கோவை: ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் நடந்த விவாதம் தொடர்பாக, தமிழக நிதியமைச்சர் தியாகராஜனை, பா.ஜ.,வின் வானதி சீனிவாசன், டுவிட்டரில் விமர்சிக்க, இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் முற்றியுள்ளது.
ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், கோவா மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் மவின் கோடினோ, சிறிய மாநிலங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் எதிர்ப்பு தெரிவித்தார்.
'மதுரை மாவட்டத்தை விட மக்கள் தொகையில் சிறிய மாநிலம் எனக் கூறி, கோவாவை அவமதித்து விட்டார். எனவே, தியாகராஜன் மன்னிப்பு கோர வேண்டும்' என, கோடினோ குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டு, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், 'நிதியமைச்சர் தியாகராஜன் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் நடந்து கொண்ட விதம், ஜனநாயகத்தை அவமானப்படுத்துவதாகும். நம் மாநிலத்து க்கு இழுக்கு தேடி தந்துள்ளார். கோவா அமைச்சரை விமர்சிப்பதால் தமிழகத்துக்கு எவ்வித பயனும் இல்லை' என, டுவிட்டரில் பதிவு செய்தார்.

இந்தப் பதிவில், அமைச்சர் தியாகராஜனையும், 'டேக்' செய்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தியாகராஜன், 'உங்கள் பொய்களுடன் என்னை, 'டேக்' செய்வதை நிறுத்துங்கள். மாற்றத்துக்கான நிஜமான வேலையை செய்யுங்கள். ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் யாராவது, யாரையாவது அவமானப் படுத்தி விட முடியும் என நினைக்கிறீர்களா? நீங்கள் பிறவிப் பொய்யரா அல்லது ஐ.க்யூ., குறைவா?' என, காட்டமாக பதில் அளித்துள்ளார்.
மேலும், வானதியின் டுவிட்டர் கணக்கை, அமைச்சர் 'பிளாக்' செய்து விட்டார். இதை விமர்சித்துள்ள வானதி சீனிவாசன், 'அமைச்சர் விமர்சனங்களைத் தாங்க முடியாமல், அற்ப விஷயங்களைச் செய்கிறார்.நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் குறிப்பிடுங்கள். ஆனால் உண்மையை மாற்ற முடியாது' என, பதிவிட்டுள்ளார்.