புதுடில்லி :மேற்கு வங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, 'யாஸ்' புயல் பாதிப்புகள் குறித்து, 15 நிமிடங்கள் விளக்கிய முதல்வர் மம்தா பானர்ஜி, அதன் பின் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்காமல் புறப்பட்டு சென்றார்.வங்கக் கடலில் உருவான யாஸ் புயல், ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் அருகே, சமீபத்தில் கரையை கடந்தது.
பலத்த சேதம்
இதில், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் தொடர் மழை மற்றும் சூறைக் காற்று வீசியதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளன.புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று நேரில் பார்வையிட்டார். விமானம் வாயிலாக, நேற்று காலை ஒடிசா வந்தார்.அங்கு பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்வதற்கான ஆய்வு கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார். இதில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆய்வு கூட்டத்துக்கு பின், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.அதன்பின் மேற்கு வங்கம் சென்ற பிரதமர் மோடி, அங்கு புயலால் பாதிக்கப்பட்ட தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கனாஸ், திகா, கிழக்கு மெதினிபூர், நந்திகிராம் மாவட்டங்களை, ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன், பாதிப்புகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.ஆனால், மேற்கு மிதினாபூர் மாவட்டத்தில் உள்ள கலைகுண்டா விமானப்படை தளத்தில், பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மம்தா சந்தித்தார்.
'புயல் பாதிப்புகளை மறுசீரமைப்பு செய்ய, 20 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வேண்டும்' எனக் கோரி அறிக்கை அளித்தார். இந்த சந்திப்பு, 15 நிமிடங்கள் நீடித்தது.அதன்பின், அங்கிருந்து மம்தா புறப்பட்டு சென்றுவிட்டார். பிரதமருடனான ஆய்வு கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.இது குறித்து மம்தா கூறியதாவது:பிரதமருடனான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பது குறித்து, முதல்வர் அலுவலகத்துக்கு தெரியாது. திகா மாவட்டத்தில் அதிகாரிகளுடன் கூட்டத்துக்கு நேரம் ஒதுக்கி இருந்தேன். பிரதமரை சந்தித்தபோது இது குறித்து தெரிவித்து, அவர் அனுமதியுடன் புறப்பட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.மேற்கு வங்க புயல் பாதிப்புகளை பிரதமர் பார்வையிட்ட பின், ''நிவாரண தொகையாக, ஒடிசாவுக்கு, 500 கோடி ரூபாயும், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு, 500 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,'' என அறிவித்தார்.
ஆணவம்
முதல்வர் மம்தாவின் செயல் குறித்து, மத்திய அரசு அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:மம்தாவுடனான ஆய்வுக் கூட்டத்திற்காக, பிரதமர் நரேந்திர மோடியும், மேற்கு வங்க கவர்னர் ஜக்தீப் தன்கரும் வந்தபோது, அம்மாநில அரசு சார்பில் அங்கு யாரும் இல்லை.பிரதமர் அரை மணி நேரம் காத்திருந்தார்.
திடீரென வந்த மம்தா, பிரதமரிடம் அறிக்கையை அளித்துவிட்டு, வேறு கூட்டத்துக்கு செல்ல வேண்டி இருப்பதாக கூறி புறப்பட்டுவிட்டார்.நாட்டின் வரலாற்றில், இதுவரை எந்த முதல்வரும் இதுபோல ஆணவத்துடனும், பொறுப்பற்ற தன்மையுடனும் பிரதமரிடம் நடந்து கொண்டது இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE