சிதம்பரத்தில் 200 கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகள்...நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது- | Dinamalar

தமிழ்நாடு

சிதம்பரத்தில் 200 கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகள்...நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது-

Updated : மே 29, 2021 | Added : மே 29, 2021
Share
சிதம்பரம்-சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லுாரியில் கூடுதலாக 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, நோயாளிகளின் பயன்பாட்டிற்கு வந்தது.தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாவட்டத்தில் தொற்று பாதிப்பு கூடிக்கொண்டே வருவதுடன், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.தற்போது தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு
சிதம்பரத்தில் 200 கூடுதல்  ஆக்சிஜன் படுக்கைகள்...நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது-

சிதம்பரம்-சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லுாரியில் கூடுதலாக 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, நோயாளிகளின் பயன்பாட்டிற்கு வந்தது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாவட்டத்தில் தொற்று பாதிப்பு கூடிக்கொண்டே வருவதுடன், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.தற்போது தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, ஆக்சிஜன் சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், கடலுார் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 761 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளன.இதனால், மாவட்டம் முழுதும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது.மாவட்டத்தில் கொரோனாவுக்கு முக்கிய சிகிச்சை மையமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இம்மையத்தில் 320 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி உட்பட 550 படுக்கைகளில் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இம்மருத்துவமனைக்கு மாவட்டம் மட்டும் இன்றி, சுற்றியுள்ள நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சைக்கு வருகின்றனர்.இதனால், கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இங்கு, தலா 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு ஆக்சிஜன் சேமிப்பு மையங்கள் உள்ளன. இதில், ஒரு மையம் மட்டும் செயல்பாட்டில் உள்ளதால், அதிக அளவில் வரும் நோயாளிகளை சமாளிக்க முடியாமல் நிர்வாகம் திணறியது.இந்நிலையில், கூடுதலாக 250 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய ஒரு சிகிச்சை மையம் பல்கலைக்கழக மருத்துவமனையில் தயார் செய்துவைக்கப்பட்டது. ஆனால், அரசு தரப்பிலிருந்து ஆக்சிஜன் போதுமான அளவில் கிடைக்காத நிலையில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இதற்கிடையே பல்கலைக்கழக மருத்துவமனையை ஆய்வு செய்த வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், மாவட்டத்தில் கூடுதல்ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் அமைத்து நோயாளிகளுக்கு எவ்விதபாதிப்பும் இல்லாமல் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.அதன்படி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கூடுதலாக 200 ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று துவக்கி வைத்தார்.இதனால் பல்கலைக் கழக மருத்துவமனையில் நேற்று முதல் ஆக்சிஜன் படுக்கைகள் 550 ஆக உயர்ந்துள்ளது.மேலும் புதிதாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் சேமிப்பு கலனும் செயல்பட துவங்கியது. இரு கலன்களுக்கும் தலா 3 கிலோ லிட்டர் அரசு தரப்பில் இருந்து வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், 'கொரோனா தொற்று, ஊரடங்கால் 50 சதவீதமாக குறைந்துள்ளது. நோய் பாதிப்பு இல்லாத நிலை விரைவில் உருவாகும். ஊரடங்கு ஒரு கசப்பான மருந்து தான், அந்த மருந்தை கொடுத்தால் தான் குணமாக முடியும்' என்றார்.சிதம்பரம் சப் கலெக்டர் மதுபாலன், நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வீன், தாசில்தார் ஆனந்த், பொறியாளர் மகராஜன், ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி முன்னாள் கண்காணிப்பாளர் சண்முகம், டாக்டர் ராமநாதன் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X