பால் பதவிக்கு உடன்பிறப்புகள் துண்டு | Dinamalar

'பால் பதவிக்கு' உடன்பிறப்புகள் 'துண்டு'

Added : ஜூன் 01, 2021
Share
வீட்டுத்திண்ணையில் அமர்ந்து, அன்றைய நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்த சித்ரா, ''மித்து, சி.எம்., விசிட்டுக்கு போயிருந்தியே, ஏதாச்சும் விசேஷமா தகவல் இருக்கா,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.''அக்கா, நம்ம மாவட்டத்துல, தி.மு.க., ஒரு தொகுதியில கூட ஜெயிக்கலை. இருந்தாலும், முதல்வரான பிறகு, ரெண்டு தடவை ஸ்டாலின் வந்துட்டு போயிருக்காரு. தேவைன்னா, ரெண்டு நாள் கழிச்சு மறுபடியும்
  'பால் பதவிக்கு' உடன்பிறப்புகள் 'துண்டு'

வீட்டுத்திண்ணையில் அமர்ந்து, அன்றைய நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்த சித்ரா, ''மித்து, சி.எம்., விசிட்டுக்கு போயிருந்தியே, ஏதாச்சும் விசேஷமா தகவல் இருக்கா,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.''அக்கா, நம்ம மாவட்டத்துல, தி.மு.க., ஒரு தொகுதியில கூட ஜெயிக்கலை. இருந்தாலும், முதல்வரான பிறகு, ரெண்டு தடவை ஸ்டாலின் வந்துட்டு போயிருக்காரு. தேவைன்னா, ரெண்டு நாள் கழிச்சு மறுபடியும் வருவேன்னு சொல்லியிருக்காரு,''''அவருக்கு, நம்மூர் ஜனங்க மேல அதிருப்தி இல்லையாம். உள்ளூர் கட்சி நிர்வாகிகள் உள்ளடி வேலை செஞ்சுதான், தோற்கடிக்க வச்சிருக்காங்கன்னு உறுதியா நம்புறாராம். அதனால, கட்சி நிர்வாகிகளை சந்திக்கறதையே தவிர்க்கிறாராம்,''''இருந்தாலும், பசையுள்ள பதவியை கைப்பத்துறதுக்கு, உடன்பிறப்புகள் காய் நகர்த்திட்டு இருக்காங்களாமே,''''ஆமாக்கா, இறந்து போன அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி.ராஜூ பதவியை கைப்பத்துறதுக்கு, தி.மு.க., பிரமுகர்கள் பலரும், கட்சி தலைமையில் முட்டி மோதுறாங்க. இதுல, நிர்வாக ரீதியா சிக்கல் இருக்குதாம்,''''அதாவது, இயக்குனர் பதவியில இருக்கறவங்க ஓட்டுப்போட்டு, புது தலைவரை தேர்ந்தெடுக்கணுமாம். இயக்குனரா இருக்கறவங்க இலைக்கட்சிக்காரங்க. அ.தி.மு.க., பிரமுகரையே தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்படுமாம். ஆவின் நிர்வாக சபையை கலைச்சிட்டு, மறுபடியும் தேர்தல் நடத்தி, தி.மு.க.,வினருக்கு பதவி கொடுக்கணும்னு உடன்பிறப்புகள் சொல்லிக்கிட்டு இருக்காங்களாம்,''''இ.எஸ்.ஐ., ஆஸ்பத்திரியில, கட்சிக்காரங்களுக்கும், ஜனங்களுக்கும் வாக்குவாதம் நடந்ததா சொன்னாங்களே,''''அதுவா, 'பி.பி.இ., கிட்' போட்டுக்கிட்டு, கொரோனா வார்டுக்குள் போயி, ஆய்வு செஞ்சுட்டு வந்த ஸ்டாலினை, அந்த ஏரியா மக்கள் சந்திச்சு, 'எங்க, பகுதியில தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை எடுக்காம இருக்காங்க'ன்னு மனு கொடுத்தாங்க.''முதல்வர் கிளம்பியதும், அந்த ஏரியாவை சேர்ந்த உடன்பிறப்புகள், ஜனங்கள்ட்ட சண்டைக்கு போயிட்டாங்க. 'இந்த தொகுதிக்கு அ.தி.மு.க.,காரர் தானே எம்.எல்.ஏ., அவர்ட்ட போயி, நீங்க மனு கொடுங்க. இங்க எதுக்கு வந்தீங்க'ன்னு, வாக்குவாதம் செஞ்சாங்க,''''கட்சிக்காரங்க மிரட்டலுக்கு பயப்படாத ஜனங்க, 'அவரிட்டயும் மனு கொடுத்திருக்கோம். நாங்க, தி.மு.க.,வுக்கு தான் ஓட்டுப்போட்டோம். முதல்வரை சந்திச்சு மனு கொடுக்கக் கூடாதா' என கேள்வி எழுப்பியதும், உடன்பிறப்புகள் அமைதியாகிட்டாங்க,''''முதல்வர் விசிட்டை பத்தி, செய்தி துறையினர், தப்பான தகவல் பரப்பி விட்டுட்டாங்களாமே,''''ஆமாக்கா, 'பி.பி.இ., கிட்' அணிந்து ஏற்கனவே பல முதல்வர்கள், கொரோனா வார்டுக்குள் போயி, நோயாளிகளிடம் நலம் விசாரிச்சிருக்காங்க. ஆனா, தமிழக முதல்வர் மட்டுமே, இந்தியாவிலேயே முதல்முறையாக பி.பி.இ., கிட் அணிந்து, ஆய்வு செஞ்சதா தகவல் பரப்பி விட்டுட்டாங்க,''''இலைக்கட்சிக்காரங்க என்ன தான் செய்றாங்க. ரொம்பவே 'சைலன்ட்' ஆகிட்டாங்களே,'' என, 'ரூட்' மாறினாள் சித்ரா.''கலெக்டரை சந்திச்சு மனு கொடுத்துட்டு, பேட்டி கொடுத்தப்போ, தி.மு.க., அரசை பாராட்டிப் பேசுனாங்க. இதையெல்லாம் பார்க்கும்போது, 'ஏதோ' நடக்குதுன்னு தோணுது,''''அதெல்லாம் சரி, ரெண்டு தடவை சி.எம்., வந்தாருல்ல. மரியாதை நிமித்தமா, நேர்ல பார்த்து, மனு கொடுத்திருக்கலாமே,''''அக்கா, முதல் தடவை சி.எம்., வந்தப்போ, பா.ஜ., - எம்.எல்.ஏ., அவரை சந்திச்சு மனு கொடுத்தாங்க. அப்போ, 'எல்லாம் எங்களுக்குத் தெரியும்; நாங்க பார்த்துக்கிறோம்'னு, பதில் சொன்னாராம்,''''அப்செட் ஆன எம்.எல்.ஏ., வெளிக்காட்டிக்காம, அரசு விருந்தினர் மாளிகையில இருந்து, உடனே கெளம்பிட்டாங்க. அதுக்கப்புறம்தான், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கிறதுல தமிழக அரசு எந்தெந்த விதத்துல, கோட்டை விடுதுன்னு பட்டியல் போட்டு, 'ஸ்டேட்மென்ட்' விட ஆரம்பிச்சாங்க,''''பா.ஜ., தரப்பு அரசியல் செய்றதா நினைச்ச சி.எம்., 'இந்த நேரத்துல அரசியல் பேச விரும்பலை'ன்னு சொல்லிட்டு, கோவையை புறக்கணிக்கலைன்னு, 'பிரஸ் மீட்'டுல, பதில் சொல்லி இருக்காரு,''''இருந்தாலும், மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு, இன்னும் சுணக்கமாதானே இருக்கு,'' ''ஆமாக்கா, அதெல்லாம் அரசாங்கத்துக்கு தெரியணுமே. இப்பதான், சுகாதாரத்துறை துணை இயக்குனரை மாத்தியிருக்காங்க. இணை இயக்குனரை விடுவிச்சிட்டு, இன்னொரு அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்திருக்காங்க,''குறுக்கிட்ட சித்ரா, ''மித்து, சுகாதாரத்துறை அதிகாரியா கூடுதல் பொறுப்பு கொடுத்திருக்கிற, பொள்ளாச்சி டாக்டருக்கு தகுதியே இல்லையாம். அவர் மேலயும் ஏகப்பட்ட புகார் இருக்குதாம். ஆஸ்பத்திரி பக்கம் வர்றதே இல்லைன்னு, அவர் மேல எக்கச்சக்கமா புகார் போனதும், வேற ஊருக்கு மாத்தியிருந்தாங்களாம். அரசியல் செல்வாக்குல, இப்போ, உயர்ந்த பொறுப்பு கொடுத்திருக்காங்க. ஹெல்த் டிபார்ட்மென்ட்காரங்க புலம்பிட்டு இருக்காங்க,'' என்றபடி, 'டிவி'யை 'ஆன் செய்தாள்.கொரோனா உயிரிழப்புகளை, சில ஊர்களில் மறைப்பதாக, செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.அதைக்கேட்ட மித்ரா, ''அக்கா, நம்மூர்ல உயிரிழப்பு குறைஞ்சிடுச்சா,'' என, கேட்டாள்.''மூணுல ஒரு பங்கு குறைஞ்சிருக்காம். அதாவது, போன வாரம், ஒரு நாளைக்கு, 125 பேர் வரை இறந்தாங்களாம்; இப்போ, 75 உயிரிழப்பு ஏற்படுதாம். ஒரு உயிர் கூட பலியாகாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கணும். ஆனா, அரசு மருத்துவமனைக்குள்ள என்ன நடக்குதுன்னு, ஹெல்த் அதிகாரிங்க, எட்டி கூட பார்க்க மாட்டேங்கிறாங்க,''''அக்கா, ஹெல்த் மினிஸ்டரும், ஹெல்த் செக்ரட்டரியும் கூட, நம்மூருக்கு வந்தாங்க. ஜி.