முன்பெல்லாம் எதிரி நாட்டையோ, எதிரியையோ அழிக்க வேண்டுமானால் கையில் ஆயுதங்களை எடுப்பர்; படையாட்களை அனுப்புவர். இன்று அதெல்லாம் தேவையில்லை. போர்தளவாடங்களோ, அணு ஆயுதங்களோ தேவையில்லை; வதந்திகளே போதுமானது.உள்ளங்கையில் உலகச் செய்திகளை உடனுக்குடன் பெறும் இணைய காலத்தில் வைரசை விட வேகமாக வதந்திகள் பரவுகின்றன.
'பிரேக்கிங் நியூஸ்' எனும் பெயரில் செய்திகளை பரப்பும் தொலைக்காட்சிகளாகட்டும், 'வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக வலைதளங்களாகட்டும் வடிகட்டாத பல செய்திகளும், வதந்திகளும், அடர்த்தியாக பரவிக் கொண்டிருக்கின்றன.
சிரிப்பு உலா
ஒரு நல்ல வெற்றிக்கு பின் உள்ள பின்னணியை ஆராய்வதை விட, ஒரு தோல்விக்கு பின் இருக்கும் குப்பையை கிளறுவதில், தெரு நாய்களை விட மோசமானதாக இருக்கிறது சில வக்கிர மனங்கள். ஒரு தவறு நடக்குமானால், அதன் அடிப்படையை கண்டுபிடித்து முற்றும் களைதல் என்பது ஆரோக்கியமான சமூகத்தின் தலையான செயல். ஆனால், ஒரு மரத்தில், ஒரு பழம் அழுகி விட்டது என்பதற்காக, வேரில் சுடுநீரை நிரப்புவது அழுகிய மனங்களை தான் காட்டுகிறது.
சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொரு நபரும், தவறு நடக்கும் போது, பொங்கி எழுவது அவரது சமுதாய அக்கறையை வெளிப்படுத்தும் நிகழ்வாக இருக்கும். ஆதிச் சமூகத்தில் இருந்து தொடரும் குற்றங்களை, மனசு வகைப்படுத்தி வைக்கிறது. சில குற்றங்களை சிலர் செய்யும் போது அவற்றை மாற்ற முடியாது என்ற நிலையில், ஏற்றுக் கொள்ளவும் பழகித் தொலைத்து விட்டனர்.
அரசு அலுவலகங்கள் என்றால் லஞ்சம் என்பதைப் போல. 'அரசு வேலையில் இருக்கும் அப்பாவிடம் நுாறு ரூபாய் கொடுத்து ரேங்க் கார்ட்டை நீட்டினேன். கையெழுத்து போட்டு விட்டார்' என்று சிரிப்பு உலா வருகிறது. அதுபோல, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் எடை குறைவாகத் தான் இருக்கும் என்பதை நினைவூட்டும் வகையில், 'ரேஷன் கடைக்காரருக்கு குழந்தை பிறந்தது எடை குறைவாக' என கவிதைகளும் வலம் வருகின்றன. காவல் துறை என்றாலே மாமூல் வாங்கும் துறை என்ற அளவுக்கு நிலைமை மாறி விட்டது.
அதை வைத்து எழுதப்படும் ஜோக்குகளும், சிரிப்புகளும், துணுக்குகளும் அதிகம். அரசியல்வாதிகள் என்றால் ஊழல்வாதிகள் என்று தான் பெயர் என்பதை உறுதிபடுத்துவது போல, அவர்களைப் பற்றிய பல்வேறு ஊழல் ஜோக்குகள் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வருகின்றன. அவற்றை பார்த்ததும், படித்ததும் சிரிப்பு வருகிறது. அந்த சிரிப்பின் உள்ளே, சமூக கேடு இருக்கிறது என்பது தெரிவதில்லை; தெரிந்தாலும், பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
இதுபோன்ற எத்தனையோ தவறுகளை, முறைகேடுகளை சிரித்து நாம் மறந்து விடுகிறோம். ஆனால், சில தவறுகளை என்றுமே நம் மனம் ஏற்றுக் கொள்ளாது. அதில் ஒன்று, ஆசிரியர்கள் பண்ணும் தவறுகள்.ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்பிள்ளைகளை அவர்களது தவறுக்காக, சிறிதளவுக்கு கூட தண்டிக்க கூடாது என்ற நிலை வரும் வரை, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஆசானாக மட்டுமல்ல; இன்னொரு தந்தையாகவும் இருக்க வேண்டும்.
