புதுடில்லி:''கொரோனா பெருந்தொற்று காலத்திலும் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களை இந்தியாவெற்றிகரமாக சமாளித்துள்ளது. முதல் அலைக்கு எதிராக, துணிச்சலாக போராடி வெற்றி பெற்ற நாம், இரண்டாவது அலைக்கு எதிரான போரிலும், விரைவில் வெற்றி பெறுவோம். இதற்கான நம்பிக்கை தெரிய துவங்கியுள்ளது,'' என, பிரதமர் மோடி கூறினார்.
ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று வானொலியில், 'மன் கி பாத்' எனப்படும், மனதின் குரல் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசி வருகிறார்.
இயற்கை பேரிடர்கள்
இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று, 77-வது மன் கி பாத் நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: கொரோனா முதல் அலைக்கு எதிராக துணிச்சலுடன் போராடி வெற்றி பெற்றோம். முதல் அலையின்போது, 'அம்பான், நிசார்க்' ஆகிய புயல்களை எதிர்கொண்டோம். பல மாநிலங்களில் வெள்ளம், நிலநடுக்கம், நிலச்சரிவு என, இயற்கை பேரிடர்களையும் வெற்றிகரமாக சமாளித்தோம். கடந்த, 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பெருந்தொற்றாக கொரோனா உள்ளது. இப்போது இதன் இரண்டாவது அலையை எதிர்த்து போராடி வருகிறோம்.
அதேநேரத்தில் இரண்டு இயற்கை பேரிடர்களை மிக வெற்றிகரமாக இந்தியா சமாளித்துள்ளது. எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் உறுதியுடன் அதை சமாளிப்போம் என்பது உறுதியாகி உள்ளது. கடந்த, 10 நாட்களில் நம் நாடு, இரண்டு புயல்களை சந்தித்தது. 'டாக்டே' புயல் மேற்கு கடற்கரையையும், 'யாஸ்' புயல் கிழக்கு கடற்கரையையும் தாக்கியதில், பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டன.நாடும், மக்களும், வலிமையுடன் புயல்களை எதிர்த்து போராடிஉயிரிழப்பை குறைத்தனர். புயல், மழை காலங்களில் துணிச்சலுடன் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி. தங்கள் உற்றார், உறவினரை இழந்து வாடும் அனைவருக்கும், ஆழ்ந்த இரங்கல். கொரோனா தொற்றுக்கு எதிராக டாக்டர்கள், நர்சுகள் மற்றும் முன்கள பணியாளர்கள் இரவு, பகல் பாராமல், தன்னலமின்றி உழைத்து வருவதை பார்த்து வருகிறோம்.
9,500 டன் ஆக்சிஜன்
இரண்டாவது அலை, இந்தியாவை தாக்கிய போது, ஆக்சிஜன் தேவை அதிகரித்து, பெரிய சவாலாக மாறியது. ஆனால், தற்போது நாள் ஒன்றுக்கு, 9,500 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப் படுகிறது. இரண்டாவது அலைக்கு எதிராக, நாம் மிகப்பெரிய போரை நடத்தி வருகிறோம். நீர், நிலம், வான்வழி வழியாக தேவையான உதவிகளை பெற்று வருகிறோம்.நம் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்கள், போர்க்காலத்தில் செயல்படுவதுபோல் செயல்பட்டு வருகின்றனர்.
அனைத்து மக்களின் நலனை மனதில் வைத்து, இவர்கள் மிகுந்த ஆர்வத்தோடும், புரிதலோடும் பணியாற்றி வருகின்றனர். ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள், டேங்கர்கள் ஆகியவை வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படுகின்றன. இந்த பணியில் விமானப்படை, கடற்படை மற்றும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை ஈடுபட்டுள்ளன.
