புதுடில்லி: 'இந்தியா முழுவதும் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் ஜூன் மாதத்திலிருந்து செலுத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிட்19 வைரசுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. மூன்றாவதாக டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், தயாரிக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, கடந்த மே 1ம் தேதி ரஷ்யாவிலிருந்து முதல்கட்ட தடுப்பூசிகள் இந்தியாவில் இறக்குமதியானது. இந்நிலையில், அப்பல்லோ மருத்துவ குழும துணை தலைவர் சோபனா காமினேனி தெரிவித்துள்ளதாவது:
தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்ததிலிருந்து, அப்பல்லோ மருத்துவமனைகள் வாயிலாக 80 இடங்களில், 10 லட்சம் பேருக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் 10 லட்சம் பேருக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற முனைப்பில் உள்ளோம். அதேவேகத்தில் சென்றால் செப்டம்பர் மாதத்துக்குள் 2 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கி விடுவோம். இதுவே எங்கள் இலக்கு.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை ஒரு டோசுக்கு ரூ.1,195 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், தடுப்பூசி மருந்தின் விலை 995 ரூபாய். ஊசி செலுத்துவதற்கான கட்டணம் ரூ.200 என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE