சென்னை:'நான் நிச்சயம் வருவேன். கட்சியை சரி செய்து கொள்ளலாம்' என, தன் ஆதரவு தொண்டரிடம், சசிகலா பேசிய ஆடியோ, சமூக வலைதளங்களில், வேகமாக பரவி வருகிறது.
சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலாவுக்கு, அ.ம.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் வந்தால், அ.தி.மு.க., நிர்வாகிகள் அவர் பக்கம் செல்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் செல்லவில்லை. அதைத் தொடர்ந்து, அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக, சசிகலா அறிவித்தார். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தோல்வியை தழுவியது. தினகரனின் அ.ம.மு.க., படு தோல்வியை சந்தித்தது.
இந்தச் சூழ்நிலையில், சசிகலா மீண்டும் அரசியலுக்கு வர உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. அவர், லாரன்ஸ் என்ற தொண்டரிடம், மொபைல் போனில் பேசியது, சமூக வலை தளங்களில், வேகமாக பரவி வருகிறது.
லாரன்சிடம் பேசிய சசிகலா, 'நல்லா இருக்கிறீர்களா, வீட்டில் எல்லாம் நல்லா இருக்கிறார்களா' என, நலம் விசாரிக்கிறார். பின்னர், 'நான் சீக்கிரம் வந்து விடுவேன்; கவலைப்படாதீங்க. கண்டிப்பாக கட்சியை சரி செய்து விடலாம். எல்லாரும் தைரியமாக இருங்க. கொரோனா முடிந்ததும் நான் வந்துவிடுவேன். எல்லாரும் ஜாக்கிரதையாக இருங்க. நிச்சயம் வந்துவிடுவேன்' என, கூறுகிறார்.இந்த ஆடியோ, அ.ம.மு.க.,வினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE