கோவை:கோவையில் கொரோனா தொற்று படிப்படியாக குறையும் என்ற நம்பிக்கை உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.கோவையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கோவையில் படிப்படியாக தொற்று குறையும் என்ற நம்பிக்கை உள்ளது. முழு ஊரடங்கு காலக்கட்டத்தில் விதிமுறைகள்படி தொழிற்சாலைகள் இயங்குகிறதா என்று கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.கொரோனா படுக்கைவசதிகள் குறித்து பதற்றப்பட தேவையில்லை. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சாதாரண படுக்கைகள், 730 காலியாக உள்ளன.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 290 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் காலியாக உள்ளன. தீவிர சிகிச்சை படுக்கைகள், 109 காலியாக உள்ளன. மொத்தமாக கோவையில், 4,687 படுக்கைகள் காலியாக உள்ளன.தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஆட்டோ போன்ற வாகனங்களில் பயணிக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தது. அதனை தடுக்க சென்னையில் உள்ளது போல் கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை இன்னும், இரண்டு நாட்களில் கோவையில் செயல்படுத்தபட உள்ளோம்.தற்போது வீடுகளில், 25 ஆயிரத்து 822 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், 14 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது.
அந்த பட்டியலில் கோவையும் விரைவில் வரும். கோவையில் தொழிற்சாலைகள் அதிகளவு உள்ளதால் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.தமிழகத்தில் தற்போது கொரோனா தடுப்பூசிகள் வீணாக்கப்படவில்லை. சென்னைக்கு அடுத்தபடியாக, கோவையில் தான் அதிகம்பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கொரோனா கண்காணிப்பு அதிகாரி சித்திக், கலெக்டர் நாகராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.