எச்.,க்கு போகாம, 'எஸ்கேப்' ஆயிட்டாங்களே. கவர்மென்ட் ஹாஸ்பிடலுக்குள்ள சுத்தி வந்திருந்தாங்கன்னா, ஏழை எளிய ஜனங்களுக்கு, இன்னும் எவ்ளோ வசதி கிடைச்சிருக்கும்,'' என, ஆதங்கப்பட்டாள் மித்ரா.''மித்து, ஒன்னோட ஆதங்கம் புரியுது. இனி, ஆஸ்பத்திரிக்குள்ள போயி, ஆக்சன் எடுத்தாலும் எடுப்பாங்க. பொறுமையா இரு,'' என்ற சித்ரா, ''40 போலீஸ்காரங்களுக்கு 'ஏ' சிம்டம்ஸ் இருந்தும், பாதுகாப்புக்கு போகச் சொன்னதா கேள்விப்பட்டேனே,'' என, வம்புக்கு இழுத்தாள்.''ஆமாக்கா, உண்மைதான்! முதல்வருக்கு பாதுகாப்பு கொடுக்கறதுக்கு, 50 போலீஸ்காரங்களை தேர்வு செஞ்சு, கொரோனா பரிசோதனை செஞ்சாங்களாம். அதுல, 40 பேருக்கு 'ஏ' சிம்டம்ஸ் இருந்துச்சாம். இருந்தாலும், முதல்வர் பக்கத்துல போக வேண்டாம்; துாரமாவே நில்லுங்கன்னு சொல்லி, பாதுகாப்புக்கு அனுப்புனாங்களாம்,''''அடக்கொடுமையே,'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள் சித்ரா.பின்தொடர்ந்து சென்ற மித்ரா, ''அக்கா, ஊரடங்கு சமயத்துல, மதுபான விற்பனை இன்னும் குறையலையாம். போன் செய்தால் போதுமாம்; டோர் டெலிவரி செய்றாங்களாம்,'' என்றாள்.''என்னப்பா, இப்படிச் சொல்றே. எல்லா கடையும் பூட்டிக் கெடக்குதே,''''அக்கா, கடை ஊழியர்கள் பலரும் சரக்குகளை பதுக்கி வச்சிருக்காங்களாம். மதுக்கரை மார்க்கெட், மேட்டாங்காடு, துடியலுார், தடாகம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில, மதுபானம் சேல்ஸ் சக்கைப்போடு போடுது. ஒரு குவார்ட்டர் பாட்டில், 700 ரூபாய்க்கு விக்கிறாங்களாம்,''''அவ்வளவு பணம் கொடுத்து, அதை வாங்கித் தான் குடிக்கணுமா, என்ன,'' என, திட்டியபடி, பில்டர் காபி கோப்பையை நீட்டினாள் சித்ரா.அதை வாங்கி உறிஞ்சிய மித்ரா, ''நம்மூர்ல வேலை பார்த்த போலீஸ் உயரதிகாரிகள் பலரையும் வெளியூருக்கு மாத்திட்டாங்களே, விசாரிச்சீங்களா,'' என, சப்ஜெக்ட் மாறினாள்.''அதுவா, நம்ம மாவட்டத்துல வேலை பார்த்த பெரும்பாலான ஆபீசர்ஸ், இலைக்கட்சியில அதிகாரத்துல இருந்தவங்களோட விசுவாசிகளா இருந்தாங்க. இலைக்கட்சி வி.ஐ.பி., தரப்புல செஞ்ச கட்டப்பஞ்சாயத்துக்கு, துணை போயிட்டு இருந்தாங்க,''''கொரோனா பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தியதும், சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கப் போறதா, போலீஸ்காரங்க பேசிக்கிறாங்க. அதுக்காக, போலீஸ் துறையில இருக்கற ஒவ்வொரு பிரிவு அதிகாரியையும் மாத்திட்டு, தங்களுக்கு வேண்டப்பட்டவங்களை நியமிச்சிட்டு இருக்காங்களாம்,''''அதுல, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிக்கு பணியிடம் ஒதுக்காம, 'வெயிட்டிங் லிஸ்ட்'டுல வச்சிருக்காங்களே,''''ஆமாப்பா, அவரை, நேர்மையானவருன்னு சொல்வாங்க. இருந்தாலும், உள்ளாட்சி நிர்வாகத்துல நடந்த லஞ்ச லாவண்யத்தை கண்டுக்கவே இல்லையாம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி, கார்ப்பரேஷன் கிழக்கு மண்டலத்துல, வரி வசூல்ல முறைகேடு நடந்துச்சு,''''அதைப்பத்தி அந்த அதிகாரி விசாரிச்சதுக்கு அப்புறம், முறைகேட்டை கண்டுபிடிச்ச அலுவலர்களையே மாத்திட்டாங்கன்னா, அவரு யாருக்கு விசுவாசமா இருந்துருக்காருன்னு பார்த்துக்கோங்களேன். அவரை வச்சுக்கிட்டு, உள்ளாட்சித்துறையில நடக்கிற லஞ்ச லாவண்யத்தை தடுக்க முடியுமா, என்ன,'' என்றபடி, 'வாக்கிங்' செல்ல, மொட்டை மாடிக்குச் சென்றாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X