மாணவர்கள் கூட, தன் தந்தை தவறு செய்தால் ஏற்றுக் கொள்வர்; ஆனால், ஆசிரியர்கள் தவறு செய்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.அவர்களைப் பொறுத்தவரை, ஆசிரியர் என்பவர் ஒழுக்கத்தின் உறைவிடம். அப்படித் தான் ஆசிரியர்களும் இருந்தனர். அந்த காலத்தில், அரிதாக புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள சில ஆசிரியர்கள், மாணவர்கள் கண்ணில் படாமல் புகைப்பிடிக்க விரும்புவர். அதற்காக, மந்திரவாதியின் உயிரை தேடிப் போகும் இளவரசர்களைப் போல, ஏழு கடல், ஏழு மலை தாண்டி, ஒரு ரகசிய இடத்தை கண்டுபிடித்து, அங்கு சென்று புகைப்பிடிப்பர்.
முன்பு உலக ஞானங்களைக் கற்று, நல்ல குடிமகனாக தன் மகன் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில், பிள்ளைகளை பெற்றோர் படிக்க அனுப்பி வைத்தனர். மாணவர்களையும், தங்களது பிள்ளைகளாக ஆசிரியர்கள் நினைத்தனர். ஆனால் இன்று ஆசிரியர்களின் கைகளும் கட்டப்பட்டுள்ளன.மதிப்பெண் பெறுவது மட்டுமே படிப்பின் நோக்கம் என்ற எண்ணம் வர ஆரம்பித்து விட்டது.
இவை எல்லாவற்றிற்கும் உச்ச கட்டமாக, நம் சினிமாக்கள், ஆசிரியர் - மாணவர் உறவைக் கொச்சைப் படுத்த ஆரம்பித்து விட்டன. ஆசிரியையின் காதலுக்காக ஒற்றைக்காலில் தவமிருக்கும் மாணவரை ரசித்துப் பார்க்க ஆரம்பித்து விட்டோம். தன்னை விட வயதில் மூத்த ஆசிரியையை ஏமாற்றி கல்யாணம் பண்ணும் சினிமாவை வெற்றி பெற வைத்தோம். இதனால் கிருமிகள் உருமாறுவது போல, ஆசிரியர்களின் குணமும் உருமாற ஆரம்பித்து விட்டது; பாசத்தோடு பார்க்க வேண்டிய குழந்தைகளை, காமத்தோடு பார்க்க ஆரம்பித்தனர்.
செய்தித்தாளை பார்த்தால், ஏதாவது ஒரு பக்கத்தில், ஏதாவது ஒரு ஆசிரியரின் சீண்டுதல் பற்றிய செய்தி வந்தபடியே உள்ளது. புத்திசொல்லி நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியரே, புத்திமாறி தவறு செய்யும் போது, அவருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.இந்த மாதிரி தவறு செய்யும் ஆசிரியர்களை சிறிதும் கருணையின்றி களையெடுக்க வேண்டும். ஆனால், களையெடுப்பதற்கு பதிலாக, களை வந்து விட்டது என்பதற்காக, வயலையே அழிக்க வேண்டும் என்று நினைப்பது தவறு.
ஒரு வீட்டின் மொட்டை மாடியில், 13 மாணவர்களுடன் சிறிய செடியாக முளைவிட்டு, இன்று பெரிய ஆலமரமாக வளர்ந்து, எண்ணற்ற மாணவர்களை தந்துள்ள, அந்த கல்வி நிலையத்தின் அஸ்திவாரத்தையே அசைத்து, கல்வி நிறுவனத்தை நாசமாக்க நினைக்கும் மனநிலையை என்னவென்று சொல்வது?
ஒரு சில நீதிபதிகள் மேல் குற்றம் சுமத்தப்படுகிறது என்பதற்காக நீதிமன்றங்களை மூடி விட முடியுமா... காவல் நிலையத்தில் மரணம் ஏற்பட்டு விட்டது என்பதற்காக காவல் நிலையங் களை மூடி விட முடியுமா... அப்படி செய்தால் நாடு என்னவாகும்? தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டுமே தவிர, ஓட்டு மொத்த நிறுவனத்தையும் அல்ல! ஒருவன் மீது கருத்து வேறுபாடோ, பகையோ இருக்கும் என்றால், அதை நேரடியாக எதிர்கொள்வது தான் உண்மையான வீரனுக்கு அழகு.
