பெற்றோரை இழந்த 79 பிள்ளைகள் பாதுகாக்க குழு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெற்றோரை இழந்த 79 பிள்ளைகள் பாதுகாக்க குழு

Updated : ஜூன் 01, 2021 | Added : ஜூன் 01, 2021
Share
காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த, 79 பிள்ளைகளை பாதுகாக்க, கலெக்டர் தலைமையில், குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.நாடு முழுதும், கொரோனா பெருந்தொற்றால், ஏராளமானோர் சிகிச்சை பலனின்றி இறந்து வருகின்றனர். அவ்வாறு இறக்கும் நபர்களின் பிள்ளைகள், பெற்றோரின்றி மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.பெற்றோரில் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்த
 பெற்றோரை இழந்த 79 பிள்ளைகள் பாதுகாக்க குழு

காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த, 79 பிள்ளைகளை பாதுகாக்க, கலெக்டர் தலைமையில், குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுதும், கொரோனா பெருந்தொற்றால், ஏராளமானோர் சிகிச்சை பலனின்றி இறந்து வருகின்றனர். அவ்வாறு இறக்கும் நபர்களின் பிள்ளைகள், பெற்றோரின்றி மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.பெற்றோரில் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்த பிள்ளைகளின் நலன் கருதி, மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்துள்ளது. மத்திய அரசு, 10 லட்சம் ரூபாயும், மாநில அரசு, 5 லட்சம் ரூபாயும் வழங்க முன்வந்துள்ளது.

மேலும், சுகாதார காப்பீடு, காப்பகத்தில் தங்க வசதி, பட்டப்படிப்பு வரையிலான இலவச கல்வி என, பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெற்றோரை இழந்த குழந்தைகளை காக்க, கலெக்டர் மகேஸ்வரி தலைமையில், குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இதில், உறுப்பினர் செயலராக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன் உள்ளார். உறுப்பினர்களாக, போலீஸ் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயராமன், மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா, சுகாதாரத் துறை இணை இயக்குனர் ஜீவா உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு அனைத்து நலத்திட்ட உதவிகளும் சென்றடைகிறதா என, இந்த குழு கண்காணிக்கும். மேலும், அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்ய உள்ளது.இதுவரை, காஞ்சிபுரம் மாவட்டத்தில், தாய், தந்தை என, இருவரையும் இழந்த, ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பிள்ளைகள் கண்டறியப்பட்டுள்ளனர். அதேபோல், தாய் அல்லது தந்தை என, பெற்றோரில் ஒருவரை இழந்ததாக, 46 குடும்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த, 46 குடும்பங்களில், 77 பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

தற்போது வரை கண்டறியப்பட்டுள்ள இந்த, 79 பிள்ளைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும், நிதியுதவியும், கல்வி செலவுகளை ஏற்பதற்கும், பிள்ளைகளை அந்த துயரத்திலிருந்து மீட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வரவும், அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். இது குறித்த ஆய்வு கூட்டமும், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயசுதா தலைமையில் நேற்று நடந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X