சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

எதிர்பார்ப்புகள் ஏராளம் உள்ளன!

Updated : ஜூன் 01, 2021 | Added : மே 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழக சட்டசபை தேர்தலில், அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில், ஓட்டுகளை, குறிப்பாக, பெண்களின் ஓட்டுகளை கவரும் பொருட்டு, இலவச பொருட்கள் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் தவறாது இடம் பெறுகின்றன. சமீப காலமாக, விலையில்லா பொருட்கள் ஏதேனும் கண்டிப்பாக வழங்குவர் என்ற எதிர்பார்ப்பு, மக்கள் மத்தியில் நிரந்தரமாகிவிட்டது.அதற்கேற்ப, அரசியல் கட்சிகளின் தேர்தல்
 எதிர்பார்ப்புகள்,ஏராளம்,உள்ளன!

தமிழக சட்டசபை தேர்தலில், அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில், ஓட்டுகளை, குறிப்பாக, பெண்களின் ஓட்டுகளை கவரும் பொருட்டு, இலவச பொருட்கள் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் தவறாது இடம் பெறுகின்றன.

சமீப காலமாக, விலையில்லா பொருட்கள் ஏதேனும் கண்டிப்பாக வழங்குவர் என்ற எதிர்பார்ப்பு, மக்கள் மத்தியில் நிரந்தரமாகிவிட்டது.அதற்கேற்ப, அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் அமைகின்றன. அரசியல் கட்சிகள் வழங்கும் விலையில்லா பொருட்கள் இல்லாத வீடுகளே இல்லை என்ற போதும், ஓட்டுகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில், மேலும் மேலும் அறிவிக்கின்றனர்.தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்படும் வாக்குறுதிகளை எண்ணும் போது, அவற்றை நிறைவேற்ற ஐந்தாண்டு கால அவகாசம் போதுமா; விலையில்லா பொருட்கள் வழங்க போதுமான நிதி உள்ளதா என்ற எண்ணம் நம்முள் எழவே செய்கிறது.

ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். இதற்கிடையே கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளும், தனித்தும் போட்டியிடக் கூடிய அரசியல் கட்சிகளும், சாத்தியமாகும் அல்லது சாத்தியமாகாத தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கின்றன.ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பின், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதில்லை.

ஆனால், அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா என்பதை பற்றி காலப்போக்கில் மக்களும் மறந்து விடுகின்றனர். இது தான் காலங்காலமாக நடந்து வருகிறது. அவ்வாறு தான், தற்போதைய புதிய அரசும், 502 வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. இந்த வாக்குறுதிகள் எப்போது, எவ்வாறு நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுவான வகையில் இருந்தாலும், பல்வேறு துறைகளில் பலவகையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழவே செய்கிறது.

தற்போதைய புதிய அமைச்சரவையில், இரண்டு பெண்கள், 15 புதுமுகங்களுடன், 33 பேர் அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர். இவர்களில், 18 பேர் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள்; அனுபவம் வாய்ந்தவர்கள். புதியவர்களில் பெரும்பாலானோர் அரசியல் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தாங்கள் சார்ந்த துறைகளின் அவசிய, அத்தியாவசியம் பற்றி அறிந்திருப்பர் என்பது நிச்சயம்.

தமிழகத்தில் அதிகமானோர் வேளாண்மையை சார்ந்து வாழும் நிலையிலும், கிராமங்களில் துவங்கிய தண்ணீர் தொடர்பான தாவாக்கள், அண்டை மாவட்டங்கள் வழியே அண்டை மாநிலங்கள் வரை சென்றுள்ள நிலையில், புதிய அமைச்சரவையில் நீர்ப்பாசனத் துறை எனும் புதிய துறை உருவாக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க விஷயமாகும்.

குறைவான மழைப்பொழிவு, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் அபாயம், விவசாயிகள் தற்கொலை, நீர்நிலைகளின் சீரழிவு என்ற சூழலில் தான், புதிய அரசு அமைந்திருக்கிறது. அதனால் அதிகப்படியானோர் சார்ந்துள்ள வேளாண் துறையில், பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது அவசியமானதாகும்.அதிகப்படியான நீராதாரங்களை கொண்டுள்ள மாநிலமாக தமிழகம் விளங்கிய போதும், அதிகரித்து வரும் மக்கள்தொகைப் பெருக்கம், தொழிற்சாலைகள், குறைவான மழைப்பொழிவு போன்றவற்றால், தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தனிநபர் ஒருவருக்கு சராசரியாகக் கிடைத்த நீரின் அளவு குறைந்து வருகிறது. தண்ணீர்ப் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான மாற்றமே, தண்ணீர் பிரச்னைக்குக் காரணமாக இருப்பினும், தண்ணீரைச் சேமிப்பது தொடர்பான விவாதங்களில், பெரும்பாலும் அணைகள் தான் முன்வருகின்றன. ஏரிகள், குளங்கள் பற்றியும், அதன் இன்றைய நிலைமை பற்றியும் நாம் விவாதிப்பதில்லை.கிராமப்புற ஏரிகள் வாய்க்கால் வழியே ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருந்தது என்பது அதன் தனித்துவமாகும்.

காலப்போக்கில் அதற்கான வழித்தடங்கள் அப்பகுதியில் உள்ள நில உரிமையாளர்களால் துண்டிக்கப்பட்டதால், அனைத்து ஏரிகள், குளங்கள் துண்டிக்கப்பட்டு விட்டன. நிலப்பகுதிகளில் இருந்த ஏரிகளும், குளங்களும் அப்பகுதியில் உள்ள நில உரிமையாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு குட்டை போன்று சுருங்கி விட்டன.

புதிய நீராதாரங்களை உருவாக்குவது என்பது சவால் நிறைந்த ஒன்றென்ற நிலையில், இருக்கின்ற நீர்நிலைகளைப் பராமரித்து, மழை நீரைச் சேமிக்க வேண்டியது கட்டாயமாகும். இத்தகைய சூழலில் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழை நீரைச் சேமிக்கும் தன்மைக்கு மாற்ற வேண்டியது புதிய அரசின் முன்பிருக்கும் சவாலாகும்.

இந்த விஷயத்தில் தமிழக விவசாயிகளிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்று தான் கூற வேண்டும். அதிகப்படியான தண்ணீர் தேவையுள்ள நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களிலிருந்து, தண்ணீர் தேவை குறைவான பயிர்களுக்கு மாறுவதில் தயக்கம் காட்டுகின்றனர். இதற்கு விழிப்புணர்வு இல்லை என்பதுடன், அரசின் செயல்பாடுகளும் காரணங்களாகும்.

குறைந்த அளவு தண்ணீர் தேவையுள்ள காய்கறிகள், மலர்கள் சாகுபடி செய்யும் வகையில், அந்தந்த பகுதிகளில் குளிர்சாதன கிடங்கு மற்றும் சந்தை வசதியை ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக, தடுமாற வைக்கும் வகையில் தக்காளி விலை உயரும் அதே வேளையில், போதிய விலையில்லாமல் சாலையோரங்களில் கொட்டப்படுவதையும் நாம் காண நேரிடுகிறது. குளிர்சாதன கிடங்கு இருக்கும் பட்சத்தில் இத்தகைய நிலையை தவிர்க்க முடியும் அல்லவா!

தமிழகத்தில் வேளாண் துறையோடு உபதொழிலாக கால்நடைகள் வளர்ப்பு அதிகமாகவே உள்ளது. கால்நடைகளை மட்டுமே நம்பி வாழும் ஏழை விவசாயிகள் கிராமங்களில் உள்ளனர். கிராமங்களில் குறிப்பிட்ட காலத்தில் அதிகப்படியான அளவில் பால் உற்பத்தி உள்ளது. அதிகப் படியான கால்நடைகள் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து, கால்நடை மருத்துவமனைகளையும், பால் குளிரூட்டும் நிலையங்கள் போன்றவற்றை அமைக்க வேண்டும். உயர்கல்வியைப் பொறுத்தமட்டில் தமிழகம் பின்தங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

நம் நாட்டில், கல்லுாரி படிப்பிற்குச் செல்லும் வயதினரான, 18 - 24 வயது பிள்ளைகளில், 100ல் 12 பேர் மட்டுமே கல்லுாரிக்குச் சென்று படிக்கும் வாய்ப்பை பெறுகின்றனர். இது, தேசிய அளவில், 1.4 கோடி பேராகும். ஆனால், பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளோ, 22 கோடியாகும். இதை வளர்ந்த நாடுகளுக்கு இணையாகக் கொண்டு வர, ஏராளமான பல்கலைக்கழகங்களும், கல்லுாரிகளும் தேவைப்படும் என மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கணக்கிட்டுஉள்ளது.

தமிழகத்தில், 37 பல்கலைக்கழகங்கள், 500க்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் அரசு பல்கலைக்கழகங்களும், பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லுாரிகளும் அடங்கும்.அண்மை காலமாக பட்டப்படிப்பு பயில்வதில், ஆண்களைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அறிவியல் பாடப் பிரிவுகளில் பயில விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அரசு கல்லுாரிகளில் கலை பாடப்பிரிவுகளுக்கு கட்டட வசதிகள் இருந்தால் மட்டுமே போதுமானது. அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு கட்டட வசதிகளுடன் ஆய்வக வசதிகளும் தேவையாகும். ஆனால், போதுமான ஆய்வக வசதிகள் இல்லாததால் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவ, மாணவியர் பயிலும் நிலை உள்ளது. அதிகப்படியான கல்லுாரிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையே உள்ளது.

சமீப காலமாக, கணினி அறிவியல் துறையில் பயிலுவோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. தனியார் கல்லுாரிகளில் அதிகப்படியான கட்டணம் செலுத்தி படிக்க இயலாத ஏழை மாணவ, மாணவியர், அரசு கல்லுாரிகளில் பயில்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் புதிதாக துவங்கப்பட்ட அரசு கல்லுாரிகளில் இவ்வகை பாடப்பிரிவுகளை தொடங்குவதுடன் இதற்கான வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும்.

கடந்த ஆட்சிக்காலத்தில் புதிதாக துவங்கப்பட்ட அரசு கல்லுாரிகள் அப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. புதிய கல்லுாரிகளுக்கான பேராசிரியர்கள், பணியாளர்கள் நியமனம் செய்து, புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டடங்கள் கட்டித்தருவது அவசியமானதாகும். தமிழகம் முழுதும் உள்ள அரசு பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகளில் அனைத்து நிலைகளிலும் அதிகப்படியான காலிப்பணியிடங்கள் உள்ளன.

நீண்ட காலமாக இருந்துவரும் காலிப்பணியிடங்களை அரசியல் தலையீடின்றி நிரப்புவது அவசியமானதாகும். புதிதாக துவங்கப்படும் அரசு கல்லுாரிகளில் வழக்கமான பாடப் பிரிவு களைக் காட்டிலும் அறிவியல் சார்ந்த புதிய பாடப்பிரிவுகளைத் துவங்க வேண்டும்.இந்திய குடிமைப்பணி படிப்பின் அளவு, தமிழகத்தில் குறைந்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. தமிழகத்தில் உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதுடன், முதுகலை மற்றும் முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொள்வோரின் எண்ணிக்கையும், தரமும் குறைவாகவே உள்ளது. இதுதொடர்பாக ஆய்வு செய்து இடர்பாடுகளைக் களைய வேண்டும்.

இந்திய குடிமைப்பணி படிப்பில் தமிழகம், 1954ல், 24 சதவீதமாக இருந்தது எனவும், தற்போது இதன் அளவு குறைந்து வருகிறது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.இந்திய குடிமைப்பணி தேர்வில், தமிழகம் முன்னேற அனைத்து கல்லுாரிகளிலும் அன்றாடம் ஒரு மணி நேரம் போட்டித் தேர்வுகள் தொடர்பான வகுப்புகளை நடத்துவது குறித்து ஆராயலாம்.

தமிழகத்தின் புதிய நிதியமைச்சராக பொறுப்பேற்றிருப்பவர் அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர், மெத்தப் படித்தவர், இளையவர் என்று பல்வேறு பரிமாணங்களைக் கொண்டுள்ளார். அதனால் தமிழகத்தின் அத்தியாவசிய, அவசிய தேவை எது என்பதைக் கண்டறிந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது தான் புதிய அரசிடம் அரசியல் அறிந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

குளிர்சாதன அறையில் இருந்தபடி, அமைச்சர்கள் மற்றும் நேர்மையான அதிகாரிகள் முன்னிலையில் வகுக்கப்படும் திட்டங்கள் குக்கிராமங்கள் வரை சென்றடைய வேண்டும். அப்போது தான் அத்திட்டம் பயனுள்ளதாகவும், வெற்றி பெற்றதாகவும் அமையும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.பொறுத்திருந்து பார்ப்போம்.

பெ. சுப்ரமணியன்

சமூக ஆர்வலர்

தொடர்புக்கு: 91597 23253

இ - மெயில்: psmanian71@gmail.com

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajarajan - Thanjavur,இந்தியா
31-மே-202106:45:02 IST Report Abuse
Rajarajan இதுக்கே இப்படி நொந்துபோனா எப்படி ?? மத்திய அரசு மீதி பழி போட இன்னும் வாய்ப்பு இருக்கு. எப்படி ?? ஏற்கனவே ஏழு லட்சம் கோடி கடன். அதற்க்கு வட்டி தனி. அரசு ஊழியர்களை வீட்டில் உக்காரவைத்து, இரண்டு வருட வேலை நீட்டிப்புடன் கூடிய சம்பளம், போனஸ் மற்றும் ஊதிய உயர்வுடன் கூடிய சலுகைகள். அதன் சம்பந்தப்பட்ட கூடுதல் பென்ஷன், ஓய்வு கால பலன், இலவச பேருந்து பயணம், கொரோனா பண சலுகை, பெட்ரோல் / டீசல் விலை குறைப்பு, குடும்ப தலைவிகளுக்கு மாத பென்ஷன், எரிவாயு விலை குறைப்பு போன்றவை. இதனுடன் அடுத்த சம்பள கமிஷனின் சுமை. இதற்க்கு தேவைப்படும் பல லட்சம் கோடி. இந்த அழகில், GST பண நிலுவை என்பது, யானை பசிக்கு சோளப்பொரி தான். இதில், மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிலுவை என்பது சுமார் பத்து சதவிகித தேவை தான். மீதி ??? பழி போட்டாலும், பொருந்த போடவேண்டும். இனி தமிழக அரசு, நிதி சுமையிலிருந்து தப்பிப்பது என்பது, தம்பிரான் புண்ணியம் தான். காலம் கடந்துவிட்டது. உண்மையை பொதுமக்களிடம் ஒப்புக்கொண்டு, நிர்வாக மற்றும் மேலாண்மை சீர்திருத்தத்தை கொண்டுவருவதே சரி. தலைக்குமேல் தண்ணீர் போனால், ஜான் என்ன மொழம் என்ன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X