விருதுநகர், : விருதுநகர் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் வார்டு மேம்பாட்டு பணிக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து அனைத்து கட்சி கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.
இவ்ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் சுமதி (அ.தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் முத்துலட்சுமி (அ.தி.மு.க.,), பி.டி.ஓ.,க்கள் சிவக்குமார், ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர்.கவுன்சிலர்கள் விவாதம்:மாரியப்பன் (அ.தி.மு.க.,): உள்ளாட்சி பிரதிநிதிகளை மக்கள் தேர்வு செய்து இரண்டு ஆண்டுகளாகி விட்டது. வார்டு மேம்பாட்டு பணிக்காக ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. எதற்கெடுத்தாலும் கொரோனா பணி எனக்கூறி வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்காமல் தட்டிக்கழிக்கும் போக்கு நிலவுகிறது.சிவக்குமார்( பி.டி.ஓ.,) : பொது நிதி ரூ.3 கோடி உள்ளது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடப்பதால் கவுன்சிலர்களின் கோரிக்கை அடுத்த கூட்டத்தில் நிறைவேற்றப்படும்.மாரியப்பன் (அ.தி.மு.க.,): ரூ.பல கோடி மதிப்பில் ரோடு உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. இதற்கு எங்கிருந்து நிதி வந்தது. எதாவது சாக்கு போக்கு சொல்லி இழுத்தடிப்பது நியாயமல்ல.சிவக்குமார் (பி.டி.ஓ.,): கடந்தாண்டு தனி அலுவலர் மூலம் கலெக்டர் ஒப்புதலுடன் ரோடு உள்ளிட்ட பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடக்கிறது.ஈஸ்வரன் (அ.தி.மு.க.,): கொரோனா வெறெங்கிருந்தும் உற்பத்தியாகவில்லை. வீட்டில் அருகில் உள்ள கழிவு நீர் சாக்கடையிலருந்துதான் உற்பத்தியாகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களால் மக்களுக்கு பதில் கூற முடியவில்லை. சாக்கடை அகற்றுதல், குப்பை அள்ளுதல் உள்ளிட்ட பணிகளுக்கு வார்டு தோறும் நிதி ஒதுக்க வேண்டும்.சிவக்குமார் (பி.டி.ஓ.,): கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வார்டு தோறும் கிருமி நாசினி தெளிப்பு, கழிவு நீர், குப்பை அகற்றம் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. இதற்கு ஊராட்சி ஒன்றியம் நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடக்கவில்லை.மாரியப்பன் (அ.தி.மு.க.,): இன்று கொண்டு வரப்பட்ட 64 தீர்மானங்களையும் ரத்து செய்ய வேண்டும். கவுன்சிலர்கள் யாரும் கையெழுத்து இட மாட்டார்கள்.சுமதி (ஒன்றிய தலைவர்): விருப்பம் இருந்தால் கவுன்சிலர்கள் கையெழுத்து போடலாம். இல்லையென்றால் வேண்டாம்.இதைதொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.