மனிதர்களுக்காக அல்ல
ராமாயணத்தில் கூட யுத்தம் நடக்கும் போது, ஆயுதம் இல்லாத ராவணனுடன் போரிட விரும்பாத ராமன், 'இன்று போய் நாளை வா' என்று அனுப்பி வைக்கிறான். சூரியன் மறைந்து விட்டால், யுத்தம் புரியக் கூடாது என்று கட்டுப்பாடு வைத்திருந்தனர். ஆனால் இன்றோ, அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு விட்டனர்.
இன்று, கொரோனாவால் மக்கள், கொத்து கொத்தாக மரணத்தை தழுவிக் கொண்டிருக்கும் போதும், சில சமுதாய போராளிகள் அறிக்கைகளும், கண்டனங்களுமாக பொங்கிக் கொண்டு இருக்கின்றனர்; அனல் கக்க பேசிக் கொண்டு இருக்கின்றனர்.இவர்கள் எல்லாம் கவலைப் படுவது, கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்காக அல்ல.
இந்த கொரோனாவை சாக்காக வைத்து கொள்ளை அடிக்கும் தனியார் மருத்துவமனைகளைப் பற்றியோ, எரியும் வீட்டில் பிடிங்கியவரை லாபம் என்று பத்து ரூபாய் விற்க வேண்டிய பொருளை, நுாறு ரூபாய்க்கு விற்கும் நபர்களை பற்றியோ அல்ல.உயிர்காக்கும் மருந்தை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்கும் கயவர்களைப் பற்றியும் அல்ல. பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்ட ஆசிரியர் மீது கூட அல்ல; அந்த கல்வி நிறுவனத்தின் மீது மட்டுமே.
மாணவியரிடம் அத்துமீறி நடந்து கொண்ட ஆசிரியரை விட்டு விட்டனர்; அந்த கல்வி நிறுவனத்தை தாக்குகின்றனர். அதற்கு காரணம், ஜாதி.அந்த கல்வி நிறுவனத்தின் மீது மட்டும், இவர்களுக்கு ஏன் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி என்று பார்த்தால், அதன் பின்னணியில் ஜாதி அரசியலும், பிராமண துவேஷமும் உள்ளதை காண முடிகிறது. கண்டனக் கணைகளை வீசுபவர்கள் யார் என பார்த்தால், அத்தனை பேரும் 'அக்மார்க்' ஜாதியவாதிகளே.
நிர்பயாவை துன்புறுத்தி கொன்ற பாலியல் குற்றவாளிகளுக்கும், அதன் பின் அது போன்ற குற்றம் புரிந்தவர்களுக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றிய போது, மரண தண்டனை கூடாது என்று குரல் எழுப்பியவர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் தான், இன்று அந்த கல்வி நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என்கின்றனர்.
வன்மக் கிருமிகள்
பாலியல் குற்றவாளிக்கு, அரபு நாடுகளில் உள்ளது போன்ற கடுமையான தண்டனைகள் கொடுத்தே தீர வேண்டும். அதற்கு யாரும் இங்கே எதிர்ப்பு சொல்லப் போவதில்லை. ஆனால், இன்று எழும் எதிர்ப்பு குரல்களைப் பார்த்தால், சில சந்தேகங்கள் மனதில் எழுகின்றன. கொரோனா பதுங்கி இருந்து, இன்று உருமாறி தாக்குதல் நடத்தி, உயிர்களை பலி வாங்குவதைப் போல, சில நபர்களின் மனதில் பதுங்கியிருந்த பழைய வன்மங்களும், பகையும், தொழில் போட்டியும், அவர்களை இப்படி பேச வைக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஒருவன் தவறு செய்யும் போது, அதை சட்டத்தின் மூலம், அரசால் எதிர் கொள்ள முடியும். அந்த ஆசிரியரை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பணியை விட்டு நீக்க முடியும்; அவருக்கு ஜெயில் தண்டனை வழங்க முடியும். இப்படி இருக்க ஏன் இந்த ஆர்ப்பாட்டங்கள்... கோபாவேச செய்தி பரப்பல்கள்?
இந்த, 21ம் நுாற்றாண்டில், கொடிய கொரோனாவால், நம் நெருங்கிய உறவுகள் பலரின் இழப்பு, மனதை கனக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் அந்த கொரோனாவைக் கூட தடுப்பு ஊசி, தகுந்த பாதுகாப்பு மூலம் துரத்தி விடலாம்.ஆனால், இது போன்ற மனங்களில் மண்டிக்கிடக்கும் வன்மக் கிருமிகளுக்கு மருந்து எப்போது கண்டுபிடிக்க போகிறோம் என்பது தான் தெரியவில்லை.
அழகர்
சமூக ஆர்வலர்
தொடர்புக்கு:
இ-மெயில்: kumar.selva28769@gmail.com