புதுடில்லி:''பா.ஜ., தலைவர்களும், தொண்டர்களும், கொரோனா நிவாரண பணிகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளது பெருமை அளிக்கிறது. ஆனால், எதிர்க்கட்சியினர் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்,'' என பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
மத்தியில் பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைந்து, நேற்றுடன் ஏழாண்டுகள் முடிவடைந்து உள்ளது.
'வீடியோ கான்பரன்ஸ்'
கொரோனா தொற்று பரவல் தீவிரமாக உள்ளதால், ஏழாம் ஆண்டு விழாவை விமரிசையாக கொண்டாட வேண்டாம் என்றும், கொரோனா நிவாரண பணிகளில், தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும், பா.ஜ., தலைமை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், கட்சி தொண்டர்களுக்கு, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று உரையாற்றியதாவது: பா.ஜ., ஆட்சி அமைந்து ஏழாண்டுகள் நிறைவடைந்து உள்ளதை ஒட்டி, பா.ஜ., - எம்.பி.,க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தலா இரண்டு கிராமங்களில் மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஒரு லட்சம் கிராமங்களில், நலத்திட்ட பணிகளில் பா.ஜ., தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில், பா.ஜ., தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சியினர், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, செய்தியாளர்கள் கூட்டம் நடத்துவதிலேயே கவனமாக உள்ளனர். அவர்கள் அனைவரும், வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.
பல்வேறு திட்டங்கள்
இப்போது தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து கூச்சலிட்டு வரும் எதிர்க்கட்சியினர் தான், சில மாதங்களுக்கு முன், தடுப்பூசி குறித்து சந்தேகங்களை எழுப்பினர்.இவ்வாறு அவர் கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:கடந்த ஏழு ஆண்டுகளில், நாட்டில் இதற்கு முன் எந்த அரசும் செய்யாத பல சாதனைகளை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்துள்ளது. ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு, பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் ஆவேசம்!
பா.ஜ.,வின் ஏழாண்டு ஆட்சி குறித்து, காங்., செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:கடந்த ஏழு ஆண்டுகளில் முன் எப்போதும் சம்பவிக்காத பேரழிவு, பொறுப்பு துறப்பு, மக்கள் கைவிடப்படுதல் ஆகியவற்றை இந்த நாடு சந்தித்துள்ளது. மக்கள் ஏன் இன்னல்களை சந்திக்க வேண்டும் எனக் கேள்வி கேட்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
ஏழு ஆண்டுகளில் பா.ஜ., அரசு செய்த நன்மை என்ன என்பதை கணக்கு பார்க்க வேண்டிய நேரம் இது.இவ்வாறு அவர் கூறினார்.கடந்த ஏழு ஆண்டுகளில், பா.ஜ., அரசின் தோல்விகளை பட்டியலிட்டு, 'பாரத மாதாவின் கதை' என்ற பெயரில், 4.50 நிமிடங்கள் ஓடக்கூடிய காணொலியை காங்., தயாரித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE