந்தைகள் தத்தளிக்கின்றனர்.

இதுமாதிரி குற்றங்கள், பிரச்னைகள் என்றால், எல்லா இடங்களில் இருப்பதை சொல்லிக் கொண்டே போகலாம். அங்கு படிக்கும் பிள்ளைகளை விட்டு புகார் கொடுக்கச் சொல்கிறேன். அமைச்சர் மகேஷ் விசாரித்து, குறிப்பிட்ட அந்த பள்ளியையும் அரசுடைமை ஆக்குவாரா?இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறினார்.


யார் இந்த கிரிபாலி சாம்டாரியா?


சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிரிபாலி சாம்டாரியா. மார்வாடி குடும்பம். அப்பா துணி வியாபாரி. பூர்விகமாகவே பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த கிரிபாலி சாம்டாரியா; சிறு வயதிலேயே சென்னை, கே.கே.நகர், பத்மா சேஷாத்ரி பள்ளியில் படித்தவர்.


நெருக்கடி


கடந்த 2014ல், பிளஸ் 1 படித்தார். வணிகவியல் மற்றும் தொழில் முனைவோர் பிரிவில் சேர்ந்து படித்தார். அப்போது தான், வணிகவியல் வகுப்பெடுக்க ராஜகோபாலன் வந்தார். பின், 2015ல், கிரிபாலி, பிளஸ் 2 படித்த போது, வணிகவியல் வகுப்பெடுத்த ராஜகோபாலன், வகுப்பாசிரியராகவும் செயல்பட்டார். அப்போது, கிரிபாலி நெருக்கடிக்கு ஆளானதாக கூறப்படுகிறது.பள்ளிப்படிப்பை முடித்ததும், சென்னை, எத்திராஜ் கல்லுாரியில், பி.எஸ்.சி., விஷுவல் கம்யூனிகேஷன் சேர்ந்து படிப்பை முடித்தார், கிரிபாலி.

கடந்த, 2018க்குப் பின், சென்னையிலேயே மாடலாக பணிபுரியத் துவங்கியவர், பேஷன் டிசைனராக இருக்கும் சகோதரியின் ஆலோசனைப்படி, மும்பை சென்றார். அங்கு விளம்பர நிறுவனம் ஒன்றில் சேர்ந்து மாடலாக பணிபுரிந்து வருகிறார்.'இன்ஸ்டாகிராம்' என்ற சமூக வலைதளத்தில் தொடர்ந்து இயங்கி வரும் கிரிபாலி, சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருக்கும், தன் வகுப்புத் தோழிகளோடு தொடர்பில் இருந்து வருகிறார். தோழிகள் பலரோடு பேசும் போதெல்லாம், பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனின், பாலியல் சீண்டல்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று, கொந்தளித்து சொல்வாராம்.

தமிழகத்தில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்குப் பின், தி.மு.க., ஆட்சி ஏற்பட்டதும், கிரிபாலியின் தோழிகள் சிலர், இந்த விஷயத்தை இப்போதைக்கு வெளியே கிளப்பினால், அது பரபரப்பாகி, ஆசிரியர் ராஜகோபாலன் மற்றும் அவருடைய நண்பர்களாக இருக்கும் சக ஆசிரியர்களும், இந்த விவகாரத்தில் சிக்குவர் என, ஆலோசனை கூறியுள்ளனர். இதையடுத்தே, கிரிபாலி சாம்டாரியா இந்த விஷயத்தை, இன்ஸ்டாகிராம் மூலம் வெளிப்படுத்தியதாக பள்ளித் தோழிகள் கூறுகின்றனர்.


தடுமாறி

கிரிபாலி போலவே, தாங்களும் ராஜகோபாலன் உள்ளிட்ட பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர்கள் சிலரால், பாலியல் சீண்டலுக்கு ஆளானோம் என, செய்திகளை பரப்பி விடுகின்றனர். அவர்கள் சொல்லும் ஆசிரியர்கள் குறித்து விசாரித்தால், அவர்கள் எல்லாம், 10 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்று சென்று விட்டனராம். இதனால், மாணவியர் குறிப்பிடும் பாலியல் சீண்டல் விவகாரத்தில், எவ்வளவு துாரம் உண்மை இருக்கிறது என புரியாமல், போலீசார் தடுமாறி வருவதாகத் தகவல்.
-- நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X