கொரோனா இரண்டாவது அலையில், போக்கு வரத்து வசதியில்லாத பகுதிகளுக்கு ஆக்சிஜன் எடுத்து செல்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால், நம் ஆக்சிஜன் டேங்கர் லாரி ஓட்டுனர்கள், போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, லட்சக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றிஉள்ளனர்.கொரோனா முதன்முதலில் பரவிய போது, இந்தியாவில் ஒரு பரிசோதனை மையம் மட்டுமே இருந்தது. தற்போது, 2,500 பரிசோதனை மையங்கள் உள்ளன.
33 கோடி பேர்
துவக்கத்தில் தினமும் சில ஆயிரம் பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டது. இப்போது தினமும், 20 லட்சம் பேருக்கு மேல் பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை, 33 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.நாட்டின் அனைத்து துறைகளும், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த தாக்குதலில் இருந்து, மக்களை விவசாய துறை பாதுகாத்து வருகிறது.
விவசாய உற்பத்திஅதிகரித்ததால், 80 கோடி மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்க முடிகிறது. 'கிசான்' ரயில் வாயிலாக இதுவரை, 2 லட்சம் டன்னுக்கும் அதிகமான காய்கறிகள், பழங்கள் நாடு முழுதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மத்தியில் என் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஏழு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது.
அனைத்து மக்களுக்கான அரசாக, இந்த அரசு செயல்படுகிறது.ஏழு ஆண்டு கால ஆட்சியில் சுத்தமான குடிநீர், வீடு, மின்சாரம், சுகாதாரம் என அனைத்தும் கிடைத்து, கோடிக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், 70 ஆண்டுகளுக்கு பின், எங்களுக்கு மின் வசதி, சாலை வசதி, வங்கி வசதி கிடைத்துள்ளது என தெரிவித்து உள்ளனர்.
அடையாளம்
கொரோனா முதல் அலையை வெற்றிகரமாக எதிர்கொண்டது போல், இரண்டாவது அலைக்கு எதிராகவும் விரைவில் வெற்றி பெறுவோம். பல இயற்கை இடர்ப்பாடுகள் வந்தபோதும், மக்கள் துணிச்சலாக எதிர்கொண்டு, ஒழுக்கத்துடனும், பொறுமையுடனும் செயல்பட்டது பெருமை அளிக்கிறது. இரண்டாவது அலை பரவல் கடந்த சில நாட்களாக குறைந்து வருவதை, நாம் வெற்றி பெறுவதற்கான அடையாளமாக, நம்பிக்கையாக பார்க்கிறேன். இவ்வாறு மோடி பேசினார்.
விமானப்படை கேப்டனுடன் பேசிய பிரதமர்
'மன் கி பாத்' நிகழ்ச்சியின் போது, உத்தர பிரதேச மாநிலம், ஜூவன்பூரைச் சேர்ந்த ஆக்சிஜன் டேங்கர் டிரைவர் தினேஷ் உபாத்யாய், ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர் ஷிரீஷா, விமானப்படை கேப்டன் பட்நாயக், அவரது, 12 வயது மகள் அதீதி ஆகியோருடன் பிரதமர் மோடி தனித்தனியாக உரையாடினார்.
அப்போது பிரதமர் கூறியதாவது:இந்த சோதனை நேரத்தில் லட்சக்கணக்கான உயிர்களை நீங்கள் காப்பாற்றியுள்ளீர்கள்.ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை பெண்கள் இயக்கியது பெருமிதப்பட வைத்துள்ளது. போர்க்காலத்தில் செயல்படுவது போல், கொரோனா காலத்தில் நம் முப்படை வீரர்கள் செயல்பட்டு வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
பட்நாயக் மகள் அதீதி, பிரதமரிடம் கூறுகையில், ''என் தந்தையை நினைத்தால் பெருமையாக உள்ளது. தொற்று பிரச்னையிலிருந்து நாம் விரைவில் மீண்டு வருவோம்,'' என்றார்.இதற்கு பதில் அளித்த பிரதமர், ''கொரோனா தொற்றிலிருந்து விரைவில் மீள்வோம் என நீ கூறியதை, சரஸ்வதி தேவியே கூறியதாக கருதுகிறேன்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE