புதுடில்லி : கம்ப்யூட்டர் மென்பொருள் மற்றும் வன்பொருள் துறையில் அன்னிய நேரடி முதலீடு, கடந்த நிதியாண்டில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை அறிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டில் மட்டும் 1.91 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அன்னிய நேரடி முதலீடு வந்துள்ளது. இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டில் 55 ஆயிரத்து 991 கோடி ரூபாய் அளவுக்கே வந்து உள்ளது.கொரோனா பரவல் காரணமாக வணிகங்கள் டிஜிட்டல்மயமாவது அதிகரித்த காரணத்தால் தொழில்நுட்ப பிரிவில் அன்னிய முதலீடு அதிகரித்து உள்ளது. இத்தகைய வணிக டிஜிட்டல்மயமாக்கும் போக்கு, இன்னும் அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மின்னணு வர்த்தக நிறுவனங்கள் அதிகளவு முதலீடுகளை ஈர்ப்பதாக இருக்கின்றன.

வீட்டிலிருந்தே பணிபுரிவது, ஆன்லைன் வாயிலான கற்றல், காணொலி வாயிலான ஆரோக்கிய பாதுகாப்பு ஆகியவற்றாலும் தொழில்நுட்ப பிரிவில் முதலீடுகள் அதிகரித்து உள்ளன. இருப்பினும், சேவைகள் துறையில் அன்னிய நேரடி முதலீடு கடந்த நிதியாண்டில் சரிவைக் கண்டுள்ளது. இதே போல், கட்டுமான துறை, வாகன தயாரிப்பு துறை, ஓட்டல் மற்றும் சுற்றுலா தொலை தொடர்பு துறைகளிலும் சரிவு ஏற்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE